Published:Updated:

"மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் சிரிப்பைத் தருகிறது" - விரக்தியில் சிரிக்கும் விவசாயிகள்!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க சட்டத் திருத்தம் மற்றும் அவசரச் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. இந்தச் சட்டங்களின் சாதக பாதகங்கள் குறித்துப் பேசும் விவசாயிகள், "இந்தச் சட்டங்கள் எங்களுக்குச் சிரிப்பைத்தான் தருகின்றன...'' என்று விரக்தியாக சொல்கின்றனர்.

`பருப்பு, எண்ணெய், உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் இனி அத்தியாவசியப் பொருள்கள் இல்லை' என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு மத்திய பா.ஜ.க அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, கொரோனா கொடூரங்களையும் தாண்டிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

உணவுப் பொருள் பதுக்கல் மற்றும் விலையேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு, 65 ஆண்டுக்காலமாக நடைமுறையில் இருந்துவந்தது அத்தியாவசிய பொருள்கள் சட்டம். ஆனால், இந்தச் சட்டம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்குத் தடையாக இருப்பதாகக் கூறி தற்போது திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேளாண் பொருள்கள் தொடர்பான தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்யும் நோக்கில், `வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் – 2020', `உழவர்கள் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம்' என `ஒரே நாடு; ஒரே சந்தை' திட்டத்துக்கான இரண்டு அவசரச் சட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

நரேந்திரசிங் தோமர்
நரேந்திரசிங் தோமர்

கொரோனா நிவாரணமாக மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார திட்டங்களில் இந்தச் சட்டத் திருத்தமும் அவசரச் சட்டங்களும் அடங்கும் எனவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். மேலும், "போர்ச் சூழல் மற்றும் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலத்தில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்', உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இக்காலகட்டத்தில் அவசியமற்றது; எனவேதான் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அவசியமாகியிருக்கிறது. மேலும், `ஒரே நாடு; ஒரே சந்தை' திட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களை அதிக லாபத்தில் விற்றுப் பலனடையவும் வேளாண் பொருள்கள் தொடர்பான வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் அவசரச் சட்டங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது'' என்று விவரித்துள்ளார் அமைச்சர் நரேந்திரசிங் தோமர்.

மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. `இது பெரு முதலாளிகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் இந்திய வேளாண் சந்தைக்குள் அனுமதிக்கும் மறைமுகத் தந்திரம்' என்று கொதிக்கிறார்கள். விவசாயிகள் மத்தியில் இந்தச் சட்டத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி நடராஜனிடம் பேசினோம்,

"அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1950-ல் கொண்டுவரப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கிவைத்துக்கொண்டு, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் கொள்ளை லாபத்துக்கு வியாபாரிகள் விற்றால் அது நாட்டு மக்களைப் பாதிக்கும். எனவேதான், அத்தியாவசியப் பொருள்கள் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து, பதுக்கல் செய்யும் வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தனர். ஆக இதற்கு ஒரு சட்டம் அவசியத் தேவையாகவே இருந்துவந்தது. ஆனால், இப்போது அத்தியாவசியப் பொருள்களிலிருந்து பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பொருள்களுக்கு விலக்களித்ததோடு, இந்த சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். இதன்மூலம் உணவுப் பொருள்கள் பதுக்கல் என்பதை சட்டபூர்வமாகவே மாற்றிவிட்டார்கள்.

விவசாயிகள்
விவசாயிகள்

அடுத்து, `விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கூடுதல் விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கே விற்றுக்கொள்ளும் உரிமையை இந்தச் சட்டம் தருகிறது' என்று சொல்கிறது மத்திய அரசு. இதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. எந்த விவசாயியானாலும், `நல்ல லாபத்தில் யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்பது' என்பதைத்தானே ஆண்டாண்டுகாலமாக செய்துவருகிறார்கள். இதைச் சொல்வதற்கென்று தனியாக ஒரு சட்டம் தேவையா?

அப்படியென்றால், இந்தச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்படுகிறது. அரசு ஒரு பொருளுக்கு அடிப்படை விலையாக 1,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்கிறது என்றால், அம்பானி போன்ற ஒரு பெரு முதலாளி 1,600 ரூபாய் விலையில் அந்தப் பொருளை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார். அவ்வளவுதான். ஆக, குறிப்பிட்ட பெரு முதலாளிகள் சர்வதேச அளவில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள வசதியாக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருகிறார்களே தவிர, விவசாயிக்கு இதனால் எந்த லாபமும் வரப்போவது இல்லை.

`வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்த கலவைக்கரைசல்!' -  இயற்கை விவசாயியின் தீர்வு

உண்மையிலேயே விவசாயி நலன் மீது அக்கறை கொண்டால், விதை, உரம், இடுபொருள்கள் உள்ளிட்ட விவசாயத்தின் முதல் கட்டத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அரசு உதவ வேண்டும். அடுத்து பயிர் செய்து அறுவடை வரையிலான வேலைகளை விவசாயி முழு பொறுப்பெடுத்து செய்து முடித்த பிறகு, விளைவித்த பொருள்களை நல்ல விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அதாவது, எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான `தேசிய உழவர் ஆணையம்' பரிந்துரைத்தபடி, வேளாண் உற்பத்திப் பொருள்களின் உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தது 50 விழுக்காடு லாபம் வருமாறு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆக்கபூர்வமான இந்த விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு, விவசாயி எங்கு சென்றுவேண்டுமானாலும் நல்ல லாபத்துக்கு விற்றுக்கொள்ளலாம் என்று சொல்வதே திட்டமிட்ட ஏமாற்றுவேலை.

கடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபடுபவன், விளைவித்த பொருளை கிட்டங்கியில் சேமித்துவைத்து நல்ல விலை வரும்வரை காத்திருந்து விற்பதென்பது சாத்தியம் இல்லாதது. விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயத்துடன் கொள்முதல் செய்து கிட்டங்கிகளில் சேமித்துவைத்து, அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் உணவுப் பொருள்களை விற்பதற்கான வழிமுறைகளை ஓர் அரசுதான் செய்ய வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்!'' என்கிறார் உறுதியாக.

சாமி நடராஜன் - வெங்கடேஷ் ஆத்ரேயா
சாமி நடராஜன் - வெங்கடேஷ் ஆத்ரேயா

பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, மத்திய அரசின் வேளாண் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறபோது, "உணவுக்கே தட்டுப்பாடு என்ற நிலையில் நாடு இருந்தபோது, கொண்டுவரப்பட்டது `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்'. இப்போது உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ள காலகட்டம். எனவே, இந்தச் சட்டம் இப்போது பொருந்தாது என்று கூறித்தான் சட்டத் திருத்தத்தையும் அவசரச் சட்டங்களையும் கொண்டுவருகிறது மத்திய அரசு. உணவுப் பொருள்கள் மிகுதியாக இருக்கிறது என்றால், நாட்டு மக்கள் அனைவரும் வயிறார உண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. எனவே, உற்பத்தியாகும் உணவுப் பொருள்களும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது. இதுதான் உண்மை நிலை.

அடுத்ததாக, பருவநிலை மாற்றம், இந்தியச் சூழ்நிலை இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்த்தால், உணவுப் பற்றாக்குறை இனிவரும் காலங்களில் இருக்கவே இருக்காது என்று யாராலும் உறுதியளிக்க முடியாது. எனவே, இப்போது கொண்டுவரப்படும் அவசரச் சட்டங்கள் என்பது பின்வரும் நாள்களில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். அதாவது, உணவுப் பொருள்களை சேமித்துவைத்து நல்ல விலைக்கு விற்பதை ஊக்கப்படுத்துகிறது இந்தச் சட்டங்கள். அப்படியென்றால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் பொருள்களைப் பதுக்கல் செய்து லாபம் சம்பாதிக்கும் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு பெருவணிகர்களுக்குத்தான் இது சாதகமான அம்சமாக இருக்கும்.

மற்றபடி இந்திய விவசாயிகள் அனைவருமே சிறு, குறு விவசாயிகள்தான். இவர்கள் தங்கள் விளைபொருள்களைக் கிடங்குகளில் சேமித்துவைத்து நல்ல விலையை எதிர்பார்த்துக் காத்திருந்து விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு வளமானவர்கள் இல்லை. மேலும், அத்தியாவசியப் பொருள்களுக்கான கட்டுப்பாடுகளை எல்லாம் நீக்கி, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டால், மும்பை, டெல்லி போன்ற பொருளாதாரத்தில் மேம்பட்ட நகரங்களுக்குத்தான் இந்த விளைபொருள்கள் அனைத்தும் செல்லும். மாறாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புறங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடுதான் ஏற்படும்.

வயற்காடு
வயற்காடு
மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குப் பலன் தருமா?

கொரோனா காலகட்ட நிவாரணம் என்று 20 லட்சம் கோடி ரூபாயை அறிவிப்பவர்கள், முழுக்க முழுக்க நிவாரணம் பற்றிப் பேசாமல், அரசின் புதிய தாராள மயக் கொள்கைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயத்துக்கு தேவையான உதவிகளைச் செய்து, விளைவிக்கப்பட்ட பொருள்களைக் கொள்முதல் செய்வதுதான் விவசாயிகளுக்கான நலத்திட்டமாக இருக்கமுடியுமே தவிர... `ஒரே தேசம்; ஒரே சந்தை' என்று முழுக்க முழுக்க சந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது பெரு வணிகர்களுக்கான திட்ட வழிமுறைகளாகத்தான் இருக்கும்.

இந்தக் கொரோனா காலகட்டத்தில், இப்படியான அவசரச் சட்டங்களை மத்திய அரசு இயற்றுவதென்பது, கொரோனா பெருந்தொற்றில் தங்களின் தோல்வியை மறைப்பதற்கான அரசியல் யுக்தியாகவும் அதேசமயம் பெரு நிறுவனங்களை உள்நாட்டுச் சந்தைக்குள் வரவழைக்கும் தந்திரமுமாகவே இருக்கிறது'' என்கிறார்.

இதற்கிடையே `தமிழ்த் தேசிய பேரியக்க'மும் மத்திய அரசின் வேளாண் திட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதுகுறித்துப் பேசுகிற இவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர், கி.வெங்கட்ராமன், "கடன் வாங்கி சாகுபடி செய்யும் உழவர்கள், வணிகக் குழுமங்கள் சொல்கிற விலைக்குத் தங்கள் விளை பொருள்களை விற்கும் நிர்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். எனவே வேளாண் விளைபொருள்களுக்கு அரசே, அடிப்படை ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்தால்தான் உழவர்கள் முன்னேற முடியும். ஆனால், மத்திய பா.ஜ.க அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகவே இருக்கின்றன. எனவே, உழவர்களை முன்னேற்றுவதற்கான சட்டங்கள் என்று சொல்லி, அவர்களை ஒட்டுமொத்தமாக வேளாண்மைத் துறையிலிருந்து வெளியேற்றுகிற சட்டங்கள்தான் இவை.

வெங்கட்ராமன்
வெங்கட்ராமன்

அடுத்ததாக, இப்படி வேளாண்மைச் சந்தையை முழுவதுமாக தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட பிறகு, மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் நியாய விலைக் கடைகளின் வழியே விநியோகம் செய்யப்படுவதும் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிடும். எளிய மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசின் இந்தச் சட்ட விளையாட்டுகளுக்குப் போட்டியாக, தமிழ்நாடு அரசும் `ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்', `தமிழ்நாடு வேளாண் விளை பொருள்கள் விற்பனை ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டம்' என புதிது புதிதாக அறிவிக்கிறார்கள். இரண்டு அரசுகளுமே இந்தச் சட்ட விளையாட்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் நாட்டு மக்களுக்கான நல்ல செய்தியாக இருக்கும்'' என்கிறார் தெளிவாக.

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் நடவடிக்கைகள் குறித்த விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

"விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், விவசாயத்தை மறந்து வசதி, வாய்ப்புகளைத் தேடி மக்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. காரணம் கிராமப்புற மக்கள் தங்கள் விவசாய உற்பத்திப் பொருள்களை சேமித்து, பாதுகாத்து வைப்பதற்கான அடிப்படைத் தேவை எதையும் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்துகொடுக்கவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகால மத்திய பா.ஜ.க அரசு, வேளாண் உற்பத்திப் பொருள்களை சேமிக்கும் கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கிராமப்புறத்தில் செய்துகொடுத்திருக்கிறது. மேலும், விளைபொருள்களை குறைந்த நேரத்தில் அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலாக சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து 76,000 கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு கிராமப்புற சாலைகளை அமைத்திருக்கிறோம். நெல்லூரில் விளையக்கூடிய காய்கறிகள் இரண்டரை மணி நேரத்தில் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

கிராமப்புறங்களை நகர்மயமாக்குவோம் என்றால், வெறுமனே வசதிகளை மட்டுமே அதிகரிப்பது அல்ல... மருத்துவமனை, பள்ளி, கல்லூரி என நகர்ப்புறத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும் கிராமப்புறங்களுக்குக் கொண்டுசெல்வோம் என்பதுதான். மேலும் குளிர் பதனக்கிடங்கு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை கிராமப்புறத்தில் உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு நிலச்சீர்திருத்த சட்டம்' அவசியமானது. இதிலும்கூட எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டனர். ஆனாலும் இந்தச் சட்டத்தைக் கையிலெடுத்து சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களும் உண்டு. அடுத்ததாக, எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்துகொண்டே விவசாய விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்துகொள்ளும் வசதியாக இ-மின்னணு திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசுதான் அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளாகவே தொடர்ந்து இ.மார்க்கெட் பற்றி எடுத்துச்சொல்லி வருகிறோம். ஆனாலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் இ.மார்க்கெட்டில் இணையவில்லை.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்மூலம் இரு மடங்கு அளவிலான கொள்முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 79,000 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு ஒரு லட்சத்து 60 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளபடி காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பெற்று பலடையும் வகையில் செய்திருக்கிறோம். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பலனடைந்திருப்பது தமிழ்நாட்டு விவசாயிகள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள்
விவசாயிகள்
நீர்மின் திட்டத்துக்காக டிபாங் பள்ளத்தாக்கை அழிக்கும் அரசு... இந்தியாவெங்கும் வலுக்கும் எதிர்ப்பு!

இதன்மூலம் 50 விழுக்காடு பாதிப்புக்குத்தான் இழப்பீடு என்ற நிலையை மாற்றி, 33 விழுக்காட்டு பாதிப்புக்கே இழப்பீடு வழங்கும்வகையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை 1,200 ரூபாய். ஆனால், இன்றைக்கு அது கிட்டதட்ட 2,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மேலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை, கிசான் தொலைக்காட்சி, உதவித் தொகை, மண் பரிசோதனை, நுண்நீர் பாசனம் என ஒவ்வொரு சீர்திருத்தங்களையும் மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. விவசாயிகளுக்கென வருடம்தோறும் 10 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை அளித்து வருகிறோம். இப்படி விவசாயிகளுக்கு கடந்த 60 ஆண்டுகளாக செய்யப்படாத பல்வேறு நலத்திட்டங்களையும் வெறும் 6 ஆண்டுகளில் செய்திருப்பது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான்'' என அடித்துச் சொல்கிறார் நாராயணன் திருப்பதி.

அடுத்த கட்டுரைக்கு