Published:Updated:

`விவசாயிகள் வீட்டில் இருந்தே பொருள்களை விற்கலாம்!’ -மண்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த ம.பி அரசு

விவசாயிகள்
விவசாயிகள் ( ரா.ராம்குமார் )

மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான், ``வர்த்தகர்கள் ஒரே ஓர் உரிமம் பெறுவதன் மூலம் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். அல்லது பயிர்களைப் பயிர் செய்யும் நிலத்துக்கே சென்று பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

நாடு முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இன்று காலை முதல் மூன்றாம்கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 25 -ம் தேதி தொடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். விவசாயப் பணிகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் விலை இல்லாமலும் முறையான சரக்கு போக்குவரத்து வசதி இல்லாததாலும் விவசாயிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர்.

நெல் விற்பனை
நெல் விற்பனை

இந்த நிலையில், சிவராஜ் செளகான் தலைமையில் புதிதாக பதவியேற்றிருக்கும் மத்தியப் பிரதேச அரசு விவசாயப் பணிகளுக்கு உதவும் வகையில் மாநில மண்டி சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்திருக்கிறது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, விவசாயிகள் தங்களின் பொருள்களை விற்க மார்க்கெட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. வீட்டில் இருந்தபடியே பொருள்களைத் தனியார் வியாபாரிகளுக்கு விற்கலாம். தங்களுக்குத் தேவையான விலைக்கு விற்க வேண்டும் என்றால் மார்க்கெட்டுக்கு செல்லும் வாய்ப்பும் தொடரும்.

அதேபோன்று மாநில அரசு, மின் வர்த்தக முறையையும் அறிவித்திருக்கிறது. அதன் மூலம் விவசாயிகள் நாடு முழுவதும் தங்கள் பொருள்களுக்கான விலையை அறிந்துகொள்ள முடிவதுடன் நல்ல விலைக்கு விற்கவும் முடியும். நாடு முழுவதும் உள்ள விலையை அறிவதுடன் அதிக விலை கிடைக்கும் இடத்தில் பேரம் பேசி தங்களின் பொருள்களை விற்பனை செய்ய முடியும். இந்தப் புதிய சட்டத்திருத்தம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அதிக விலையை வழங்குவதால், இது ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும் என மாநில அரசு தெரிவிக்கிறது.

மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்

ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான், ``வர்த்தகர்கள் ஒரே ஓர் உரிமம் பெறுவதன் மூலம் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். அல்லது பயிர்களைப் பயிர் செய்யும் நிலத்துக்கே சென்று பெற்றுக்கொள்ள முடியும். ஓர் ஒற்றை உரிமம் மூலம் மாநிலம் முழுவதும் வர்த்தகர்கள் விவசாயிகளிடம் இருந்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். மண்டி திருத்தச்சட்டத்தில் பல புதிய விஷயங்கள் கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு