Published:Updated:

மோடியின் வேளாண் சட்டங்கள் தெரியும்... எடப்பாடி கொண்டு வந்த வேளாண் சட்ட சிக்கல்கள் தெரியுமா?

Farmer (Representational Image) ( AP Photo / Rajesh Kumar Singh )

விவசாயிகள் பிரச்னைக்கு அரசு எந்தப் பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது என்பதே இந்தச் சட்டத்தின் மறைமுக நோக்கம்.

மோடியின் வேளாண் சட்டங்கள் தெரியும்... எடப்பாடி கொண்டு வந்த வேளாண் சட்ட சிக்கல்கள் தெரியுமா?

விவசாயிகள் பிரச்னைக்கு அரசு எந்தப் பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது என்பதே இந்தச் சட்டத்தின் மறைமுக நோக்கம்.

Published:Updated:
Farmer (Representational Image) ( AP Photo / Rajesh Kumar Singh )

தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைச் சட்டம்-2019-ஐ அமல்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு, வழக்கு குறித்து வேளாண்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 15.02.2021 அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள்

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் லூயிஸ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், 2019-லேயே தமிழக அரசு நமது மாநிலத்துக்கு பிரத்யேகமாக வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளது. அதை கவர்னர் ஒப்புதலுடன் தமிழக அரசு கெஜெட்டிலும் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தைப்போல் மாநில அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திலும் பல குறைகள் உள்ளன.

இந்தச் சட்டத்தால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஒரு விவசாயி நேரடியாகத் தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். இதற்காக ஒப்பந்ததாரர் விரும்பிய இடத்தில் முகாம் அமைத்து அவர்களது விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். அதே நேரத்தில் விவசாயத்தின்போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் பணம் இழப்பீடு செலுத்த முடியாது. விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. ஒரு ஆர்.டி.ஓ லெவலில் கமிட்டி அமைத்து தீர்வு காணப்படும். அதில் திருப்தி இல்லை என்றால் மாவட்ட கலெக்டரிடம் அப்பீல் போகலாம். அதற்கு குறிப்பிட்ட அளவு தொகை கட்டிதான் அப்பீல் செய்ய முடியும். ஒவ்வொரு பிரச்னைக்கு ஏற்ப தொகையின் அளவு கூடும், குறையும். வேளாண் சட்டத்தால் இப்படியான சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

HC Madurai Bench
HC Madurai Bench

தற்போதைய சூழலில் விவசாயிகள் பருவத்துக்கு ஏற்ப விவசாயம் செய்கின்றனர். விதையிட்டு மழை வரவில்லை அல்லது வெள்ளம் அதிகமாகிவிட்டது போன்ற இயற்கைச் சீற்றம் ஏற்படும் காலகட்டத்தில் அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையை அரசு இழப்பீடு வழங்கும். அதே போல் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்றுக் கொள்ளலாம். ஆனால், வேளாண் சட்டத்தால் இது போன்ற விஷயங்கள் இல்லாமல் போய்விடும். ஏன் என்றால் எந்த பிரச்னை என்றாலும் நீங்கள் உங்கள் ஒப்பந்ததாரரிடம்தான் முறையிட வேண்டும் என அரசு கைவிரித்துவிடும்.

விவசாயிகள் பிரச்னைக்கு அரசு எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளாது என்பதே இந்தச் சட்டத்தின் மறைமுக நோக்கம். இந்த வேளாண் சட்டத்தில் ஏற்கெனவே இருக்கக்கூடிய பயிர் காப்பீட்டு திட்டமோ, அரசு கொள்முதல் நிலையம் போன்ற ஒரு வார்த்தை கூட கிடையாது. மொத்தமாகவே அரசின் கடமையே எதுவும் இல்லை என்பதுபோல் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் இருக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லாமல் சூழலில்தான் இந்த வேளாண் சட்டத்தை உருவாக்கியுள்ளனர். விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் சட்டம் என அரசு திணிக்கும்போது விவசாயிகள் வேண்டாம் என்று சொன்னால் அதை அரசு கைவிடுவதுதான் சரியான போக்காக இருக்கும்.

புதிய வேளாண்மை மசோதாவுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண்மை மசோதாவுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்

இந்த வேளாண் சட்டத்தால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபத்தை எடுத்துக்கொள்வார்கள். ஒரு தனி விவசாயிடம் தனியார் நிறுவனம் `எனக்கு தேவையான பயிரை பயிரிடு, இதைப் போடாதே அதைப்போடு நான் சொல்வதைக் கேட்டால்தான் வாங்கிக் கொள்வேன்’ என டாமினேஷன் செய்வார்கள். ஒரு கட்டத்தில் `நான் சொன்னதைச் செய்யவில்லை. நான் கொடுத்த லோனை திருப்பித் தரவில்லை’ எனக்கூறி விவசாயிக்கு ஒண்ணுமே கிடைக்காத சூழலுக்குத் தள்ளப்படலாம். இப்படி கஷ்டப்பட்டு விவசாயிகள் பொருள்களை விளைவித்தாலும் அந்தப் பொருள்களை மொத்தமாக எடுத்துக்கொண்டு பொது விநியோகத்துக்குக் கொண்டுவராமல் தேக்கம் செய்வார்கள். அதனால் விவசாயப் பொருள்களின் விலை உயரும். ஆனால், விவசாயிகளுக்கு எந்த லாபமும் இருக்காது.

அரசுக்கே எதிராகத் திரும்பி, அரசுக்கே பொருள்களை விநியோகம் செய்ய மாட்டார்கள். இதனால் அசாதாரண சூழல் நிலவும். தமிழ்நாடு அரசு போட்டுள்ள சட்டம் வேளாண் பொருள்களுக்கு மட்டும் கிடையாது. கால்நடைகள், ஆடு, மாடு, கோழி என விவசாய உப தொழில்களும் பாதிக்கப்படும். இது தனியாருக்கு சாதகமாக இயற்றப்பட்ட சட்டம். இதனால் விவசாயிகளுக்கு ஒரு சதவிகிதம்கூட லாபம் கிடையாது. மாநில அரசுகளை மத்திய அரசு மறைமுகமாகத் தனித்தனியாக வேளாண் சட்டங்களை இயற்ற வலியுறுத்தியது. ஆனால் கேரளா, உ.பி போன்ற மாநிலங்கள் மாநில வேளாண் சட்டங்களைக் கொண்டுவரவில்லை.

வழக்கறிஞர் லூயிஸ்
வழக்கறிஞர் லூயிஸ்

ஆனால், இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையும் மீறி மத்திய அரசு ஏன் மத்திய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தார்கள் என்றால் எந்த, எந்த மாநிலங்களில் மாநில வேளாண் சட்டங்கள் இல்லையோ அந்த அந்த மாநிலங்களில் மத்திய வேளாண் சட்டம் பொருந்தும் எனக் கூறியுள்ளது. அதனால்தான் டெல்லியில் விவசாயிகள் கடுமையாகப் போராடுகின்றனர். தமிழகத்தில் பலருக்கும் மாநில வேளாண் சட்டம் குறித்து தெரியாத ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தில் அது தொடர்பாக, பெரிய அளவு விழிப்புணர்வுகூட இல்லை. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019-ஐ அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். அந்தச் சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், இது குறித்து வேளாண் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியலாளர் திருச்செல்வம் கூறுகையில், ``வேளாண் சட்டங்கள் சந்தைப்படுத்துதலை மையமாக வைத்து, கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து தோல்வியடைந்த ஒன்று. கிராம அளவில் தீர்வுகளைக் காணாமல் நேரடியாகச் சந்தைப்படுத்தலின் சிக்கலை மாற்றுவேன் எனக் களம் இறங்குவது வருத்தத்துக்குரியது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சட்டம் விவசாயிகளைப் பலப்படுத்தாமல் பொருள்களை வாங்கும் தனியார் நிறுவனங்களைத்தான் பலப்படுத்தும். இந்தச் சட்டத்தால் ஒரு விவசாயி எங்கிருந்து வேண்டுமானாலும் பொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால், இதை வாங்கும் தனியார் நிறுவனம் தரம் இல்லை எனக் கூறி குறைவான விலைக்கு எடுப்பார்கள். இதனால் பொருளும் நஷ்டமடைந்து போக்குவரத்து செலவும் அதிமாகும். ஒரு மரத்தில் ஒவ்வொரு கனியிலும் ஒவ்வொரு தரம் இருக்கும். அதனால் எல்லா கனியையும் தனியார் நிறுவனம் எடுத்துக் கொள்ளாது. தனக்குத் தேவையான கிரேடு ஒன் பழங்களைத்தான் வாங்கிக்கொள்ளும். இரண்டாம் தர மூன்றாம் தர பழங்கள் எல்லாம் விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

திருச்செல்வம்
திருச்செல்வம்

இதே, ஏற்கெனவே இருக்கும் மண்டிகள் மூலம் விற்பனை செய்யும்போது மூன்று ரகத்தையும் எடுத்துக்கொண்டு சூழலுக்கு ஏற்ப விற்பனையை மாற்றுவார்கள். இதனால் விவசாயிக்கு பெரிய லாபம் இல்லை என்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது. ஆனால், வேளாண் சட்டத்தால் விவசாயிகள் கடுமையாக நஷ்டத்தை சந்தித்து விவசாயத்தை கைவிடும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இந்தியாவில் சுமார் 40 கோடி ஏக்கர் விவசாயம் நடக்கிறது என்றால் தனியார் நிறுவங்கள் அனைவரின் பொருளையும் எடுத்துக்கொள்ளாது. நல்ல நீர், நல்ல மண் அமைப்பு நல்ல பொருள்கள் எனத் தேர்வு செய்து வாங்குவார்கள். இதனால் மற்ற விவசாயிகள் கடுமையாகப் பாதிப்பார்கள். 50% வானம் பார்த்த பூமியில்தான் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்கே போவார்கள். விவசாயிகள் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் மல்லுக்கு நிற்க முடியாது. அவன் சொல்வதுதான் சட்டமாக அமையும். எனவே, அரசு செய்ய வேண்டியது குறிப்பிட்ட இடத்தில் என்ன விலையுமோ அதை ஆய்வு செய்து அவர்களுக்கு பரிசீலனை செய்து விவசாயம் செய்ய வைக்க வேண்டும். அரசு சொல்வதைக் கேட்பவர்களுக்குத்தான் லோன், பயிர்காப்பீடு என்று அறிவிக்க வேண்டும். அதனால் விவசாயி நஷ்டம் அடையாமல் கடனையும் கட்டி லாபத்தையும் அடைவார்கள். பயிர் சேதம் அடைந்த 48 மணி நேரம் முதல் 78 மணி நேரத்துக்குள் தீர்வு கண்டு இழப்பீடு வழங்க வேண்டும். இப்படி அரசு நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் பயன் அடைவார்கள். ஆனால், இவையெல்லாம் தனியார் கைக்குப் போனால் விவசாயிகளின் பொருள்களை எளிமையாகத் தட்டிவிடுவார்கள். இதனால் விவசாயிகள் மேலும் மேலும் பலவீனம் அடைவார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.