Published:Updated:

`நிதி நெருக்கடியில்கூட இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமா?’ -கொதிக்கும் 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கம்

போராட்டம்
போராட்டம் ( எம். விஜயகுமார் )

இந்த விவசாய நிலத்தில் விளைந்த உணவுகளைத்தான், மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினோம். அந்த விளைநிலங்களை 10 ஆயிரம் கோடி செலவு செய்து மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டம், 10 ஆயிரம் கோடியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என 5 மாவட்டங்கள் வழியாக 277 கி.மீட்டர் போடப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு கடந்த 2018 -ல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, இந்த 5 மாவட்டங்களிலும் போராட்டம் வெடித்தது. அதையடுத்து வழக்கு தொடரப்பட்டது.

போராட்டம்
போராட்டம்

தற்போது, 8 வழிச் சாலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் இவ்வழக்கை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் மனுத்தாக்கல் செய்தது. அதையடுத்து, 8 வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளோடு கறுப்புக்கொடி ஏந்தி மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் 5 மாவட்டங்களில் மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது.

இதுபற்றி 8 வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், ''கொரோனா நிவாரண நிதி வழங்க அரசிடம் பணம் இல்லையென்று, பொதுமக்களிடம் அன்பளிப்பு பெற்றுவருகிறது. இந்நிலையில், 10 ஆயிரம் கோடியில் 8 வழிச் சாலை போட மும்முரம் காட்டி வருவது முரணாக இருக்கிறது. கொரோனா ஊரடங்கால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவின்றி திண்டாடி வருகிறார்கள்.

விளை நிலங்களை அதிகரிக்கச் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். ஆனால், இருக்கும் விவசாய நிலங்களையும் அழிக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. எங்கள் நிலம் எங்கள் உரிமை. எங்கள் உயிர் போனாலும் அழிவுத் திட்டத்திற்கு நிலங்களைக் கொடுக்க மாட்டோம்'' என்றார்.

விவசாயி சிவகாமி, ''கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்கூட செய்யவிடாமல், அவர்களுடைய நிதியை மத்திய அரசு பறித்துக்கொண்டது.

அருள் ஆறுமுகம்
அருள் ஆறுமுகம்

இந்த நிதி நெருக்கடியான நிலையில், 8 வழிச் சாலை வழக்கை விரைவாக முடிக்க வேண்டுமென மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்தத் திட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படும். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது. ஏற்கெனவே தமிழகத்தில் 50 சதவிகித விவசாய நிலங்கள் அழிந்துவிட்டன. மேலும் விவசாய நிலங்களை அழிக்க விட மாட்டோம். இந்த விவசாய நிலங்களில் விளைந்த உணவுகளை மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக வழங்கினோம். அந்த விளை நிலங்களை 10 ஆயிரம் கோடி செலவு செய்து மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு