Published:Updated:

மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, பசுந்தீவன உற்பத்தி... அசத்தும் அரங்கனூர் உழவர் மன்றம்!

உழவர் மன்றம்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் மன்றம்

சுவடுகள்

மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, பசுந்தீவன உற்பத்தி... அசத்தும் அரங்கனூர் உழவர் மன்றம்!

சுவடுகள்

Published:Updated:
உழவர் மன்றம்
பிரீமியம் ஸ்டோரி
உழவர் மன்றம்

கடந்த 14 ஆண்டுகளாக ‘பசுமை விகட’னுடன் பின் ஏர் பிடித்த விவசாயிகள் ஏராளம். புதிய தொழில்நுட்பம், மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய விதைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்கள், இடுபொருள் தயாரிப்பு, மதிப்புக்கூட்டல், பயிற்சி, கருத்தரங்குகள் உள்ளிட்ட ஒவ்வொன்றிலும் பயன்பெற்ற முன்னோடி விவசாயிகள் இருக்கிறார்கள். பசுமை விகடன், ஆரம்பகாலங்களில் இத்தகைய முன்னத்தி ஏர்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது. அந்த விவசாயிகளைப் பலரும் பின்பற்றினார்கள். அந்த வகையில், பசுமை விகடன் ஆரம்ப காலங்களில் பதிவு செய்த பண்ணைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றன. அந்தப் பதிவால் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகள், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கற்றுக்கொண்ட பாடங்கள்பற்றிப் பேசுகிறது இந்த ‘மறுபயணம்’ பகுதி.

ற்றுமை என்பது வெறும் சொல் மட்டுமல்ல... செயல்பாட்டின் உச்சம். அதற்கு உதாரணமாக இருக்கிறது சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் குறிஞ்சி உழவர் மன்றம். வறண்ட மேட்டு நிலப்பகுதி விவசாயிகள் குழுவாக இணைந்ததால், இன்றைக்கு அந்தப் பகுதி பசுமை பூமியாகக் காட்சி தருகிறது. அரசின் திட்டங்கள் உழவர்கள் வயலை வந்து சேர்கின்றன. இத்தனைக்கும் அடிப்படை காரணமாக இருப்பவர் தாயுமானவன். சேலம் மாவட்டம், ஓமலூர் நகரத்தில் வசிக்கும் இவர் முயற்சியால் அரங்கனூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ஒற்றுமை பட்டொளி வீசிப் பறக்கிறது. பசுமை விகடனால் நிலம் வாங்கி விவசாயம் செய்து வரும் இவர், இதோடு அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக உழவர் மன்றங்களைத் தொடங்கி விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறார். பசுமை விகடன் முன்னெடுக்கும் மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, இயற்கை விவசாயத்தை உழவர் மன்றங்களின் மூலம் முன்னெடுத்து வருகிறார். அவரைச் சந்திப்பதற்காக மேச்சேரி ஒன்றியம், அரங்கனூரை அடுத்த கருமத்தான் கொட்டாய்க்குப் பயணமானோம்.

ஊரைச் சுற்றிலும் காடுகள், கரடு முரடான மேட்டு நிலங்கள், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் நடக்கும் மானாவாரி பகுதி. ஆனால், தென்மேற்குப் பருவமழையாலும், உழவர் மன்றம்மூலம் முன்னெடுத்த நீர் மேலாண்மை பணிகளாலும் பச்சை பசேல் என்று காட்சி யளிக்கிறது. உழவர் மன்றக் கூட்டம் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. கூட்டம் முடிந்த பிறகு, நம்மிடம் பேசிய அரங்கனுர் குறிஞ்சி உழவர் மன்ற நிறுவனர் தாயுமானவன்,

உழவர் மன்றத்தில் உள்ள விவசாயிகள்
உழவர் மன்றத்தில் உள்ள விவசாயிகள்

“பசுமை விகடனை ஆரம்பகாலத்துல இருந்தே படிச்சிட்டு வர்றேன். அந்தத் தூண்டுதல்ல அரங்கனூர்ல 3 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். 2013-ம் வருஷம், செங்கல்பட்டு அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில மரம் வளர்ப்பு சம்பந்தமா மாபெரும் கருத்தரங்கைப் பசுமை விகடன் நடத்திச்சு. அந்தக் கருத்தரங்கில் பேசுன நபார்டு வங்கி அதிகாரி புவனேஸ்வரி, உழவர் மன்றம் பத்தி சொன்னாங்க. அடுத்த 10 நாள்ல 15 பேர் கொண்ட அரங்கனூர் குறிஞ்சி உழவர் மன்றத்தைத் தொடங்கிட்டோம். நபார்டும் இதை அங்கீகரிச்சு, எங்க பணிகளுக்கு ஊக்கம் கொடுத்துச்சு. உழவர் மன்றம் தொடங்குனது சம்பந்தமா பசுமை விகடனுக்கு அப்போதே கடிதம் அனுப்பியிருந்தேன். அந்தக் கடிதம் 25.4.2013 பசுமை விகடன் இதழில் பிரசுரிக்கப்பட்டது.

முதற்கட்டமா கொல்லோபி நாயக்கனூர்ல இருந்து மூலப்பாறை வரைக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவியோட 2.5 கி.மீ தார்ச்சாலை அமைச்சு கொடுத்தோம். சாலையின் ரெண்டு பக்கமும் மரங்கன்றுகள் நட்டு வளர்த்துட்டு வர்றோம். சேலத்திலிருந்து கருமத்தான் கொட்டாய்க்கு நேரடி பேருந்து வசதி கொண்டு வரக் கலெக்டர் மூலமா ஏற்பாடு செஞ்சோம். உடல் ஊனமுற்றோர், வயதானவர்களுக்கு மாதம்தோறும் கிடைக்கும் அரசின் உதவித் தொகையை சுமார் 50 பேருக்கு வாங்கிக் கொடுத்திருக்கோம். இது மட்டும்தான் பொதுமக்களுக்கானது. மத்ததெல்லாம் விவசாயிகளுக்கானது” என்றவர் அதைப் பற்றியும் விவரமாகப் பேசினார்.

பயனடைந்த கிராம மக்கள்
பயனடைந்த கிராம மக்கள்


“விவசாய நிலங்கள்ல மரம் வளர்ப்பை முன்னெடுக்க நினைச் சோம். மர வளர்ப்ப பத்தி தெரிஞ்ச வங்க, ‘வேம்பு, தேக்கு பலன் கொடுக்க அதிக வருஷம் ஆகும். பீநாரி நடுங்க 7 - 8 வருஷத்துல பலன் பார்த்துடலாம். மானாவாரியில தண்ணி வசதி இல்லைன்னாலும் வளரும்’னு சொன்னாங்க. அதனால குழுவுல இருக்கிற விவசாயிகளோட நிலங்கள்ல வனத்துறையில இருந்து சுமார் 50,000 கன்றுகளை வாங்கிக் கொடுத்தோம்.

பிறகு, குழுவுல இருக்கிற ஒரு விவசாயியோட நிலத்துல வேளாண் பொறியியல் துறை உதவியோட சோலார் பம்ப்செட் அமைச்சு கொடுத்தோம். இந்தப் பகுதியிலேயே அமைச்ச முதல் சோலார் பம்ப்செட் அது. நிறைய பேரு வந்து பார்த்துட்டுப் போறாங்க. தோட்டக்கலைத் துறை மூலமா 5 லட்சம் ரூபாய் மானியத்துல டிராக்டர் கிடைச்சது. அத குழுவுல இருக்கிற விவசாயிகிட்ட குத்தகைக்கு ஒப்படைச்சிருக்கோம். அவர் குழுவுல இருக்கிறவங்களோட நிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓட்டுவாரு. மத்த நேரங்கள்ல மத்தவங்களுது ஓட்டுவாரு. இதுமூலமா அவருடைய வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி பண்ணியிருக்கோம்.

உழவர் மன்ற விவசாயிகள்
உழவர் மன்ற விவசாயிகள்

பண்ணைச் சுற்றுலா

ஆமணக்கு சாகுபடியைப் பெருக்கணுங்கற நோக்கத்துல 150 விவசாயிகளுக்குத் தலா 2 கிலோ விதை கொடுத்துச் சாகுபடி செய்யச் சொல்லியிருக்கோம். இதுவரைக்கும் சொட்டு நீர்ப் பாசனமே அதிகம் எட்டிப்பார்க்காத இந்தப் பகுதியில குழுவுல உள்ள 5 விவசாயிகளுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் போட்டுக் கொடுத்திருக்கோம். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, தலா 5 சென்ட் அளவுல 35 ஏக்கருக்கு விதைக்கரணை கொடுத்துப் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய வெச்சிருக்கோம். இயற்கை விவசாயப் பயிற்சி கொடுக்கிறோம். பண்ணைச் சுற்றுலாவும் அழைச்சிட்டு போறோம். மகளிருக்கு தையல், அழகு நிலையம் அமைக்குறதுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்” என்று அடுக்கியவர், “என்னோட படிச்ச நண்பர் சுதன்குமார் அரங்கனுரைச் சேர்ந்தவர். அவர் குழுவுல உறுப்பினரா இருக்காரு. அவர் இங்கிருக்கும் பணிகளை ஒருங்கிணைச்சு, நடத்திட்டு வர்றாரு” என்று அவரை அறிமுகப்படுத்தினார். அவரிடம் பேசினோம்.

விவசாயத்துக்கு சோலார் அமைப்பு
விவசாயத்துக்கு சோலார் அமைப்பு


ஏரி சீரமைப்பு

“நபார்டு மூலமா இயங்குற உழவர் மன்ற பணிகள் ஒருபக்கம். இன்னொரு பக்கம் தோட்டக்கலைத் துறை சார்பா 100 விவசாயி களைக் கொண்ட அரங்கனூர் உழவர் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்கினோம். அதுவும் சிறப்பா நடந்துட்டு வருது. அரங்கனுரையொட்டித் தைலாகவுண்டனூர் ஏரி இருக்குது. அதுக்காகத் தைலாகவுண்டனூர் ஏரி ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கினோம். அரசு சார்பா நாலரை லட்சம் கொடுக்க, ஆயக்கட்டு தாரர்கள் சார்பா 3 லட்சம் போட்டு 12 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியைச் சுற்றிலும் பலமான கரைகள் அமைச்சு, சீர்படுத்தினோம். ஏரியைச் சுற்றிலும் 1,000 மரக்கன்றுகள், 5,000 பனைவிதைகள விதைச்சோம். மரக்கன்றுகள நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் பராமரிச்சிட்டு வர்றோம்” என்றவர், சீரமைத்த ஏரியை அழைத்துச் சென்று காட்டினார். நூறுநாள் வேலைத் திட்டத்தில் உள்ளவர்கள் மரக்கன்றுகளைச் சுற்றியிருந்த களைகளை அகற்றிக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து பேசிய சுதன்குமார், “அரங் கனூர் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் என்கிற பேர்ல தூர்ந்துபோன ஆழ்துளைக் கிணறுகள்ல தண்ணீர் கொண்டு வரக் கிணறுகளைச் சுற்றிக் குழி எடுத்து மழைநீரைச் சேகரிக்கிறோம். விவசாய நிலங்கள்ல பண்ணைக்குட்டைகள் வெட்டிக் கொடுத்திருக்கிறோம். இதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை விவசாய நிலங்கள்ல உயர்த்திட்டு வர்றோம்” என்றார்.

சீரமைக்கப்பட்ட தைலாகவுண்டனூர் ஏரி
சீரமைக்கப்பட்ட தைலாகவுண்டனூர் ஏரி
ஏரியின் கரையில் வளர்க்கப்படும் மரங்கள்
ஏரியின் கரையில் வளர்க்கப்படும் மரங்கள்

உழவர் மன்றத்தின் மூலம் பலன்பெற்ற விவசாயிகளில் ஒருவரான தைலாகவுண்ட னூர் வைத்தியலிங்கம் தோட்டத்துக்குச் சென்றோம்.

தினசரி வருமானம்

“அரங்கனூர் குறிஞ்சி உழவர் மன்றத்தில உறுப்பினராக இருக்கேன். எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. நிலக்கடலை, காராமணியைத் தான் மானவாரில விதைப்போம். பிறகு, போர்வெல் போட்டேன். மானியத்துல சோலார் பம்ப்செட் அமைச்சிருக்கோம். 5.75 லட்சம் மதிப்புள்ள சோலார் அமைப்புக்கு 80,000 ரூபாய் மட்டும்தான் கட்டினேன். மீதி பணம் முழுக்க மானியம்தான். போர்வெல் 650 அடி ஆழத்துல இருக்கு. 7.5 ஹெச்.பி பவர்ல தண்ணி எடுத்திட்டு இருக்கோம். சோலார் போட்ட பிறகுதான் தக்காளி, காய்கறிகள்னு பயிர் செஞ்சிட்டு வர்றேன். முன்னெல்லாம் 6 மாசத்துக்கு ஒருமுறை வருமானம் பாத்துட்டு இருந்த நான், இப்போ தினமும் வருமானம் பாக்கிறேன். தண்ணி வசதி வந்த பிறகு எம்.பி.ஏ படிச்சிட்டு வேலையில இருந்த என் மகனும் இப்போ விவசாயத்துக்கு வந்துட்டார். போர்வெல்ல தண்ணி வந்துட்டு இருந்தாலும், அதுல மழைத்தண்ணி விழுற மாதிரி அமைப்பையும் அமைச்சு கொடுத்திருக்காங்க. அதனால போர்வெல் தூர்ந்துபோகாம செயல்பட்டுட்டு இருக்கு” என்றார்.

வைத்தியலிங்கம் அவரது மகன் மற்றும் மனைவி
வைத்தியலிங்கம் அவரது மகன் மற்றும் மனைவி


தூண்டுகோலாக இருந்த பசுமை விகடன்

நிறைவாகப் பேசிய தாயுமானவன், “சாலை வசதி, தரிசு நில மேம்பாடு, ஏரி சீரமைப்பு, இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை எனச் சுற்றுவட்டார கிராமங்கள்ல செய்திட்டு வர்றோம். நபார்டு, ஹேண்டு இன் ஹேண்டு, கால்நடை பராமரிப்புதுறை, சேலம் மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலை, வேளாண்மைத் துறைனு பலதுறை அதிகாரிகளும் அலுவலர்களும் ஒத்துழைப்பு கொடுத்துட்டு இருக்காங்க. இங்கே குடிநீருக்கும் பாசனத்துக்கும் காவிரி நீரைக் கேட்டுட்டு இருக்கோம். அது வந்தா இன்னும் இந்த மக்களுக்கு உதவியா இருக்கும். இங்கு நாங்கள் செய்து கொண்டிருக்கும் பணிகள் அத்தனைக்கும் தூண்டுகோலாகவும் உந்து சக்தியாகவும் இருந்தது பசுமை விகடன் தான்” என்று சொல்லி நெகிழ்ச்சியோடு விடைகொடுத்தார்.தொடர்புக்கு, தாயுமானவன்,

செல்போன்: 94434 71816

சுதன்குமார்,

செல்போன்: 94451 07822

குழுவால் கிடைத்த உதவி

ஒண்டிவீரனூரைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், “எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம்தான் இருக்கு. அதுல வர்ற வருமானம் போதுமானதா இல்ல. இப்போ குழு மூலமா குத்தகைக்கு டிராக்டர் கொடுத்திருக்காங்க. குழுவுல இருக்கிற நிலங்கள ஓட்டுறதோடு, அக்கம்பக்கத்திலயும் வாடகைக்கு ஓட்டிட்டு இருக்கேன். என்னால ஒரு டிராக்டர் வாங்குறதெல்லாம் நினைச்சு பார்க்க முடியாத விஷயம். குழுவுல இணைஞ்சது மூலமா என் குடும்பத்தை நடத்த வழி கிடைச்சிருக்கு” என்றார் உவகையோடு.

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி
மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

நீர் மேலாண்மை திட்டங்களுக்காக 65 லட்சம் ரூபாய்

ஹேண்டு இன் ஹேண்டு இந்தியா அமைப்பின் முதன்மை மேலாளர் சின்னசாமி, “தண்ணியிருந்தால் மட்டுமே கிராமங்களில் விவசாயம் செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது. அதற்காக அரங்கனூரில் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்திட்டு வருகிறோம். இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது வெப்பநிலை அதிகரித்து வருவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதையும் அறிந்தோம். இதற்காக விவசாயிகள் அடங்கிய குழுவை உருவாக்கி ஆழ்துளைக் கிணறுகள், கிணறுகளில் நீரை வரவழைக்கும் அமைப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகிறோம். இதோடு அந்தந்த நிலங்களிலேயே தண்ணீர் தேங்குவதற்கு ஏற்றவாறு மண் வரப்பு அமைக்கும் பணியை யும் செய்து வருகிறோம். நிலத்தின் ஓரத்தில் தண்ணீர் தேங்குவதற்கான பள்ளங்கள், பண்ணைக்குட்டைகளை அமைத்துத் தந்திருக்கிறோம். இதற்காக நபார்டு எங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 65 லட்சம் ரூபாய். இதுவரை 35 லட்சம் ரூபாய்க்கான பணிகள் நடந்துள்ளன. இன்னும் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது” என்றார்.

