Published:Updated:

`மாற்று வழியில் வேளாண் சட்டங்களைக் கொண்டு வர நினைக்கிறதா மத்திய அரசு?' - அச்சத்தில் விவசாயிகள்

``மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, போராட்டம் நடைபெற்றதால், சட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆனால், இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்து சட்ட விதிகளால் நிர்வகிக்கப்படும்" - மத்திய வேளாண்துறை அமைச்சர்.

`மாற்று வழியில் வேளாண் சட்டங்களைக் கொண்டு வர நினைக்கிறதா மத்திய அரசு?' - அச்சத்தில் விவசாயிகள்

``மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, போராட்டம் நடைபெற்றதால், சட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆனால், இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்து சட்ட விதிகளால் நிர்வகிக்கப்படும்" - மத்திய வேளாண்துறை அமைச்சர்.

Published:Updated:

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் தங்கள் உயிரை இழந்தனர். போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

போராட்டத்தில் பங்கு பெற்று உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு திட்டம் ஏதேனும் உண்டா, மேலும் இந்த வேளாண் சட்டங்கள் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன என்பது குறித்தும் மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதில் அளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ``புதிதாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை எனவும், ஒருவேளை விவசாயிகள் அப்படி தற்கொலை செய்திருந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மாநிலங்களையே சேரும்" எனக் கூறியுள்ளார்.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

மேலும், இந்தச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, போராட்டம் நடைபெற்றதால், சட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், இந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்ந்து சட்ட விதிகளால் நிர்வகிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் இயற்றப்பட்டுள்ளது என்பது குறித்து, விளக்கமாக யாருக்கும் தெரியாத நிலையில், போராட்டம் செய்து சட்டத்தையே ரத்து செய்த பிறகும், அது தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என அரசு தரப்பில் கூறியிருப்பது, விவசாயிகளிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் பேசுகையில்,

``அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு இயங்கி வருகிறது, இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

ஈசன்
ஈசன்

அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்றம் ஏற்று காலநீட்டிப்பைக் கொடுக்கிறது. பின்பு அரசே சட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்படுகிறது. சட்டம் ஒரு முறை நாடாளுமன்றத்தில் திரும்ப பெறப்பட்டு, அதற்கு ஜனாதிபதியே ஒப்புதல் கொடுத்த பின், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மட்டும் எப்படி செல்லும்.

திரும்பப் பெறப்பட்ட சட்டத்துக்கு விரோதமாக, ஒன்றிய அரசு நீடிப்பைக் கொடுக்க முடியாது. அந்த ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்று அரசு சொல்வதற்கு அதிகாரமே கிடையாது.

ஆனால், சட்டத்துக்கு விரோதமாக, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொல்வதை வைத்து இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பது புரிகிறது. ஒப்பந்த சாகுபடிக்குள் விவசாயியைக் கொண்டு போய் விவசாயிகளை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் இந்த அரசாங்கம் வெளிப்படுத்துகிறது.

பல்வேறு நாடுகளில் ஒப்பந்த சாகுபடி விவசாயிகள் சந்திக்கக்கூடிய சிரமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே ஒப்பந்த சாகுபடிக்கு உட்பட்ட கோழிப்பண்ணை மற்றும் கரும்பு விவசாயிகள் பணம் கிடைக்காமல் சுற்றிக் கொண்டுள்ளார்கள். இன்னும் இவர்களுடைய வாழ்வாரத்தை மீட்க முடியவில்லை.

கரும்பு விவசாயிகள்
கரும்பு விவசாயிகள்

இந்நிலையில் அரசாங்கத்தின் அறிவிப்பு, விவசாயிகள் மீதான வன்மத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஒப்பந்தங்கள் என அரசு குறிப்பிடுவதையும், இதுவரை ஒப்பந்தத்தில் ஈடுபட்ட நிறுவனங்கள் வெளிப்படை தன்மையோடு தங்களுடைய வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவில்லை. இப்படி இருக்கையில் எப்படி ஒப்பந்தங்கள் செல்லும் என்பதே புரியவில்லை. இல்லாத ஒரு கட்டுக் கதையாகவே நீடித்து வருகிறது.

தொடர்ந்து இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும், இன்னொரு வடிவத்தில் கொண்டு வருவோமென பாரதிய ஜனதா கட்சியாளர்கள் சொல்லிக்கொண்டே உள்ளார்கள். இவற்றையெல்லாம் பார்த்தால் மீண்டும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவார்களோ, இல்லையென்றால் மறைமுகமாக அமல்படுத்த நேரிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது'' என்று ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார்.