Published:Updated:

`சர்வர் பிராப்ளம் சார்!’ - அதிகாரிகளின் லஞ்ச வெறி... நடக்குமா ஆன்லைன் பட்டா மாறுதல்?

லஞ்சம்
லஞ்சம்

‘அறிவுப்புகள் பலமாகத்தான் இருக்கிறது ஆனால் செயல்பாட்டுக்கே வராது’ என்று ஆதங்கப்படுகின்றனர் அதிகாரிகளின் நீக்குபோக்கு அறிந்தவர்கள்.

இணையதளம் மூலம் தானாக பட்டா மாறுதல் செய்யும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. ‘இனிமேல் சிக்கல் இல்லை’ என்று பலரும் நிம்மதி பெருமூச்சுவிட்ட சூழலில்தான், ‘பத்து ஆண்டுகளாக தனக்கு பட்டா வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்’ என்று வேல்முருகன் என்ற விவசாயி சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவம் அரசின் அறிவிப்புகள் எந்தளவுக்கு செயல்வடிவம் பெறுகின்றன என்பதற்கான துயர சாட்சி.

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

“பத்து வருடங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த சோழவரம் பகுதியில் 3 ஏக்கர் நிலம் வாங்கினேன். அந்த நிலத்துக்கு பட்டா கேட்டு தொடர்ந்து அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் கிடைக்கவில்லை. வி.ஏ.ஓ, தாசில்தார், கலெக்டர் உள்பட அனைத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. அனைத்து அலுவலகங்களிலும் ‘வாய்மையே வெல்லும்’ என்று எழுதி வைத்திருக்கிறார்களே ஒழிய, ஏழைகளின் குரல் எங்குமே எடுபடவில்லை.” என சம்பவத்தின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் வேல்முருகன்.

இணையதளம் மூலம் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறையை 2018-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது தமிழக அரசு. இதன்மூலம் ‘ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் பெற முடியும்’ என்று கூறப்பட்டது. ‘அலைச்சல் இருக்காது, லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை’ என நம்பப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு. பட்டா மாறுதலுக்காக இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தவர்கள் அதற்கான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தாலுகா அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மேலும் பல்வேறு நடைமுறைகளைச் சொல்லி முன்பைவிட அதிகமாக அலைக்கழிக்கப்பட்டனர். இந்தச் சூழலில்தான் தற்போது ஆன்லைன் பட்டா மாறுதலில் புதிய நடைமுறையை அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

பத்திரப் பதிவு
பத்திரப் பதிவு

பத்திரப்பதிவு துறை சாஃப்ட்வேர் மூலமே பட்டா மாறுதல் பணிகளை முடிக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். அதற்கேற்றவகையில், ஒருவரது சொத்தை இன்னொருவர் கிரையம் முடிக்கும்போதே, பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் இந்த இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா, சர்வே எண், உட்பிரிவு எண், கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக உள்ளதா? வில்லங்கம் ஏதேனும் உள்ளனவா? உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்யவேண்டும்.

இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள விவரம் கிரையம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரையம் பெற்றவரின் மொபைல் எண்களுக்கு அனுப்பப்படும் என்றும் கிரையம் முடித்தவர்கள் http://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பத்திரப்பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கே பட்டா அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம்
லஞ்சம்

குறிப்பிட்ட சொத்துக்கான பட்டா, கிரையம் முடித்து கொடுப்பவரின் பெயருக்கு மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் இணையதளம் மூலம் பட்டாவை பெயர் மாற்றம் செய்து புதிதாக கிரையம் முடிப்பவரின் பெயருக்கு பட்டாவை பெயர் மாற்றம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘அறிவிப்புகள் பலமாகத்தான் இருக்கிறது ஆனால் இது செயல்பாட்டுக்கே வராது’ என்று ஆதங்கப்படுகின்றனர் அதிகாரிகளின் நீக்குபோக்கு அறிந்தவர்கள்.

இதுதொடர்பாக தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி பேசும்போது, “அரசு சொல்வதையெல்லாம் செயல்படுத்துவிட்டால் நாம் வாழ்வது சொர்க்க லோகமாகத்தான் இருக்கும். இவர்கள் இப்படி கலர்கலராக அறிவிப்புகள் வெளியிடுவார்களே ஒழிய, அதை ஒருபோதும் செயல்படுத்தமாட்டார்கள். இந்த நடைமுறைகளை ஆன்லைனில் மாற்றியதன் நோக்கம் என்ன? பொதுமக்கள் வீணாக அரசு அலுவலகங்களுக்கு அலையக் கூடாது. அதிகாரிகளை நேரில் பார்ப்பதற்கான அவசியமே இருக்கக் கூடாது என்பதுதானே. ஆனால், இங்கு உங்களை நேரில் பார்க்காமல் எந்த வேலையும் நடக்காது.

நீங்கள் அதிகாரிகளை நேரில் சந்திக்கவில்லையெனில் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது எப்படி கிடைக்கும்? ஆகையால், அவர்கள் நிச்சயம் உங்களை நேரில் வரவழைப்பார்கள். அதற்கு அவர்கள் நிறைய தந்திரங்கள் வைத்திருக்கின்றனர். சர்வே எண்ணை சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும். ஒரே சர்வே எண்ணில் பல சப்-டிவிஷன் இருக்கிறது (உட்பிரிவு இனங்கள்) நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனப் பல்வேறு காரணங்களைச் சொல்வார்கள்.

சுபி.தளபதி
சுபி.தளபதி

இதெல்லாம்சொல்ல முடியாதளவுக்கு எல்லாம் சரியாக இருந்தால் ‘சர்வர் பிராப்ளம் சார்’ என்று ஒரே போடாக போட்டுவிடுவார்கள். சாதாரண மக்களுக்கு சர்வர் என்றால் என்னவென்றே தெரியாது. ஒருகட்டத்தில் அலைய முடியாமல் ‘பாத்து முடிச்சு குடுங்க சார்’னு சொல்றகிற அளவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை லஞ்சம். அதைக் கொடுத்துவிட்டால் சர்வர் என்ன சூப்பர் கம்ப்யூட்டரே வேலை செய்யும். இன்றும் 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோரால் ஆன்லைனில் பட்டா பெற முடியவில்லை. அதுதான் நிலமை. தொழில்நுட்பம் மூலம் பல விஷயங்களை சாத்தியப்படுத்த முடியும். ஆனால் அதை செயல்படுத்த வேண்டியது லஞ்சத்தில் திளைத்துப்போன அதிகாரிகள் என்பதுதான் இங்கு பிரச்னையே!” என்றார் வேதனையுடன்.

பட்டா மாறுதல் தொடர்பாக உங்களுடைய அனுபவங்களை கமெண்ட் செய்யுங்கள்...

அடுத்த கட்டுரைக்கு