Published:Updated:

`அத்தனைக்கும் காரணம் அமைச்சர் தங்கமணிதான்!’ - கொதிக்கும் கொங்கு விவசாயிகள்

சிறையில் இருந்து வெளியே வந்த சூட்டோடு, தீவிரமாக அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து கூடி ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் உயர்மின் கோபுர விவசாயிகள்
ஆலோசனைக் கூட்டத்தில் உயர்மின் கோபுர விவசாயிகள்

விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் நொந்துபோய்க் கிடக்கின்றனர். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பலகட்டப் போராட்டங்களை நடத்தியும், அரசு கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை. இதற்கிடையே, கடந்த மாதம், அரசை எதிர்த்துப் போராடிய உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான கூட்டியக்கத்தினர் மற்றும் விவசாயிகள் என 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உயர்மின் கோபுர விவசாயிகள்
உயர்மின் கோபுர விவசாயிகள்

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு கடந்த சில நாள்களுக்கு முன்பு 5 பேரும் ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றனர். வெளியே வந்த சூட்டோடு, தீவிரமாக அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து கூடி ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உயர்மின்கோபுரங்களுக்கு எதிரான கூட்டமைப்பினர் மற்றும் விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். விசாரணைக்கு என அழைத்துச் சென்று 5 பேரையும் போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, கூட்டத்தில் பலரும் கொதித்திருக்கின்றனர்.

போராட்டத்தின் போது உயர்மின் கோபுர விவசாயிகள்
போராட்டத்தின் போது உயர்மின் கோபுர விவசாயிகள்

கைதுக்கு அஞ்சாமல், மாநில அளவில் அடுத்தகட்டமாக வருகிற 18-ம் தேதியன்று கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், கரூர், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் செய்து அரசை அதிர வைப்பதென முடிவெடுத்திருக்கின்றனர்.

உயர்மின் கோபுரத்துக்கு மாற்றுத்தீர்வான புதைவடத்தை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும். உழவர்கள் விரோத 1885-ம் ஆண்டு இந்திய தந்தி சட்டத்தை நீக்கிவிட்டு பாதிக்கப்படுபவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். 2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டத்தின்படி நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட இருக்கின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு என அழைத்துச் சென்ற கூட்டமைப்பினர் 5 பேரை, கைது செய்து ஒரு மாதம் சிறையில் அடைத்ததற்கு அமைச்சர் தங்கமணிதான் காரணம் என விவசாயிகள் கொதிப்பில் இருக்கின்றனர்.

உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான கூட்டியக்க நிர்வாகிகள் கூறுகையில், ``மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியுடன், கூட்டியக்க நிர்வாகிகள் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எங்கள் கோரிக்கைகளை கேட்டும் மெத்தனமாக இருக்கிறார். இனியும் அமைச்சரை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. அவர் தூண்டுதலின் பேரில்தான் கூட்டியக்க நிர்வாகிகள் 5 பேர் ஒருமாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அமைச்சர் இனியும் எங்களை இப்படி வஞ்சிக்கக் கூடாது. வருகிற 10-ம் தேதிக்குள் முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். அவர் எங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கொடுப்பார் என்று நம்புகிறோம்” என்றனர்.