Published:Updated:

`நிலத்தை அபகரிப்பது, தாலியைப் பறிப்பதற்குச் சமம்!' -திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த பெண்கள்

தாலியுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
தாலியுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

`விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு காவல்துறையை வைத்து திட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள்'.

உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரத்தால் நாளுக்கு நாள் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு கூடிய வண்ணம் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, செம்மிபாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. `திட்டத்தைத்தான் கைவிட முடியாது என்கிறீர்கள், பாதிக்கப்படும் நிலங்களுக்கு முறையான இழப்பீட்டையாவது வழங்குங்கள்’ என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகமோ அந்தப் பகுதியில் சந்தை மதிப்பீடு ஒரு ஏக்கருக்கு ரூ.1.65 கோடி என இருக்க, அரசு வழிகாட்டி மதிப்பின்படி ஒரு ஏக்கருக்கு ரூ.22 லட்சம்தான் கொடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. `இதனை ஏற்க முடியாது' எனக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், போலீஸாரை வைத்து உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தின்முன் தாலியுடன் நிற்கும் பெண்கள்
கலெக்டர் அலுவலகத்தின்முன் தாலியுடன் நிற்கும் பெண்கள்

மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், கையில் தாலியை ஏந்தியபடி நேற்று மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, `எங்களுக்குச் சோறு போடுற இந்த நிலத்தைப் பறிக்கிறதும் எங்களோட தாலியைப் பறிக்கிறதும் ஒன்னுதான். நாளைக்கு என் கணவர் இல்லாவிட்டாலும், நான் இல்லாம போனாலும் இந்த நிலம்தானே எங்க புள்ளைங்களைக் காப்பாத்தும்’ எனக் குமுறி அழுதுள்ளனர்.

`செத்தா செத்துட்டு போ... தடுத்தா சிறை!'- உயர்மின் அழுத்தக் கோபுரத்தால் சேலம் விவசாயி தற்கொலை?

இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் குமார், பல்லடம் ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்.

அப்போது பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், `சந்தை மதிப்பீட்டின்படி உரிய இழப்பீடு கொடுக்காமல், போலீஸை வைத்து இப்படி தொடர்ந்து வேலை செய்து வந்தீர்களேயானால், கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம்’ எனக் கலெக்டரிடம் கூறியுள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

இதுகுறித்து, வழக்கறிஞர் ஈசனிடம் பேசினோம். ``இந்த விவகாரம் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை நான்கு முறை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். இழப்பீடு கேட்டு 21-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டோம். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

ஆனால், அவர் கொடுத்த உறுதி மீறப்பட்டு, விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றிவிட்டு காவல்துறையின் உதவியோடு திட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் கொடுத்த மனுவை தமிழக அரசுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாகவும், நிச்சயமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கலெக்டர் கூறியிருக்கிறார். தொடர்ந்து விவசாயிகளை இந்த அரசு வஞ்சிக்குமானால், மிகப்பெரிய கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றார் கொதிப்புடன்.

அடுத்த கட்டுரைக்கு