Published:Updated:

`ஜெயலலிதா உருவப்படம்; நவதானிய படையல்!' - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் விநோத போராட்டம்

ஜெ., படத்துக்குப் படையலிட்டு விவசாயிகள் பூஜை செய்தபோது
ஜெ., படத்துக்குப் படையலிட்டு விவசாயிகள் பூஜை செய்தபோது

விவசாய நிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய்களை அமைக்க கெயில் நிறுவனம் முயன்றபோது, `மக்களுக்காகவே திட்டங்கள். திட்டங்களுக்காக மக்கள் அல்ல’ என அன்றைய முதல்வர் அத்திட்டத்தை எதிர்த்தார்.

விவசாய விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைத்தல் மற்றும் எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டத்துக்கு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அரசின் இத்திட்டங்களை எதிர்க்கும் வகையில் விவசாயிகள் விதவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் திட்டத்தை எதிர்த்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் நேற்று விநோதமான போராட்டத்தை நடத்தினர்.

ஜெயலலிதா உருவப் படத்துடன் வந்த விவசாயிகள்
ஜெயலலிதா உருவப் படத்துடன் வந்த விவசாயிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஏந்திவந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தின் முன்பு அந்தப் படத்தை வைத்தனர். அந்தப் படத்துக்கு தேங்காய், இளநீர், வெங்காயம், கீரை வகைகள், நவதானியங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து படையல் போட்டு பூஜை செய்ய ஆரம்பித்தனர். மேலும், விஷப் பாட்டில்கள் போன்றவற்றையும் கையில் ஏந்தியபடி, `விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலங்களில் எண்ணெய்க் குழாய் அமைத்தால், நாங்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ எனக் குரல் எழுப்பினர்.

ஜெ., படத்துக்கு பூஜை செய்யும் விவசாயிகள்
ஜெ., படத்துக்கு பூஜை செய்யும் விவசாயிகள்

எதற்காக இந்தப் போராட்டம் என பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷிடம் பேசினோம். ``விவசாய நிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய்களை அமைக்க கெயில் நிறுவனம் முயன்றபோது, `மக்களுக்காகவே திட்டங்கள். திட்டங்களுக்காக மக்கள் அல்ல’ என அன்றைய முதல்வர் அத்திட்டத்தை எதிர்த்தார். விவசாய நிலங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல், சாலையோரம் கொண்டு செல்லுமாறு சட்டசபையில் தீர்மானம் இயற்றினார். அப்படி விவசாயிகளின் காவல் தெய்வமாக ஜெயலலிதா இருந்தார். ஆனால், அவர் வழியில் செயல்படும் இந்த அரசானது, விவசாயிகளை அச்சுறுத்தும் ரீதியாக திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா என்னும் விவசாயிகளின் காவல் தெய்வம் இருந்திருந்தா, இன்னைக்கு இந்தத் திட்டம் வந்திருக்காது என்பதைக் கூறும் வகையில் அவருடைய உருவப் படத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து படையலிட்டோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்தை நிறைவேற்றினால் இந்தக் காய்கறிகள் மற்றும் தானியங்களைக் காட்சிப் பொருளாக பார்க்க நேரிடும் என்பதை படையல் மூலம் குறியீடாக உணர்த்த நினைத்தோம். மேலும், விவசாய விளைநிலங்களை இழக்க நேரிட்டால், விஷமருந்தி தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வழியில்லை என்பதற்காக கையில் விஷ பாட்டில்களோடு வந்திருந்தோம். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான வேலையை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.

விவசாயிகள் பூஜை செய்த பதாகை
விவசாயிகள் பூஜை செய்த பதாகை

அந்தத் தனியார் நிறுவனத்தின் லாபத்துக்காக, 7 மாவட்ட விவசாயிகளின் வாழ்வை தமிழக அரசு கெடுக்க நினைக்கிறது. வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினரை வைத்து அச்சுறுத்தி, இந்தத் திட்டத்தை விவசாய விளைநிலங்களில் செயல்படுத்திட தமிழக அரசு துடிக்கிறது. சாலையோரமாக இத்திட்டத்தைக் கொண்டு சென்று, எந்த விவசாயிக்கும் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் அரசை எதிர்த்து எங்களுடைய போராட்டம் தொடரும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு