Published:Updated:

`பண்ணைக் கருவிகள் அனைத்தும் இனி ஒரே இடத்தில்!' - விவசாயிகளுக்கு உதவும் அரசு வேளாண் மையம்

டிராக்டர்கள்
டிராக்டர்கள்

இங்கே பள்ளி மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வருகை புரிந்து கருவிகளின் விவரங்கள் குறித்தும், அதற்கான மானிய விவரங்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் பெரிய பெரிய நிகழ்ச்சிகளெல்லாம் ரத்து செய்யப்பட்டு நடைபெறாமல் இருந்து வருகின்றன. அந்த வகையில் விவசாயத்துக்கு உதவும் பண்ணைக் கருவிகளை வேளாண் கண்காட்சிகளில் பார்த்து விசாரித்து அதன்பிறகு வாங்குவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண் கண்காட்சிகள் அதிக அளவில் நடைபெறவில்லை. இதனால், புதிய கருவிகளின் வருகை, அவை எங்கு கிடைக்கும் என்ற விவரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் இருந்து வந்தது.

வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்
வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்

அந்தக் குறையைப் போக்கும் வகையில் பண்ணைக் கருவிகளின் களஞ்சியமாக விவசாயத்துக்குத் தேவைப்படும் அத்தனை கருவிகளும் அணிவகுக்கின்றன சென்னை, நந்தனத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை வளாகத்தில்.

டிராக்டர்கள்
டிராக்டர்கள்

சென்னை மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த வளாகத்தில்தான் `மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையம்’ இயங்கிக் கொண்டிருக்கிறது. உழவு முதல் அறுவடை வரை பலவிதமான கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதோடு மதிப்புக்கூட்டும் கருவிகளும் இருக்கின்றன.

இதுசம்பந்தமாக வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளர் முருகேசன் பேசியபோது, ``இன்றைய சூழ்நிலையில் பண்ணைக் கருவிகளின் அவசியம் இன்றியமையாததாக இருக்கிறது. கருவிகள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் ஆள் பற்றாக்குறைதான். அந்த வகையில் விவசாயத்தைத் திறம்பட நடத்துவதற்கு கருவிகளின் தேவை எழுந்துள்ளது. இதுவரை வேளாண் கண்காட்சிகள் வழியாகவே கருவிகள் குறித்து அறிந்து வந்தனர், விவசாயிகள். ஆனால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதையறிந்து எல்லா நவீன கருவிகளின் விவரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்றவாறு, இந்தத் தகவல் மையத்தை வேளாண் பொறியியல் துறை அமைத்திருக்கிறது.

கலப்பைகள், மக்காச்சோளம் தானியம் பிரிக்கும் கருவி
கலப்பைகள், மக்காச்சோளம் தானியம் பிரிக்கும் கருவி

சமீபத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதை பார்வையிட்டு, ``கருவிகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேருங்கள்" என்றார். இங்கே பள்ளி மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வருகை புரிந்து கருவிகளின் விவரங்கள் குறித்தும், அதற்கான மானிய விவரங்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. கருவிகள் குறித்து அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவை எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

விதை போடும் கருவி
விதை போடும் கருவி

விவசாயிகளும் தங்களுடைய கண்டுபிடிப்பகளை இங்கு காட்சிப்படுத்தலாம். பழையதை மறக்கக் கூடாது என்று நம்முடைய பாரம்பர்ய விவசாயக் கருவிகளையும் காட்சிக்கு வைத்திருக்கிறோம். சொட்டு நீர்ப் பாசனம், நுண்ணீர் பாசனம், மாதிரி பண்ணைக் குட்டை என பாசனம் சம்பந்தமான அமைப்புகளும் கருவிகளும் வைத்திருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் காட்சிக்கூடத்தைப் பார்த்துக் கொள்வதற்கும், இது சம்பந்தமான விவரங்களைக் கொடுப்பதற்கும் என ஒரு உதவிப் பொறியாளரை நியமித்திருக்கிறோம். வேளாண் கருவிகள் குறித்து அறிய பிரத்யேக நூலகமும் இங்கு இயங்கி வருகிறது. அனைவரும் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

கலப்பை
கலப்பை

மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தின் உதவிப் பொறியாளர் ஆர்.ஜீவா நம்மை அந்த மையத்துக்கு அழைத்துச் சென்றார். குளிரூட்டப்பட்ட அறையில் கண்காட்சிகளில் உள்ளதுபோன்று பிரமாண்டமாக இருக்கிறது காட்சிக்கூடம். ஒரு நவீன கண்காட்சிக் கூடத்துக்குள் நுழைந்த பிரமிப்பைத் தந்தது. ஒவ்வொரு கருவிகளின் முன்பும் அந்தக் கருவியின் விலையும், மானிய விவரமும், கருவியின் விலை, தன்மை, செயல்படும் வேகம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் வைக்கப்பட்டுள்ளன.

செக்கு இயந்திரங்கள்
செக்கு இயந்திரங்கள்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

கருவிகள் பற்றி பேசிய ஜீவா, ``மூன்று தளங்களில் இங்கு கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. தரை தளத்தில் உழவுக்குப் பயன்படும் டிராக்டர்கள், மினி டிராக்டர்கள், கலப்பைகள், சுழற் கலப்பைகள், உளிக் கலப்பைகள், களை எடுக்கும் கருவிகள், நிலக்கடலை, பயறு வகைகளை நேரடியாக நிலத்தில் போடும் கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கருவிகளின் விலை 1 லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

இதோடு மண் அள்ளும் கருவிகளும் (ஜே.சி.பி) இங்கு இடம்பெற்றிருக்கின்றன. டிராக்டரின் உள் உறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பதை விளக்குவதற்கும் ஒரு மாதிரி டிராக்டரை அமைத்திருக்கிறோம். அதோடு மக்காச்சோளம் தானியம் பிரிக்கும் கருவி, தென்னை மட்டைகளைத் தூள் தூளாக்கும் கருவி, பருப்பு உடைக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி எனப் பல கருவிகள் இருக்கின்றன.

பாரம்பர்ய கருவிகள்
பாரம்பர்ய கருவிகள்

முதல் தளத்தில் சொட்டுநீர்ப் பாசனத்துக்குப் பயன்படும் கருவிகள், பால் கறக்கும் கருவி, பம்ப் செட்கள், குழாய்கள், தெளிப்பான்கள் (ஸ்பிரேயர்) இடம் பெற்றிருக்கின்றன. இரண்டாம் தளத்தில் செக்கு எண்ணெய் தயாரிக்கும் பல வகையான கருவிகள், நெல் உமி நீக்கும் கருவி, சிறுதானிய உமி நீக்கும் கருவிகள், மாவரைக்கும் கருவிகள், நேரடி நெல் விதைப்புக் கருவிகள், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன.

மாட்டு வண்டி
மாட்டு வண்டி
350 ரூபாயில் களை எடுக்கும் கருவி! | Weeding Machine

மூன்றாம் தளத்தில் ஏர் கலப்பை, தானிய குதிர், அரிவாள், கமலை பாசனக் கருவிகள் என பாரம்பர்ய கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன. நம் முன்னோர் எப்படி விவசாயம் செய்து வந்தார்கள் என்பதற்கான அடையாளமாக இது இருக்கிறது. இங்கே வருபவர்கள் பாரம்பர்ய கருவிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதுபோன்றும் அமைத்திருக்கிறோம். மாடியில் மாதிரி சூரிய கூடார உலர்த்திகள், சூரிய மின்வேலிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இங்கு கருவிகளைப் பார்ப்பது மட்டுமல்லாமல் அவற்றை எப்படி பயன்படுத்துவது, எந்த கம்பெனிகள் தயாரிக்கின்றன, எங்கு கிடைக்கும் என்ற விவரங்களும் தருகிறோம். அதை வாங்குவதற்கும் வழிகாட்டுகிறோம். சென்னையில் இருப்பவர்கள் மட்டும்தான் இங்கே வர வேண்டும் என்பதில்லை. வெளி மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள், பொதுமக்கள் இங்கு வருகை புரியலாம். இங்கே தெரிந்துகொள்ளும் விஷயத்தை மற்ற விவசாயிகளுக்கும் தெரியப்படுத்தலாம்.

உதவிப் பொறியாளர் ஜீவா
உதவிப் பொறியாளர் ஜீவா

செக்கு எண்ணெய், தோசைமாவு என்று பெண் தொழில்முனைவோருக்கான விஷயங்களும் இங்கு கிடைக்கும். வார நாள்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் இங்கு வரலாம். அனுமதி இலவசம்” என்றார்.

தொடர்புக்கு:

ஜீவா, உதவிப் பொறியாளர்,

வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை.

செல்போன்: 99408 67566

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு