Published:Updated:

`புதர்மண்டிக் கிடக்கும் எம்.ஜி.ஆரின் கனவு!'- சண்முகா நதியால் கலங்கும் தேனி கிராமங்கள்

சண்முகா நதி அணைக் கால்வாய் புதர்மண்டிக் கிடப்பதால், விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சண்முகா நதி அணை
சண்முகா நதி அணை

தேனி மாவட்டம் மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சண்முகா நதி அணை. இதிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், கால்வாய்கள் முறையாகப் பராமரிக்காத காரணத்தாலும் புதர்மண்டிக் கிடப்பதாலும் விவசாயிகளுக்குச் சென்று சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மேலும் விவரம் பெற ஓடைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் பேசினோம்.

சண்முகாநதி அணை
சண்முகாநதி அணை

``எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது இப்பகுதிக்கு அணை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். மேகமலை அடிவாரத்தில் அணை கட்டி, கால்வாய் மூலம் ஓடைப்பட்டி வரையிலான 18.3 கிலோமீட்டர் வரை தண்ணீர் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. ஓடைப்பட்டி கிராமம் சற்று மேடான இடத்தில் இருப்பதால் தண்ணீர் கொண்டுவருவது சிரமம் என எம்.ஜி.ஆரிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Vikatan

அதைக் கேட்ட எம்.ஜி.ஆர், கால்வாய் அமைப்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறினார். தொடர்ந்து அரசியல் சூழல் மாற இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2004-ம் ஆண்டு ரூ.14.70 கோடி மதிப்பீட்டில் மேகமலை அடிவாரப்பகுதியான சங்கிலிக்கரடி பகுதியில் சண்முகா நதி அணை கட்டப்பட்டது. அணையிலிருந்து ஓடைப்பட்டி வரை 13 கிராமங்கள் பயன்பெறும். இராயப்பன்பட்டி முதல் ஓடைப்பட்டிவரை சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும்.

கால்வாய்
கால்வாய்

கடந்த 5 ஆண்டுகளாக ஓடைப்பட்டிவரை செல்லும் இந்த கால்வாயை பொதுப்பணித்துறை முறையாகப் பராமரிக்காத காரணத்தால், தண்ணீர் அனைத்து கிராம நீர் நிலைகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவருகிறார்கள். சமீபத்தில் சண்முகா நதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் கலெக்டர். 50 நாள்களுக்கு 14.47 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், ஓடைப்பட்டி வந்து சேரவே இல்லை.

அதிகாரிகள் துணையோடு தண்ணீர் திறக்கும் கலெக்டர், இந்த தண்ணீர் முறையாகச் சென்று சேர்கிறதா என்று ஆய்வு செய்ய மறுக்கிறார். கடமைக்குத் தண்ணீர் திறக்கும் இச்செயல் இப்பகுதி விவசாயிகளைக் கோபமடையச் செய்துள்ளது. எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் இது. அ.தி.மு.க ஆட்சியிலேயே இதை புதர்மண்ட வைத்திருக்கிறார்கள்” என்றார் கொதிப்போடு.

சண்முகாநதி அணை
சண்முகாநதி அணை

இதுதொடர்பாக விளக்கம் பெற பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளரிடம் பேசினோம். ``ஓடைப்பட்டி வரையிலான கால்வாயில் சில இடங்களில் சிறிய பாலம் அமைக்கப்பட வேண்டும். பணிகள் பெரியது. நான், பொறுப்புப் பணியில்தான் இருக்கிறேன். என்னால் முடிந்த அளவு, விரைவாகப் பணியை துவங்கி முடிக்கப் பார்க்கிறேன்” என்றார்.

அடிக்கடி சேதமாகும் வைகை இணைப்புக் கால்வாய்!