போர்வெல் ரீசார்ஜ் அமைப்பு
போர்வெல் ரீசார்ஜ் அமைப்பு

கிணறு, போர்வெல்லுக்கு ரீசார்ஜ்

பால் உற்பத்தியாளர் கார்த்திக், ‘‘டிப்ளோமா மெக்கானிக் படிச்சிட்டு வேலையில இருந்தேன். இப்போ 8 மாடுகள வெச்சு பால் உற்பத்தி செஞ்சிட்டு வர்றேன். குழு மூலமா, கோ-5 விதைக்கரணை, சொட்டுநீர்ப் பாசனம் ஏற்பாடு செஞ்சுகொடுத்தாங்க. இத நாமே தனியா செஞ்சிருந்தா 1 லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். கிணத்துல தண்ணி இல்ல. அதுல தண்ணி கொண்டு வர்றதுக்காகக் கிணத்துக்குப் பக்கத்திலேயே மழைநீரைச் சேமிச்சு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் அமைப்பை அமைச்சிருக்காங்க. இதே போன்று போர்வெல்லுக்கும் ரீசார்ஜ் அமைப்பை அமைச்சு கொடுத்திருக்காங்க. 10 சென்ட்ல ஆமணக்கும் குழு மூலமா விதைச்சிருக்கோம். குழு மூலமா நிறைய பலன்கள அனுபவிச்சிட்டிருக்கேன். சொல்லப்போனா உழவர் மன்றங்கள் மூலமா இவ்வளவு நன்மைகள் நடக்குதான்னு இப்பதான் தெரியுது. விவசாயிகள் அந்தந்தப் பகுதில இருக்கிறவங்க இது போன்ற விஷயங்களைப் பயன்படுத்திக்கணும்” என்றார் நெகிழ்ச்சியாக.

தாயுமானவன், சுதன்குமார், அழகேசன், ஜெயராமன், கார்த்திக்
தாயுமானவன், சுதன்குமார், அழகேசன், ஜெயராமன், கார்த்திக்

குழுவாக இணைந்தால் கோடி நன்மை

நபார்டு வங்கியின் சேலம் மாவட்ட உதவிப் பொது மேலாளர் அ.பாமா புவனேஸ்வரி, “விவசாயத்தில், விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் எடுக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். இதற்கு விவசாயிகள் குழுக்களாக இணைந்தால்தான் அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி முன்னேற முடியும். 2013-ல் தொடங்கப்பட்ட அரங்கனூர் குறிஞ்சி உழவர் மன்றத்துக்கு, வேளாண்மை, தோட்டக்கலை என அனைத்துத் துறைகளோடும் இணைந்து செயல்படுவது, விவசாயிகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வங்கிகளைக் கிராமங்களுக்கு அழைத்து வருவது, மாதம்தோறும் குழுவின் கூட்டத்தைக் கூட்டுவது என்று பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தோம். இதையெல்லாம் சரியாகச் செய்து முன்னேறி வருகிறது இந்த உழவர் மன்றம்.

மத்திய அரசின் அறிவிப்பின்படி உழவர் மன்றம் தொடங்குவது 2018-19-ம் ஆண்டோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது உழவர் மன்றப் பணிகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்மூலம் முன்னெடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குறிஞ்சி உழவர் மன்றத்தை உற்பத்தியாளர் நிறுவனமாக மாற்ற அறிவுறுத்தியிருக்கிறோம். நிறுவனமாக மாற்றினால்தான் நிறைய திட்டங்கள், மானியங்களைப் பெற முடியும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க 200 பேர் இருந்தால்கூடப் போதும். பிறகு போகப் போக ஆட்களைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நபார்டு வங்கி அலுவலர்களை அணுகலாம்” என்றார்.

தொடர்புக்கு, பாமா புவனேஸ்வரி, செல்போன்: 94459 67265

பண்ணைக்குட்டை
பண்ணைக்குட்டை
பீநாரி மரங்கள் வளர்ப்பு
பீநாரி மரங்கள் வளர்ப்பு

மரங்கள் மூலமும் வருமானம்

ஒண்டிவீரனூரைச் சேர்ந்த விவசாயி அழகேசன், “எனக்கு 5 ஏக்கர் இருக்கு. எல்லாமே மேட்டுநிலம். நிலக்கடலை, காரா மணி பயிர் செஞ்சிட்டு வந்தேன். மூணு வருஷத்துக்கு முன்ன 1,500 பீநாரி மரங்கன்றுகள கொடுத்தாங்க. அத நட்டு வளர்த்ததுல 300 போயிடுச்சு. 1,200 மரங்கள் வளர்ந்து நிக்குது. 10-க்கு 10 அடி இடைவெளியில நட்டிருக்கிறதால, உழவு ஓட்டுறதுக்கும் பிரச்னை இல்ல. முதன்மைப் பயிர்களை வழக்கம்போல சாகுபடி செஞ்சிட்டு இருக்கேன். இன்னும் 4 வருஷம் கழிச்சு மரங்கள்ல இருந்தும் ஒரு வருமானம் பார்த்திடுவேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism