Published:Updated:

5,000 பங்குதாரர்கள்! - ஆண்டு விற்பனை ரூ.3.93 கோடி! - உன்னதமான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

கூட்டுறவு

5,000 பங்குதாரர்கள்! - ஆண்டு விற்பனை ரூ.3.93 கோடி! - உன்னதமான உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்!

கூட்டுறவு

Published:Updated:
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

விவசாயிகள், உற்பத்தியாளராக மட்டும் இருந்துவிடாமல் விற்பனையிலும் ஈடுபடும்போதுதான் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அந்த வகையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இணைந்து தங்கள் விளைபொருள்களை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலமாக நேரடியாகவும் மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 600 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், 5,000 பங்குதாரர்களைக் கொண்டு உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல், விற்பனை ஆகியவற்றில் முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது ‘சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தில் செயல்பட்டு வருகிறது ‘சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’. பயிற்சி அரங்கம், செயல்முறைக்கூடம், விளைபொருள் கொள்முதல் நிலையம், சேமிப்புக் கிடங்குகள், பல்பொருள் அங்காடி, மதிப்புக்கூட்டும் மையம், உணவகம், 24 மணிநேரக் குடிநீர் வழங்கும் நிலையம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட நிறுவனமாக அமைந்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைந்துள்ள அதே வளாகத்தில் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தையும் நடைபெற்று வருகிறது. இதன் தலைவர் எஸ்.டி.பாண்டியனைச் சந்தித்துப் பேசினோம், “ ‘சீட்ஸ்’ (SEEDS-Social Education Economical Development Society) என்ற பெயரில் தன்னார்வ அமைப்பாக 2009-ல் இருந்து இந்தப் பகுதியில் இயங்கி வந்தது.

பாண்டியன்
பாண்டியன்

பண்ணைக்குட்டைகளால் உயர்ந்த நீர்மட்டம்

மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, அவங்களுக்குக் கடன் உதவி, உள்ளாட்சியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, பள்ளி மாணவர் களுக்கான தலைமைப்பண்புனு கற்றுக்கொடுத்துட்டு வந்தோம். விருதுநகர் மாவட்டத்துல 80 சதவிகிதம் மானாவாரி நிலப் பகுதிகள்தான். மல்லாங்கிணறு சுற்றுவட்டாரப் பகுதிகள்ல உளுந்து, பாசி, துவரை, வத்தல், மல்லினு மானாவாரிச் சாகுபடிதான் அதிகம். அந்தப் பகுதி விவசாயிகளுக்காக நபார்டு நிதியுதவியுடன் விவசாயப் பகுதிகளில் மண் அரிப்பை தடுக்குறது, நிலத்தடி நீர் மேம்பாடு, பண்ணைக்குட்டை, தரிசு நிலங்கள்ல வணிகரீதியான மரக்கன்றுகளை வளர்க்கறதுனு வேலை பார்த்துட்டு இருந்தோம். பல இடங்கள்ல நிலத்தடி நீர்மட்டம் முன்பு 400 அடி ஆழத்துக்கும் கீழே இருந்தது. நாங்க அமைச்ச பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் காரணமா தற்போது 150 அடியிலேயே நிலத்தடிநீர் கிடைக்கிறது’’ என்றவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடர்பான தகவல்களுக்குள் புகுந்தார்.

“ ‘மழை பெய்ஞ்சா மட்டும்தான் விவசாயம் நடக்கும். மழை சரியா பெய்யலேன்னா ஒண்ணுமே இல்லாமப் போயிடும். உற்பத்தி செய்ற விளைபொருளுக்குச் சரியான விலை கிடைக்க மாட்டேங்குது. போக்குவரத்து, கமிஷன்னு எதுவும் மிஞ்சுறதில்ல. எங்களோட விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கணும். அதுக்கு ஏதாவது வழி பண்ணுங்க’னு விவசாயிகள் கோரிக்கை வெச்சாங்க.

பருப்பு அரைக்கும் பணி
பருப்பு அரைக்கும் பணி

சீட்ஸ் உழவர்
உற்பத்தியாளர் நிறுவனம்

2014-ம் வருஷம், மல்லாங்கிணறைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகளை அழைத்து ‘உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ தொடங்குவது பற்றி ஆலோசனை செய்தோம். சில உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நேரடியாகப் போய் ஆய்வு செய்தோம். முதல்கட்டமாக 350 விவசாயிகளுடன், சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கினோம். தரமான விதை, உரம், பூச்சிக்கொல்லிகளை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்துட்டு வந்தோம். அத்துடன், தனியார் நிதி நிறுவனங்கள் மூலமா 300 விவசாயிகளுக்குத் தலா 2 முதல் 3 லட்சம் வரை கடனுதவி வாங்கிக் கொடுத்தோம்.

கூடுதல் வருமானம்

குதிரைவாலி, உளுந்து ரெண்டையும் கொள்முதல் பண்ணி விற்பனை செய்ய வெளிமாவட்டங்கள்ல இருக்க வியாபாரிககிட்ட பேசினோம். விருதுநகர் சந்தையில ஒரு கிலோ 18 ரூபாய்க்கு விற்பனையான குதிரைவாலியை கிலோ ரூ.25-க்கும், 46 ரூபாய்க்கு விற்பனையான உளுந்து ரூ.55-க்கும் அவங்க வாங்கிக்கிட்டாங்க. இதைத் தெரிஞ்சுகிட்ட விருதுநகர் வியாபாரிகள், கிலோவுக்குக் கூடுதலா 5 ரூபாய்க் கொடுக்கிறோம். எங்ககிட்டயே பொருளைக் கொடுங்கன்னு கேட்டு, ஒரு கிலோ குதிரைவாலியை ரூ.30-க்கும், ஒரு கிலோ உளுந்து 60 ரூபாய்க்கும் வாங்கிக்கிட்டாங்க. இதுதான் எங்களுக்குக் கிடைச்ச முதல் வெற்றி. இது, நிறுவனத்துல இணைஞ்ச பங்குதாரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்ததோடு கூடுதல் வருமானத்தையும் கொடுத்துச்சு. தொடர்ந்து, துவரை, பாசி, வத்தல், மல்லினு கொள்முதல் பண்ணி விற்பனைக்கு அனுப்பினோம்.

பருப்பு அரைக்கும் பணி
பருப்பு அரைக்கும் பணி

மொத்த விற்பனை 3.93 கோடி ரூபாய்

அடுத்தகட்டமா, பருப்புகளைத் தொலி நீக்கி மதிப்புக்கூட்ட நபார்டு நிதியுதவியுடன் இயந்திரங்களை வாங்கினோம். அது மூலமா முழுப் பருப்பை உடை பருப்பாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்துட்டு இருக்கோம். இதனால, 30 சதவிகிதம் வரைக்கும் கூடுதல் விலை கிடைக்குது. 2019-20-ம் வருஷம் மொத்த விற்பனை 3.93 கோடி ரூபாய். அதுல ஊழியர்கள் 39 பேருக்கான மாதச் சம்பளம் ரூ.6.50 லட்சம் வீதம் வருஷத்துக்கு ரூ.78,00,000. மாதாந்திர மின் கட்டணம் ரூ.50,000 (2 மாத கணக்கு) வீதம் வருஷத்துக்கு, ரூ.3,00,000. அதோட போன வருஷம் பருப்பு அரவை, தோசைமாவு இயந்திரங்கள் வாங்கிய வகையில ரூ.70,00,000, அரவைக் கூடம், சேமிப்பு குடோன் கட்டடம் கட்ட 75,00,000 ரூபாய்னு மொத்தம் 2,26,00,000 ரூபாய் செலவாகிடுச்சு. கட்டடம், இயந்திரங்களுக்கான செலவு 1,45,00,000 ரூபாய்(நிரந்தரச் செலவு). இதைத் தவிர வசூலாக வேண்டிய தொகை 18,90,000 ரூபாய். இதெல்லாம் போக 3.10 லட்சம் ரூபாய் நிகரலாபமாகக் கிடைச்சது. அடுத்த நிதி ஆண்டுல இந்த நிரந்தரச் செலவு 1,45,00,000 ரூபாயும் லாபம்தான். 2025-ம் வருஷத்துக்குள்ள எங்க கம்பெனி பங்குதாரர்களைத் தற்சார்பு விவசாயிகளாக மாத்தணும் என்பதுதான் எங்களின் இலக்கு” என்றார்.

சிவகுமார்
சிவகுமார்

பெண்கள் அதிகமுள்ள நிறுவனம்

சீட்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சிவகுமாரிடம் பேசினோம், “211 ஆண் விவசாயிகள், 4,789 பெண் விவசாயிகள் என 5,000 பேர் பங்குதாரர்களாக இருக்காங்க. பெண் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இதுதான். போன வருஷம் நடந்த ஆண்டுப் பொதுக் குழுக்கூட்டத்தில, கம்பெனியில முதலில் இணைஞ்ச 350 பங்குதாரர்களுக்கு ரூ.867 பங்கு ஆதாயமாகக் கொடுத்தோம். நல்ல லாபத்தில் இயங்கி வருவதோடு பங்குதாரர்களுக்கு உரிய பங்கு ஆதாயம் வழங்கும் உழவர் உற்பத்தியார் நிறுவனங்கள்ல எங்க நிறுவனமும் ஒண்ணு.

‘‘பருப்புகளைத் தொலி நீக்கி மதிப்புக்கூட்ட நபார்டு நிதியுதவியுடன் இயந்திரங்களை வாங்கினோம். அது மூலமா முழுப் பருப்பை உடை பருப்பாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்துட்டு இருக்கோம்.’’

6 விருதுகள்

2017-ம் ஆண்டிலிருந்து வங்கிகள் மூலம் பங்குதாரர்களுக்குக் கடன் வாங்கிக் கொடுக்கிறோம். இதுவரை 1,688 பேருக்கு ரூ.6,81,90,000 பயிர்க்கடன், 142 பேருக்கு ரூ.71,13,000 கறவை மாடு வளர்ப்புக் கடன், 2,995 பேருக்கு ரூ.11,18,62,000 ஆடு வளர்ப்புக் கடன், 29 பேருக்கு ரூ.43,30,000 விவசாயம் சார்ந்த கடன், 142 பேருக்கு ரூ.92,43,000 கிஷான் கிரெட் கார்டு கடனுதவி வாங்கிக் கொடுத்திருக்கோம். இதுவரை தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் வாங்கிய ரூ.36,25,02,627 கடன் தொகையில் ரூ.17,92,16,997 மட்டும் நிலுவையில் இருக்குது. அதிக பங்குதாரர்கள், அதிக விற்பனை மற்றும் லாபம் ஈட்டல் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இந்திய அளவுல முதல் பரிசு வாங்கியிருக்கோம். இதுதவிர, ஹேண்டு இன் ஹேண்டு இந்தியா (Hand in Hand india) என்ற பன்னாட்டு நிறுவனம், ‘சிறந்த முதன்மைச் செயல் அதிகாரி’க்கான விருது கொடுத்திருக்கு. எங்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இதுவரைக்கும் 6 விருதுகளை வாங்கியிருக்கு’’ என்றார் பெருமையாக.

தொடர்புக்கு,
சிவகுமார்,
செல்போன்: 97509 43814.

ஆசைத்தம்பி
ஆசைத்தம்பி

சரியான எடை... கூடுதல் விலை... உடனடி பணம்!

சீட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் நிலையத்தில் மிளகாய் வத்தலை விற்பனை செய்ய வந்த திம்மன்பட்டியைச் சேர்ந்த ஆசைத்தம்பியிடம் பேசினோம். “ஐம்பது வருஷத்துக்கும் மேல விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். மிளகாய் வத்தல், பாசி, உளுந்து, மல்லிதான் என்னோட முக்கியச் சாகுபடிப் பயிர்கள். அறுவடை முடிஞ்சதும் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் கமிஷன் மண்டிகள்லதான் விக்கிறதுக்குப் போவேன். நூத்துக்கு 6 ரூபாய் கமிஷனா எடுப்பாங்க. எடை போடுற தராசுகள்ல எடை சரியா இருக்காது. விலையும் கிடைக்காது. இப்போ மூணு வருஷமா இந்தச் சீட்ஸ் கம்பெனியிலதான் விக்கிறேன். சந்தை விலையைவிடக் கூடுதலா விலை கிடைக்குது. போக்குவரத்துச் செலவும் மிச்சமாகுது. எல்லாத்துக்கும் மேல எடை சரியா இருக்கு. எடை போட்ட உடனேயே பணத்தைக் கையில எண்ணிடலாம்” என்றார்.

வாரச்சந்தை
வாரச்சந்தை

வாரச்சந்தை

வெள்ளிக்கிழமை வாரச்சந்தையில் மல்லாங்கிணறுவைச் சுற்றியுள்ள விவசாயிகள் விளைபொருள்களைக் கூடாரம் அமைத்து விற்பனை செய்கிறார்கள். காய்கறிகள், பழங்கள், தேங்காய், கீரைகள், முட்டை, பூக்கள், இறைச்சி, பிளாஸ்டிக் சாமான்கள் என அனைத்தும் ஒருங்கே கிடைப்பதால் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மட்டுமல்லாமல் மற்ற விவசாயிகளும் விளைபொருள்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

குடிநீர்
குடிநீர்

5 ரூபாய்க்கு 22 லிட்டர் குடிநீர்

நிறுவனத்தின் வாயில் பகுதியில் டிஜிட்டல் முறையிலான 24 மணி நேரத் தானியங்கி தண்ணீர் வழங்கும் நிலையம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தைப் போட்டால் 22 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. சரியாக ஒரு குடம் முழுவதும் நிரம்புகிறது. அப்பகுதி மக்களைத் தாண்டி, கட்டட வேலைகளுக்குச் செல்வோர், தேநீர்க் கடைகள், உணவகங்களுக்குத் தேவையான குடிநீரும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

பஞ்சவர்ணம்
பஞ்சவர்ணம்

வாடகை 30 ரூபாய்தான்!

காய்கறிச் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வரும் ஆனையூரைச் சேர்ந்த பஞ்சவர்ணம், ‘‘வெள்ளிக்கிழமைன்னா மல்லாங்கிணறுச் சந்தைன்னு ஊருக்கே தெரியும். இங்க மொத்தம் 150 பேர் கடை போட்டிருக்கோம். ஒரு நாள் வாடகையா, 30 ரூபாயை சீட்ஸ் கம்பெனிக்குக் கொடுக்கிறோம். காலையில 10 மணியில இருந்து சாயங்காலம் 6 மணிவரைக்கும் யாவாரம் (வியாபாரம்) நடக்கும். காய்கறிகளோட மளிகைப் பொருளும் கிடைக்குறதுனால, மக்கள் இந்தச் சந்தைக்கு வர்றாங்க. வெளிச்சந்தைகளைவிட இங்கு எல்லாக் காய்கறிகளுமே ரெண்டு மூணு ரூபாய் குறைவாத்தான் விற்போம்” என்றார்.

பல்பொருள் அங்காடி
பல்பொருள் அங்காடி

பல்பொருள் அங்காடி

இதே வளாகத்தில் ‘சீட்ஸ் சூப்பர் மார்க்கெட்’டும் இயங்கி வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு, பயறு, சிறுதானிய வகைகள் இங்கு மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன், வீட்டுக்குத் தேவையான அனைத்து மளிகைப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.1,400 மதிப்புள்ள ஃபார்ம் டூ யூவர் ஹோம் (FARM TO YOUR HOME) என்ற 20 மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்பு (காம்போ பேக்) ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தத் தொகுப்பில், 50 கிராம் மிளகு, தலா 100 கிராம் மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், தலா 250 கிராம் கடலைப்பருப்பு, நீட்டு மிளகாய் வத்தல், காராமணி, புளி, தலா 500 கிராம் பாசிப்பயறு, கறுப்பு கொண்டைக்கடலை, வெள்ளை மொச்சையும், தலா 1 கிலோ உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, நாட்டுச்சர்க்கரை, கல் உப்பு மற்றும் 500 மி.லி சமையல் எண்ணெய் ஆகிய பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொகுப்புப் பொருள்களுக்கான ரூ.1,000-ஐ இரண்டு தவணையாகச் செலுத்தலாம். மற்றவர்கள் ரூ.1,000 செலுத்திப் பெற்றுச் செல்கிறார்கள். வீடுகளுக்கே பொருள்களைக் கொண்டு வந்து கொடுக்கும் (டோர் டெலிவரி) வசதியும் இருக்கிறது.

அன்னபூரணி மெஸ்
அன்னபூரணி மெஸ்

அன்னபூரணி மெஸ்

சீட்ஸ் நிறுவனத்தால் ‘அன்னபூரணி மெஸ்’ நடத்தப்பட்டு வருகிறது. காலையில் இட்லி, தோசை, பூரி, மதியம் சாப்பாடு, லெமன் சாதம், தக்காளி சாதம், தயிர்ச்சாதம் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 100 முதல் 150 பேர்வரை சாப்பிட வருகை புரிகின்றனர்.

பருப்பு அரவை மில்

சந்தை நடக்கும் நாளில் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உளுந்து, பாசி, துவரையை இங்குள்ள அரவை மில்லில் கொடுத்துத் தொலி நீக்கிப் பருப்பாக்கியும், வத்தல், மல்லியைத் தூளாக்கியும் எடுத்துச்செல்லலாம். பயறு வகைகளைப் பருப்பாக்கிட கிலோ ஒன்றுக்கு ரூ.8-ம், வத்தல், மல்லி தூளாக்க கிலோ ஒன்றுக்கு ரூ.12-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயறுகளில் நீக்கப்பட்ட தோலை இங்கே விற்பனை செய்தால் கிலோ ஒன்றுக்கு ரூ.6 மட்டுமே கட்டணமாகப் பெறப்படுகிறது.

நவீன தோசைமாவு அரைக்கும் இயந்திரம்
நவீன தோசைமாவு அரைக்கும் இயந்திரம்

வீட்டுக்கே வரும் தோசைமாவு

நவீன தோசைமாவு அரைக்கும் இயந்திரம் மூலம் தினமும் காலை 10 மணி முதல் 1 மணிவரை இட்லி, தோசைமாவு அரைக்கப் பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை வீடுகளுக்கே கொண்டு போய்க் கொடுக்கிறார்கள். கடைகளில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படும் 700 கிராம் தோசைமாவு, இங்கு ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாகத் தினமும் 500 பாக்கெட்டுகள் வரை விற்பனையாகின்றன.

27 லட்சம் மானியம்

தமிழக அரசின் வேளாண்மைத்துறை மூலம் கடந்த 2018-ம் ஆண்டு ’மானாவாரி நில மேம்பாட்டு திட்ட’த்தின் கீழ் பயறு வகைகளை மதிப்புக்கூட்டுதல், மரச்செக்கு மற்றும் சிறுதானிய மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றிற்காக ரூ.10 லட்சம் மானியம் பெறப்பட்டுள்ளது. இந்த உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் முதல் 5 ஆண்டுகளுக்கு நிர்வாகச் செலவுகள், பயிற்சிகள் அளித்தல் ஆகியவற்றிற்காக ரூ.17 லட்சம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.