Published:Updated:

`விதைக்கு வட்டி; மாடுகளுக்கு பாஸ்!' - தேனி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காரசார விவாதம்

விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க, அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட தேனி மாவட்டத்தில், மாதம் ஒருமுறை நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம், விவசாயிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், தேனி விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க, அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ்
கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ்

மலைகள்சூழ் மாவட்டமான தேனியில், மலைப்பகுதிகளை மேய்ச்சல் நிலமாகக் கொண்ட பாரம்பர்ய மலைமாடுகளுக்கு அனுமதி (பாஸ்) அளிப்பதில் சமீபகாலமாக வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், மலைமாடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில், தற்போது மலைமாடுகளுக்கு பாஸ் அளிக்க சம்மதம் தெரிவித்த வனத்துறை, 100 மாடுகளில் 10 மாடுகளுக்கு மட்டுமே மேய்ச்சல் பாஸ் வழங்கியுள்ளது.

இதனால், தேனி மாவட்டம் முழுவதும் 2,000 மாடுகளுக்கு மட்டுமே பாஸ் கிடைத்திருக்கிறது. இதை முன்வைத்து பேசிய மலைமாடுகள் வளர்ப்பு சங்க நிர்வாகிகள், `15 மாடுகளுக்கு பாஸ் வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். `மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம் மற்றும் கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் இருவரும் இதுதொடர்பாக பேசி முடிவெடுக்கலாம்' என்றனர்.

தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் விவசாயிகள்
தங்களது கோரிக்கைகளை முன்வைக்கும் விவசாயிகள்

அடுத்ததாக, மேகமலை வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட இந்திராகாலனி, பொம்மராஜபுரம் ஆகிய மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது. இதனால், அப்பகுதிகளில் விளையும், பீன்ஸ், உருளைக்கிழங்கு உட்பட காய்கறிகளை மார்க்கெட்டுக்குக் கொண்டுவர முடியாத சூழல் நிலவியது. இதனால், சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

மாவட்ட நிர்வாகத்திடம் தொடச்சியாக வலியுறுத்திய பிறகு, வாரம் ஒரு நாள், புதன்கிழமை மட்டும் வாகனம் சென்று காய்கறிகளை ஏற்றிவர வனத்துறை அனுமதியளித்தது. தினந்தோறும் விளையும் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொடுத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு, ஒரு நாள் அனுமதி என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்தது. அதை முன்வைத்து தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் பேசினார். ``அந்தப் பகுதிகளுக்கு வாகனம் செல்ல அனுமதி இல்லை. ஒரு நாள் அனுமதி கொடுத்ததே பெரிய விஷயம். அதற்கு மேல் அனுமதி கொடுக்க முடியாது” என்று கறாராகப் பேசினார் மேகமலை வன உயிரின காப்பாளர்.

விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம்

இதனால், மேகமலை காப்பாளருக்கும் விவசாயிகளுக்கும் காரசார விவாதம் நடந்தது. கடைசியில், கலெக்டர் தலையிட்டு சமாதானம் செய்தார். தொடர்ந்து, இரண்டு நாள்கள் அனுமதிப்பதாகக் கூறினார் மேகமலை காப்பாளர். ஆனால், வாரம் மூன்று நாள்கள் அனுமதி கேட்டனர் விவசாயிகள். மேகமலை வன உயிரின காப்பாளர் அதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் காய்கறிகளை மலையில் இருந்து கொண்டுவர வாகனம் அனுமதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

தொடர்ந்து, கரும்பு விவசாயி ஒருவர், கலெக்டர் முன்னிலையில் வந்து, ``ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை எனக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை இன்னும் கொடுக்கவில்லை. ஆனால், நான் அவர்களிடம் வாங்கிய கரும்பு விதைக்கு வட்டி போட்டு என்னிடம் பணம் வசூல் செய்திருக்கிறார்கள்” என்றார். அதைக் கேட்ட கலெக்டர் அதிர்ச்சியடைந்தார். கூட்டத்துக்கு வந்திருந்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகியைப் பார்த்து, ``விதைக்கு வட்டி கேட்கிறீர்கள். இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்துக்கு வட்டி கொடுப்பீர்களா?” என்றார். அதற்கு அந்த நிர்வாகியால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை. ``ஆலை நிர்வாகத்தினரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள். விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால், நான்தான் கேட்க வேண்டும்” என்றார்.

`நாட்டு மாடு இனத்தை அழிக்க நினைக்கிறார்கள்!' - மலைமாடு வளர்ப்போர் வேதனை

அதேபோல், வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான 9 கி.மீ சாலையில், ஒரு இடத்தில் மட்டும் 1 கி.மீ சாலை போட வனத்துறை அனுமதி அளிக்க மறுப்பது குறித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.

பின் செல்ல