ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையம்... தமிழ்நாட்டில் மீண்டும் செயல்படுமா?

எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
News
எண்ணெய்

விவசாயிகள் எதிர்பார்ப்பு!

இந்தியா ஒரு விவசாய நாடு என மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் நம் நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 40 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது மிகப்பெரிய முரண்பாடு. மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிற சூரியகாந்தி எண்ணெயில் 90 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற கடலை எண்ணெயை விட, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற சூரியகாந்தி மற்றும் பாமாயில் போன்ற எண்ணெய் வகைகளின் விலை குறைவாக இருந்ததால், இங்குள்ள மக்கள் அவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினார்கள். நாளடைவில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் பழக்கப்பட்டுப்போனதால், கடலை எண்ணெய் பயன்படுத்துவதைப் பெருமளவு கைவிட்டனர். இதன் காரணமாக, உள்நாட்டு விவசாயிகளுக்கும் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய லாபம், வெளிநாடுகளிலிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் பெரும் நிறுவனங்களுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

1977-ம் ஆண்டு இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த எச்.எம்.பட்டேல், வெண்மைப் புரட்சியின் தந்தையான டாக்டர் வர்கீஸ் குரியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். சமையல் எண்ணெய் இறக்குமதியால், நம் நாடு அந்நிய செலாவணியை அதிகளவில் இழக்கிறது. பால் உற்பத்தியில் நம் நாட்டைத் தன்னிறைவு பெற வைத்ததுபோல் சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற வைக்க வேண்டும் என வர்கீஸ் குரியனிம் எச்.எம். பட்டேல் தெரிவித்தார்.

அதனை ஏற்ற டாக்டர் வர்கீஸ் குரியன் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார். சமையல் எண்ணெய் தொழிலை கூட்டுறவு மையம் ஆக்குவதற்காக 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை தயாரித்தார். இந்தத் திட்டம் 1979-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்கிற விவசாயிகளுக்கும் சமையல் எண்ணெயை வாங்கிப் பயன்படுத்துகிற நுகர்வோருக்கும் இடையே இடைத்தரகர்களாகச் செயல்பட்டு கொள்ளை லாபம் ஈட்டி வந்தவர்களைக் களை எடுப்பதே ஆகும். இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்தார்.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மூலமாக, 5,348 எண்ணெய் வித்து விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு, 10 லட்சம் விவசாயிகள் அங்கம் வகித்தார்கள். 7 மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டுறவு சங்கங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான 5 எண்ணெய் ஆலைகள் தொடங்கப்பட்டன. கூட்டுறவு சங்கங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், தாரா எனப் பெயரிடப்பட்டுச் சந்தை படுத்தப்பட்டது.

டாக்டர் வர்கீஸ் குரியன் முயற்சிகளால் எண்ணெய் சந்தையில் இருந்த பெரு முதலாளிகள் ஆட்டம் கண்டார்கள். 20 லட்சம் டன்னுக்கும் அதிகமாக இருந்த இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 2 லட்சம் டன்னுக்குக் குறைவாகச் சரிந்தது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 1988-ல் அறிமுகம் செய்யப்பட்ட தாரா சமையல் எண்ணெய், குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனமான மதர் டைரி மூலம் 33 ஆண்டுகள் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

மூடப்பட்ட கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையம்...
மூடப்பட்ட கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையம்...

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் முன்பு செயல்பட்டு வந்த தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என இங்குள்ள விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள். ராஜீவ் காந்தி நவீன தொழில்நுட்பத் திட்டத்தின் மூலம் 1985-ம் ஆண்டுக் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கப்பட்டது.

அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், அந்த ஆலையைத் தொடங்கி வைத்தார். தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையம் என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் சார்பில் அந்த எண்ணெய் ஆலை செயல்பட்டது. அந்நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... இயக்குனர்களாக விவசாயிகளும் செயல்பட்டனர். அந்நிறுவனத்தில் ஊழியர்களாக 450 பேர் பணியாற்றினர். 14 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளைக் கொண்டு, கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன. அவற்றின் மூலம், விவசாயிகளிடமிருந்து சூரியகாந்தி, நிலக்கடலை ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு, எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு, ‘வின்னர்’ என்ற பெயரில், பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன. நிர்வாகச் சீர்க்கேட்டால் பாதிப்படைந்த விருத்தாச்சலம் எண்ணெய் ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டு, 2002-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் மூடப்பட்டது.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சூரியகாந்தி சாகுபடி மிகவும் சொற்பம் என்பதால், அதன் எண்ணெய் உற்பத்தியும் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சூரியகாந்தி எண்ணெயை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகியுமான விருதகிரி, ‘‘விருத்தாசலத்துல ஆரம்பிக்கப்பட்ட எண்ணெய் ஆலையில, தனியார் ஆலைகளுக்கு நிகரான நவீன வசதிகள் இல்லாததுனால, அந்த ஆலை திறம்படச் செயல்படலை. நிலக்கடலையைத் தரம் பிரிக்கக்கூடிய கருவிகள் இல்லாததால, பிஞ்சு கடலை, சொத்தை கடலையைச் சேர்த்து எண்ணெய் ஆட்டினதுனால அந்த எண்ணெய் தரம் குறைவா இருந்துச்சு. அதனால அந்த எண்ணெ்யை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டலை. தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையம் ஏற்படுத்தின விழிப்புணர்வால, அப்ப இந்தப் பகுதியில நிறைய விவசாயிங்க சூரியகாந்தியும் பயிர் செஞ்சாங்க. ஆனால் அதை அறுவடை செய்றப்ப விதைகள் மழையில நனைஞ்சதால, விவசாயிங்க ரொம்பச் சிரமப்பட்டாங்க. ஈரமான விதைகளை கொள்முதல் செய்ய விருத்தாசலம் எண்ணெய் ஆலை மறுத்துடுச்சி. இதனால நாளடைவுல விவசாயிங்க சூரியகாந்தி சாகுபடியை கைவிட்டுட்டாங்க.

தனியார் ஆலைகள்ல விதைகளை உலர வைக்க நவீன கருவிகள் இருக்குற மாதிரி, இங்கேயும் கொண்டு வரணும்னு விவசாயிங்க கோரிக்கை வச்சாங்க. ஆனா அதிகாரிங்க கண்டுக்கல. அப்ப இருந்த அதிகாரிங்களோட அலட்சியத்தாலயும் நிர்வாகச் சீர்கேட்டாலயும்தான் அந்த ஆலை நிரந்தமா மூடப்பட்டுச்சு. தமிழ்நாடு கூட்டுறவு எண்ணெய்வித்து உற்பத்தி இணையமும் செயல்படல. மறுபடியும் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு, திறமையான நேர்மையான அதிகாரிகளை நியமிக்கணும். நவீன வசதிகளோடு தமிழ்நாட்டுல உள்ள எல்லா மாவட்டங்கள்லயும் எண்ணெய் ஆலை தொடங்கப்பட்டு, விவசாயிகள்கிட்ட இருந்து எண்ணெய்வித்துகளைக் கொள்முதல் செஞ்சி எண்ணெய் உற்பத்தியில ஈடுபடணும். இதனால மக்களுக்குத் தரமான எண்ணெய் நியாயமான விலையில கிடைக்கும். ரேஷன் கடைகள் மூலமாவும் அந்த எண்ணெய்யை விநியோகம் செய்யலாம். பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு கொடுக்குற, அன்பளிப்பு திட்டத்துலயும் அந்த எண்ணெயை கொடுக்கலாம். தமிழ்நாட்டுல பால் கொள்முதல்லயும் விற்பனையிலயும் கடந்த பல வருஷமா வெற்றிகரமா செயல்பட்டுக்கிட்டு இருக்குற, அரசாங்க நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலமாவும் இதைச் செயல்படுத்தலாம்’’ எனத் தெரிவித்தார்.

இதுகுறித்துத் தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் பேசியபோது “இது நல்ல யோசனையா இருக்கு. உடனடியா தமிழக முதல்வர்கிட்ட இது சம்பந்தமா கலந்து பேசி, இதைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குறேன்’’ என உறுதி அளித்தார்.

விலை ஏற்றமும் கலப்பட எண்ணெயும்!

சமையல் எண்ணெய் விற்பனையில் அனுபவம் பெற்றவரான சென்னை சூளைமேட்டை சேர்ந்த சத்தார், எண்ணெய் அரசியல் பற்றி பேசும்போது, ‘‘தமிழ்நாட்டு மக்கள் பாரம்பர்யமாகப் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்களில் கொழுப்புச் சத்து அதிகம் என்ற தவறான கருத்து மேலோங்கியதாலேயே, அவற்றைத் தவிர்த்து விட்டு சூரியகாந்தி எண்ணெயை அதிகமாக வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சூரியகாந்தி சாகுபடி மிகவும் சொற்பம் என்பதால், அதன் எண்ணெய் உற்பத்தியும் மிகவும் குறைவு. ஆனால் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சூரியகாந்தி எண்ணெயை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் சூரியகாந்தி எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வெளிநாடுகளிலிருந்து அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது. இவை 100 சதவிகிதம் சுத்தமான சூரியகாந்தி எண்ணெய் அல்ல. சுத்திரிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணெய் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை உடலுக்கு நல்லது என்ற விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்த எண்ணெய்களில், விலை குறைவான பாமாயிலை கலப்படம் செய்யும் கொடுமையும் அதிகரித்து வருகிறது’’ என்றார்.

தெலங்கானாவைப் பாருங்கள்!

தெலங்கானா அரசு, மாநில பால் கூட்டுறவு சங்கத்தின் அங்கமான ‘விஜயா டெய்ரீஸ்’ நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகிக்கிறது. அதேபோலத் தெலுங்கானா மாநில எண்ணெய் வித்துக் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்களைக் கொள்முதல் செய்து சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து விஜயா என்ற பெயரிலேயே விற்பனை செய்கிறது. இதனால் அம்மாநில விவசாயிகள் பயன் அடைகின்றனர். மேலும் அங்குள்ள நுகர்வோர்களுக்குக் கலப்படம் இல்லாத தரமான சமையல் எண்ணெய் கிடைக்கிறது.

வர்கீஸ் குரியன், அன்புச் செல்வன், சத்தார், விருதகிரி, நாசர்.
வர்கீஸ் குரியன், அன்புச் செல்வன், சத்தார், விருதகிரி, நாசர்.

சூரியகாந்தி சாகுபடிக்கு விதைகள் கிடைப்பதில்லை!

தஞ்சையைச் சேர்ந்த விவசாயி அன்புச் செல்வனிடம் பேசியபோது “பாரம்பர்யமாக நாம் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை சமையலில் நன்கு சுவை கொடுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் கலப்படம் செய்யப்பட்ட சூரியகாந்தி, பாமாயில் ஆகியவற்றைத்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நிலக்கடலை, எள் ஆகியவற்றுக்கு நியாயமான விலை கிடைக்காததால்தான் இவற்றைச் சாகுபடி செய்வதை விவசாயிகள் குறைத்துக்கொண்டனர். பாமாயில் இறக்குமதியை அரசு முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். விலை குறைவு என்ற காரணத்தினால் பாமாயிலை நியாய விலைக் கடைகளின் மூலம் கொடுப்பதால் பாமாயில் விற்பனையை அரசே ஊக்குவிக்கிறது. அதற்கு மாற்றாகத் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வித்துக்களில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவைகளைக் கொடுக்கலாம்.

தமிழ்நாட்டு மக்கள் அதிகம் விரும்பக்கூடிய சூரியகாந்தி எண்ணெய் உற்பத்திக்காக, இந்தப் பயிரை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்தோடு முன் வந்தாலுமே கூட இதற்கான விதைகள் கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. எண்ணெய் வித்துக்கள் அனைத்தும் மானாவாரி நிலங்களில்தான் அதிகம் பயிரிடப்படுகின்றன. நமது அரசு சமையல் எண்ணெய் இறக்குமதியை குறைத்து விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் கண்டிப்பாகச் சமையல் எண்ணெய் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற முடியும். நம்முடைய. மக்கள், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.