Published:Updated:

``அதிக விளைச்சல்... விலை இல்லை”- மானாவாரி உற்பத்திக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யுமா அரசு?

மூட்டையில் நிரப்பப்படும் மக்காச்சோளம்
மூட்டையில் நிரப்பப்படும் மக்காச்சோளம்

நல்ல மகசூல் கிடைத்தும் போதிய விலை இல்லாததால், அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள், பயறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டனர். கடந்த 20 நாள்களாக உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் போன்றவற்றின் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மக்காச்சோளம்
மக்காச்சோளம்

இந்தாண்டு அதிகப்படியான மழையால் மகசூல் அதிகம் இருந்தாலும், போதிய விலையின்றி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம்.

``தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயமே முக்கியமானதாக உள்ளது. மழையை மட்டுமே நம்பி விதைக்கும் இந்த விவசாயத்தில் மகசூல் என்பது மழைப்பொழிவைப் பொறுத்தே இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததால் சராசரியாகக் கிடைக்கும் மகசூலில் பாதிகூட கிடைக்கவில்லை.

மக்காச்சோள மூட்டைகள்
மக்காச்சோள மூட்டைகள்
கடந்த ஆண்டு வெள்ளைச்சோளம் குவிண்டால் ரூ.1,900, இந்த ஆண்டு ரூ.1,500 , மக்காச்சோளம் கடந்த ஆண்டு ரூ.2,200 இந்த ஆண்டு ரூ.1,600

இந்த ஆண்டு நன்றாக மழை பெய்தது. எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூல் கிடைத்துள்ளது. மகிழ்ச்சியுடன் அறுவடை செய்து மூட்டைகளில் நிரப்பி வைத்து வியாபாரிகளுக்காகக் காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு கிடைத்த விலையை விட குறைவாகவே விலை பேசுகிறார்கள் வியாபாரிகள்.

கடந்த ஆண்டு வெள்ளைச்சோளம் குவிண்டால் ரூ.1,900. இந்த ஆண்டு ரூ.1,500. கடந்த ஆண்டு 2,200 ரூபாய் இருந்த ஒரு குவிண்டால் மக்காச்சோளம் இந்த ஆண்டு ரூ.1,600. கடந்த ஆண்டு கம்பு ரூ.2,100 இந்த ஆண்டு ரூ.1,700. இப்படி கடந்த ஆண்டை விட குறைவான விலைக்கே வியாபாரிகள் வாங்குகிறார்கள்.

மக்காச்சோளம் தூற்றுதல்
மக்காச்சோளம் தூற்றுதல்

விவசாயிகள், கமிஷன் கடைக்குத் தானிய மூட்டைகளைக் கொண்டு சென்றால் கொள்முதல் செய்ய மறுத்து திருப்பி அனுப்புகிறார்கள். சில வியாபாரிகள் அடிமட்ட விலைக்குக் கேட்கிறார்கள். உழவு, விதை, விதைப்பு, களையெடுப்பு, பராமரிப்பு, உரம், அறுவடை, வேலையாட்களின் கூலி எனப் பல செலவுகள் உள்ளன. `உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்குகூட மிஞ்சாது’ என்ற பழமொழியைப் போல இந்தச் செலவுகளையெல்லாம், கணக்கிட்டுப் பார்த்தால், இந்த விலைக்கும் கட்டுப்படி ஆகாது.

வியாபாரிகள் கொள்முதல் செய்வதிலும் சுணக்கம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தும் பயனில்லாமல் போய்விட்டது. வியாபாரிகளின் வரவை எதிர்பார்த்து நிலத்திலேயே தானியங்களை மூட்டையாக்கி வரிசையாக அடுக்கிக் காத்திருக்கிறோம்.

நெல், மஞ்சள் போன்றவற்றை குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து அரசே நேரடியாகக் கொள்முதல் செய்வதைப்போல் வெள்ளைச்சோளம், கம்பு, உளுந்து, பாசி, மக்காச்சோளம் போன்றவற்றுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்காக, வட்டாரம்தோறும் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

மக்காச்சோளம்
மக்காச்சோளம்

இதை பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் நடவடிக்கை இல்லை. வரும் மாநில அரசின் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் 70 சதவிகிதம் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது. காவிரி டெல்டா மாவட்டத்தின் 30 சதவிகித நெல், கரும்பு, மஞ்சள் விவசாயிகளுக்குக் காட்டும் அக்கறையை மானாவாரி விவசாயிகள் நலனிலும் காட்ட வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு