அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்... நாமக்கல்லில் என்ன நடந்தது?

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விவசாயிகளை கைது செய்து பள்ளிப்பாளையம் நகராட்சி மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். மண்டபத்தில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டு மண்டபத்தில் இருந்த தமிழக விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தூறல்நம்பியிடம் பேசினோம், ``விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டங்கள் நடத்தியதோடு பலர் உயிர்த் தியாகமும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இரண்டு மாதத்துக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி 90 சதவிகிதம் நிறைவு பெற்றது; அதனால் அந்தப் பணியை நிறுத்த முடியாது; உயர் மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்துக்கு 4.5 கோடி ரூபாய் கொடுப்பதாகவும், இனி வரும் 14 திட்டங்களை பூமிக்கடியில் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார். அதையடுத்து நாங்களும் அமைதியாக இருந்தோம். ஆனால், மின்கோபுரம் அமைத்த பிறகும் எங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்கவில்லை.
அதையடுத்து 12 நாள்களாகத் திருப்பூர் மாவட்டம் படியூர், வெள்ளம்பட்டி மற்றும் மதுரை மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தி வந்தோம். அதை யாரும் கண்டுகொள்ளாமல் உதாசினம் செய்தார்கள். அதனால் பள்ளிபாளையம் ஆலங்காட்டில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்தோம்.

அதையடுத்து இன்று காலை அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டோம். காவல்துறையினர் எங்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்துவிட்டார்கள். மண்டபத்திலும் நாங்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்'' என்றார்.
இதுபற்றி மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டதற்கு, ``விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள நிலங்களுக்கு அரசு வழிகாட்டல் மதிப்பைவிட 2.5 சதவிகிதம் அதிகமாகக் கொடுக்க ஒப்புக்கொண்டோம். அதற்கு குறைவாக இழப்பீடு கொடுத்தால் என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். சம்பந்தப்பட்ட கலெக்டரிடம் சொல்லி உரிய இழப்பீட்டை பெற்றுத் தருவதாக உறுதியளித்தேன்.


Also Read
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தங்கமணி
ஆனால், பொத்தாம் பொதுவாக ஒரு ஏக்கருக்கு 4.5 கோடி கொடுப்பதாகச் சொல்வது தவறு. அவ்வளவு தொகை கொடுக்கவும் முடியாது. 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 37,500 வழங்கப்படுவதோடு நிறைவான இழப்பீட்டு தொகையும் கொடுக்கிறோம். தேர்தல் நெருங்குவதால் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்றார்.