Published:Updated:

விவசாய கடன் தள்ளுபடி: `காரணம் யார்... எடப்பாடியா, ஸ்டாலினா?' - விவசாய சங்கங்களின் அரசியல் கலாட்டா

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பயிர்க் கடன் தள்ளுபடியை வைத்து, விவசாய சங்கங்களும் கட்சிகளும் நடத்தும் அரசியல் விளையாட்டால், விவசாயிகள் குழப்பமடைந்துள்ளார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதனால் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து சில விவசாய சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்கள். அதேசமயம் வேறு சில விவசாய சங்க நிர்வாகிகள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விவசாய கடன் தள்ளுபடிக்காக நன்றி தெரிவித்துள்ளார்கள். பயிர்க் கடன் தள்ளுபடியை வைத்து, விவசாய சங்கங்களும் கட்சிகளும் நடத்தும் அரசியல் விளையாட்டால், விவசாயிகள் குழப்ப மடைந்துள்ளார்கள். பயிர்க் கடன் தள்ளுபடிக்கு உண்மையில் யார்தான் காரணம், யாரை மனதாரப் பாராட்டுவது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளார்கள்.

தமிழக முதலர்வருடன் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்
தமிழக முதலர்வருடன் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர்ச்சியான இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். நஷ்டம் ஏற்பட்டதால், பல விவசாயிகள் விவசாய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில்தான் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பயிர்க் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இதற்காகத் தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச் செயலாளர் சத்தியநாராயணன் உட்பட பல விவசாயிகள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பானது, விவசாயிகளின் துயர் துடைக்க மிகவும் உறுதுணையாக இருக்கும் என இவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்னொருபுறம் வேறு சில விவசாய சங்க நிர்வாகிகள் இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.

விவசாய கடன் தள்ளுபடி: `காரணம் யார்... எடப்பாடியா, ஸ்டாலினா?' - விவசாய சங்கங்களின் அரசியல் கலாட்டா

தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துரை.மாணிக்கம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி உள்ளிட்டவர்கள் இதற்காக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்கள். விவசாய கடன் தள்ளுபடியை வைத்து இவர்கள் நடத்தி வரும் அரசியல் விளையாட்டால், பிற விவசாயிகள் குழம்பிப் போயுள்ளார்கள்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான இளங்கீரனிடம் பேசினோம். விவசாய கடன் தள்ளுபடிக்கு ஸ்டாலின்தான் காரணம் என எந்த அடிப்படையில் நன்றி தெரிவிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினோம். ``தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, உண்மையாகவே விவசாயிகள் நலனில் அக்கறை கிடையாது. இதனால்தான், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத சட்டத்தை இவர் வெளிப்படையாகவே ஆதரிக்கிறார். மாநிலங்களவையில் இந்தச் சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க வாக்களித்ததால்தான், இந்த மூன்று சட்டங்களும் நிறைவேறின. இது விவசாயிகளுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, இயற்கை இடர்ப்பாடுகளால், தமிழக விவசாயிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள், இதனால் வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில்தான் கடந்த ஜனவரி 14-ம் தேதி சென்னை செங்குன்றம் அருகில் தி.மு.க, ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. நான் உட்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் அவ்விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். அப்போது உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

Farmer
Farmer
AP / Channi Anand

இதை மோப்பம் பிடித்த உளவுத்துறையினர், உடனடியாக இந்தத் தகவலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்தார்கள். மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததால், அ.தி.மு.க ஆட்சி மீது விவசாயிகள் கடும் கோபத்தில் இருப்பதைக் கண்டு எடப்பாடி பழனிசாமி மிகுந்த அச்சத்தில் இருந்தார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என அவருக்கு பயம் வந்துவிட்டது. விவசாயிகளின் கோபத்தை குறைக்க, தற்போது விவசாய கடன் தள்ளுபடியை அவர் பயன்படுத்திக்கொண்டார். விவசாய கடன் தள்ளுபடி குறித்து உண்மையாகவே முதலில் அக்கறையுடன் அறிவித்தது, மு.க.ஸ்டாலின்தான். அதனால்தான் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்" எனத் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.பாண்டியனிடம் பேசியபோது, ``விவசாயிகள் நலனில் ஒத்த கருத்துடன் செயல்பட்ட தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இருவருக்குமே நான் பாராட்டு தெரிவித்திருந்தேன். அதேசமயம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, இதை நடைமுறைப்படுத்தக்கூடிய இடத்தில் இருந்து, இதை நிறைவேற்றியதால் தமிழக முதலைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களைப் பாராட்டுவது எங்களது கடமை. இதில் கட்சிப் பாகுபாடு பார்ப்பதில்லை.

பயிர்க் கடன் தள்ளுபடிக்காகத் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் அதே சமயத்தில். பயிர்க் கடன் வழங்கியதில் நடந்துள்ள முறைகேடுகளையும் கண்டித்து வருகிறேன். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிக்கு 2,030 கோடி ரூபாய்தான் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம், ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு 2,500 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டத்துக்கு இவ்வளவு அதிகமான தொகை வழங்கப் பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

Farmers
Farmers

விவசாய கடன் தள்ளுபடிக்கு யார் முதன்மையான காரணம் என நடுநிலையான விவசாய சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``தேர்தல் நெருங்கிவிட்டது. விவசாயிகளின் வாக்குகளை ஈர்க்க, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு குட்டிக்கரணம் அடிக்கின்றன. இதனால்தான் இந்த இரண்டு கட்சிகளுமே பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டன. கடந்த 5 ஆண்டுகளாக, வறட்சி, புயல் என விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாய சங்கங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தன. தற்போது தேர்தல் நேரத்தில் இதை இரண்டு கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டன. எது எப்படியோ விவசாயிகளுக்கு நல்லது நடந்தால் சரிதான்’’ எனத் தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு