Published:Updated:

கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டம்... தயாராகும் தமிழக விவசாயிகள்!

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி, டிசம்பர் 14-ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கவிருக்கிறார்கள்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். போராடிவரும் விவசாயிகளிடம் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுவருகிறது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள். இந்தநிலையில்தான், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. பல மாநிலங்களில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது.

`பிரதமர் மோடி பொய் சொல்கிறார்... தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடையும்!’ - பெ.மணியரசன் ஆவேசம்

இத்தகைய சூழலில், டிசம்பர் 9-ம் தேதி மத்திய அரசுக்கும், விவசாயிகள் பிரதிநிதிகளுக்கும் இடையே 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற டிசம்பர் 8-ம் தேதியன்று விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீண்டது. மூன்று சட்டங்களையும் வாபஸ் வாங்க முடியாது என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார். விவசாயிகளோ, தங்கள் கோரிக்கையில் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற போராட்டம்
சென்னையில் நடைபெற்ற போராட்டம்

டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்துக்கு முன்பாகவே பல மாநிலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் மாநில அளவிலான போராட்டத்தை தி.மு.க நடத்தியிருக்கிறது. இந்தநிலையில், அடுத்தகட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், டிசம்பர் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஒருங்கிணைப்புக்குழுவில் சுமார் 50 சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. காத்திருப்புப் போராட்டத்துக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கில் விவசாயிகளைத் திரட்ட முடிவுசெய்திருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் நம்மிடம் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு