Published:Updated:

`50,000 விவசாய மின் இணைப்புகள்; அரசாணை வெளியிடாதது ஏன்?’ - ஆதங்கப்படும் விவசாயிகள்

விவசாய மின் இணைப்பு
விவசாய மின் இணைப்பு

``ஆந்திரா, தெலங்கானவுல எல்லாம் இந்த மாதிரியான மோசமான அவலநிலை இல்லை. விவசாய மின் இணைப்பு கேட்டு, பதிவு செஞ்ச 30 நாள்களுக்குள், அதுவும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல், மின் இணைப்பு வழங்கப்படுது.’’

தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்புக்காக, கடந்த 20 ஆண்டுகளாக பல லட்சம் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் கடந்த மார்ச் 13-ம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற மின் மானிய கோரிக்கையின்போது ``தமிழ்நாட்டில் 4.25 லட்சம் விவசாயிகள், விவசாய மின் இணைப்புக்காக காத்திருப்பதாகவும், இந்த ஆண்டு 50,000 மின் இணைப்புகள் வழங்கப்படும்” என மின்சார துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால், இதற்கு அரசாணை வெளியிடப்படவே இல்லை. இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடப்போகிறதோ என விவசாயிகள் அச்சப்படுகிறார்கள்.

`50,000 விவசாய மின் இணைப்புகள்; அரசாணை வெளியிடாதது ஏன்?’ - ஆதங்கப்படும் விவசாயிகள்

இதுகுறித்து நம்மிடம் பெரும் ஆதங்கத்தோடு பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன்,``தமிழ்நாடு மின்மிகு மாநிலம்னு நம்ம ஆட்சியாளர்கள் பெருமையா சொல்லிக்குறாங்க. உபரி மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு வழங்கப்படும்னும் சொல்றாங்க. ஆனால், இங்குள்ள விவசாயிகளோட நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கு. ஆற்றுப்பாசனத்துக்கு வழியில்லாத விவசாயிகளுக்கு போர்வெல்தான் மாற்றுவழி. விவசாய மின் இணைப்பு கிடைச்சாதான் விவசாயிகள் தங்களோட வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். விவசாய மின் இணைப்புக்காக, சாதாரண மற்றும் சுயநிதி திட்டத்துல பதிவு செஞ்ச, ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் பல லட்சம் பேர் நீண்டகாலமாக காத்திருக்காங்க.

ஆந்திரா, தெலங்கானவுல எல்லாம் இந்த மாதிரியான மோசமான அவலநிலை இல்லை. விவசாய மின் இணைப்பு கேட்டு, பதிவு செஞ்ச 30 நாள்களுக்குள், அதுவும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல், மின் இணைப்பு வழங்கப்படுது. ஆனால் இங்க, சுயநிதி திட்டம்ங்கற பேர்ல 10,000, 25,000, 50,000 ரூபாய்னு, ஹார்ஸ் பவருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுது. உடனடி மின் இணைப்பு திட்டமான தக்கலுக்கு 2.5 லட்சம் முதம் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுது. ஆனால், இதுவும் கூட முறையாக உரிய காலத்துல வழங்கப்படுவதில்லை.

இந்த ஆண்டு 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்னு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடந்த மார்ச் 13-ம் தேதி சட்டமன்றத்துல அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கு. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுக்கான அரசாணை வெளியிடப்படவே இல்லை. இதுல ஏதோ மர்மம் இருக்கு. மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டத்துக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் ஏற்பாடுகள்ல மத்திய அரசு தீவிரம் காட்டிக்கிட்டு இருக்கு. இதனால்தான் இந்த அறிவிக்கப்பட்டுள்ள 50,000 விவசாய இணைப்புக்கான அரசாணை வெளியிடப்படாமல் இருக்கோனு சந்தேகப்படுறோம். பொதுவாக, சட்டமன்றத்துல எந்த ஒரு அறிவிப்பு வெளியானாலும் உடனே அரசாணை வெளியிடப்படும். இது ஒண்ணும் கடினமான பணியல்ல.

மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு...  பன்முனை தாக்குதலில் விவசாயிகள்!

மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும்னு மார்ச் 24-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார். அதுக்கான அரசாணை ஏப்ரல் 4-ம் தேதி வெளியானது. இது கொரோனா ஊரடங்கு காலம்னு நொண்டி சாக்கெல்லாம் சொல்ல முடியாது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்படும்னு சில நாள்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டுருக்கு.

ஆனால் 50,000 விவசாய மின் இணைப்புக்கு மட்டும் ஏன் அரசாணை வெளியிடப்படாமலே இருக்கு? இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழக அரசுக்கு 750 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். நிதி பற்றாக்குறையில் தவிச்சிக்கிட்டு இருக்குற தமிழக அரசுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு