Published:Updated:

’ஊழல்பேய்’களின் சவால்... ஷேர் செய்வோம் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை!

பிரச்னை

பிரீமியம் ஸ்டோரி

#FarmersRequestToStalin #முதல்வருக்கு_ஒரு_சவால்

லஞ்சம், கமிஷன், கையூட்டு
வானம் பொழிகிறது பூமி விளைகிறது
உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் லஞ்சம்?
எங்களோடு வயலுக்கு வந்தாயா?
ஏற்றம் இறைத்தாயா..?


நேர்மையாக செயல்படாத அரசு நெல்கொள்முதல் நிலையங்களால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் நெல் விவசாயிகள் இப்படியெல்லாம் வீரவசனம் பேசத்தான் நினைக்கிறார்கள். ஆனால், நாலாபுறமும் நெருக்கடிகளுக்குள் ஆட்பட்டிருக்கும் அவர்களால் இப்படியெல்லாம் பேச முடியவில்லை.

தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி தொடங்கி, வடகோடியான திருவள்ளூர் மாவட்டம் வரை அனைத்து மாவட்டங்களிலும் இப்படி நேரடியாக நெல்கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள்தான், காலகாலமாக விவசாயிகளுக்குத் தொல்லை நிலையங்களாகவே செயல்பட்டு வருகின்றன.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஊழல், லஞ்சம், நெல்மணிகளை நூதன முறையில் கொள்ளையடிப்பது என பல வகைகளில் விவசாயிகளை வதைக்கிறார்கள் நெல்கொள்முதல் நிலையத்தில் உள்ள ஊழல் பேய்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நேரடி நெல் கொள்முதல நிலையங்களில் நடக்கும் பிரச்னைகள் தீராமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் அளவுக்கு நெல் கொள்முதலில் மட்டுமே கொள்ளையடிக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராவதற்கு முன்பு, டெல்டா மாவட்டங்களுக்கு வருகை தந்த போதெல்லாம், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நிகழும் அநீதிகள் குறித்து, கனத்த இதயத்துடன் கொதித்தெழுந்தார். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால், முறைகேடுகளுக்கு முடிவுரை எழுதப்படும்’ என முழங்கினார். ஸ்டாலின் வெற்றிபெற்று முதலமைச்சராக அரியணையில் ஏறியபோது அகமகிழ்ந்தார்கள், விவசாயிகள். ஆனால், நிலைமையில் கடுகளவுகூட மாற்றம் நிகழவில்லை.

சமீபத்திய கோடை மற்றும் முன்பட்ட குறுவைப் பருவத்தில் விளைவித்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் சந்தித்துவரும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால்... ‘முந்தைய ஆட்சியைவிட மூட்டைக்குப் பத்து ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்கிற குமுறல்கள் அதிகமாகவே கேட்கின்றன.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்


‘‘என்னோட நெல்லை கொள்முதல் செய்ய 24 நாள்கள் ஆயிடுச்சி. நெல் அவிஞ்சிடாம தினமும் கிளறிவிடுறதுக்கு 20,000, மழையில நனைஞ்சிடாம மூடிவைக்கப் படுதா வாடகை 7,000, மூட்டைக்கு 35 ரூபாய் லஞ்சம்னு மொத்தம் 45,200 ரூபாய் அநியாய செலவு’’ என்று குமுறுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், மகிமாலை கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல்.

‘‘சணல் இல்லை, சாக்கு இல்லை, கோணி ஊசி இல்லை, மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லைனு எதற் கெடுத்தாலும் காரணம் சொல்லி, எங்க நெல் மூட்டைகளைக் கொள்முதல் பண்ணாம இழுத்தடிக்கறதே வேலையா வெச்சுருக்காங்க படுபாவிங்க’’ என்று சாபம் விடுகிறார் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி.

‘‘40 கிலோ மூட்டைனா... சாக்கு எடை 500 கிராம் சேர்த்து 40.5 கிலோ எடுக்கலாம். ஆனா, 42 கிலோ எடுக்கிறாங்க. எங்க கண்ணுக்கு நேராவே ஒவ்வொரு மூட்டைக்கும் ஒன்றரை கிலோ நெல்லை கொள்ளையடிக்கிறாங்க’’ என சேருகிறார் நல்லாடை கிராமத்தின் மோகன்.

மோகன், பக்கிரிசாமி, சிங்காரவேல்
மோகன், பக்கிரிசாமி, சிங்காரவேல்


இதைப் பற்றியெல்லாம் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழிர்கள் மத்தியில் பேசினால், ‘‘நாங்க மட்டுமா எடுத்துக்கிறோம். ஒவ்வொரு மூட்டைக்கும் நாங்க வாங்குற 40 ரூபாயில, நாலு ரூபாகூட எங்களுக்குத் தங்குறதில்ல. உயரதிகாரிகள், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்னு எல்லாருக்கும் பங்கு போகுது. அப்படி யிருக்கறப்ப, எங்கள மட்டும் குற்றம் சொன்னா எப்படி? யாரு என்ன சொன்னாலும் இதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு சங்கிலி பிணைப்போட இந்தப் பணத்தை நாங்க பரிமாறிக்கிட்டிருக்கோம். முடிஞ்சா முதலமைச்சர் தடுத்து நிறுத்தட்டுமே’’ என்று சவால் விடுகிறார்கள் சிரித்தபடியே!

இந்தப் பெருங்கொடுமைகள் குறித்து, விகடன் இணைய தளத்தில் விரிவான ஒரு கட்டுரை பதிவிடப்பட்டுள்ளது (லிங்க் https://bit.ly/3Ao4cPc . அதேபோல, விகடன் யூடியூப் தளத்தில் அழுத்தமான வீடியோ https://www.youtube.com/watch?v=F8iEfh1fVM0 பதிவொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவை இரண்டுக்குமான க்யூஆர் கோடுகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் ஸ்மார்ட் போன் மூலமாக ஸ்கேன் செய்து படிக்கலாம்/பார்க்கலாம்.

நமக்காக உணவை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படும் என்கிற நம்பிக்கையோடு, முடிந்தவரை நாடு முழுக்க இந்தக் கட்டுரை மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வோம்- முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காதுகளில் ஏறும் வரை!

வீடியோவை பார்க்க https://www.youtube.com/watch?v=F8iEfh1fVM0

கட்டுரையைப் படிக்க https://bit.ly/3Ao4cPc

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு