Published:Updated:

`நெல் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகிறது தெரியுமா?' - அரசின் புதிய அறிவிப்பால் கொதிக்கும் விவசாயிகள்

நெல்
நெல்

கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளதால், இந்த ஆண்டு மத்திய அரசு தங்களை நிச்சயமாகக் கைவிடாது என மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால்...

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 53 ரூபாய் என விலை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இது மிகவும் குறைவான தொகை எனவும், இது உற்பத்தி செலவைக்கூட ஈடுகட்டாது, ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்கு, இந்த விலை அறிவிப்பு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

விவசாயி
விவசாயி

நெல்லுக்கு லாபகரமான விலையை வழங்கக் கோரி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரி டெல்டாவைச் சேர்ந்த நெல் விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கே சென்று பலமுறை நெல் கொட்டும் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் விலை வழங்கினால்தான், தங்களது உழைப்புக்கும் முதலீட்டுக்கும் நியாயமான லாபம் கிடைக்கும் என்பது இவர்களது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு இதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

கொரோனா ஊரடங்கால் தற்போது தங்களது வாழ்வாதாரம் முடங்கியுள்ளதால், இந்த ஆண்டு மத்திய அரசு தங்களை நிச்சயமாகக் கைவிடாது. நெல்லுக்கான விலை உயர்வு, நிறைவாக இருக்கும் என மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள்.

சுகுமாறன்
சுகுமாறன்

ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டுக்கு வெறும் 53 ரூபாய் மட்டுமே விலை உயர்த்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச்செயலாளர் சுகுமாறன்,

`` 2018-19-ம் ஆண்டு குவிண்டாலுக்கு 200 ரூபாய் விலை உயர்த்தினாங்க. கடந்த ஆண்டு 65 ரூபாய் உயர்த்தினாங்க. இந்த ஆண்டு 53 ரூபாய்தான் விலை உயர்த்தி இருக்காங்க. இது ரொம்ப அநியாயம். புதிய விலை உயர்வு அறிவிப்பின்படி பார்த்தால் சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு 1,888 ரூபாயும், சாதாரண ரக நெல்லுக்கு 1,868 ரூபாயும்தான் விலை கிடைக்கும். இடுபொருள்கள் விலை, வேலையாள்கள் சம்பளம் எல்லாம் ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு உயர்ந்துக்கிட்டு இருக்கு.

குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் விலை அறிவித்தால்தான் எங்களுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு எல்லாம், உற்பத்திச் செலவோடு, 200 சதவிகிதம் 300 சதவிகிதம்னு கூடுதல் லாபம் சேர்த்து விலையை அவங்களே தீர்மானிச்சுக்கிறாங்க.

ஆனால், இங்க விவசாயிகளுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவோடு, கூடுதலாக 50 சதவிகிதம் லாபம் வைத்து விலை அறிவிக்க வேண்டும்னு பத்து ஆண்டுகளுக்கு முன்னாடியே எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை செஞ்சுது.

ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 31,000 ரூபாய் உற்பத்தி செலவு ஆகுது. இதுல 50 சதவிகிதத்தை லாபமாகச் சேர்த்தால் 46,500 ரூபாய் வருமானம் கிடைக்கணும். ஒரு ஏக்கர்ல சராசரியாக 18 குவிண்டால் நெல் மகசூலாகும். இந்த அடிப்படையில் பார்த்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்சம் 2,583 ரூபாய் விலை அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டுக்கு 1,888 ரூபாய்தான் விலை அறிவிக்கப்பட்டிருக்கு. மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகள் வயிற்றில் அடிச்சிக்கிட்டு இருக்கு” எனக் கொந்தளித்த சுகுமாறன் மேலும் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

``இந்தப் புதிய விலை அறிவிப்பு அக்டோபர் மாதத்துல இருந்துதான் நடைமுறைக்கு வரும். அதாவது குறுவையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு இந்தப் புதிய விலை கிடைக்க வாய்ப்பில்லை. வழக்கமாக மத்திய அரசு நெல் விலை அறிவிப்பை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்தான் அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள விவசாயிகளுக்கு உதவுவதாக காட்டுவதற்காகவே, இந்தக் கண் துடைப்பான அறிவிப்பு வெளியாகியிருக்கு” எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு