Published:Updated:

`குறுவை சாகுபடி; அறிவிப்பு வெளியாகி 69 நாள்களாச்சு!’- பயிர்க்கடன் விவகாரத்தில் கொதிக்கும் விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

`தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கையில் இந்த ஆண்டுக்கான விவசாயிகளுக்கு வழங்க உள்ள பயிர்க்கடன் ரூ. 11,000 கோடி ரூபாய் என அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 69 நாள்களாகிவிட்டன.'

வங்கிகளில் பயிர்கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைக் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க உத்தரவிடக்கோரும் அரசானையை உடனே வெளியிட வலியுறுத்தி, நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்களை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,`நெல் பயிருக்கு கடன் கொடு, வாழைப் பயிருக்கு கடன் கொடு... தமிழக அரசே விவசாயிகளை ஏமாற்றாதே உடனே பயிர்க் கடனைக் கொடு' எனக் கோஷமிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறுகையில், ``2020 - 202-ம் ஆண்டுக்கான பயிர்க்கடன் அளவு மாநில தொழில்நுட்ப குழுவுக்குப் பரிந்துரை செய்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தநிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது இந்த ஆண்டுக்கான விவசாயிகளுக்கு வழங்க உள்ள பயிர்க்கடன் ரூ.11,000 கோடி ரூபாய் என அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 69 நாள்களாகிவிட்டன. மேலும், இந்த அறிவிப்பை அரசாணையாக தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் கடன் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விவசாயிகள்
விவசாயிகள்

இந்நிலையில், தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அத்துடன் மாற்றியமைக்கப்பட்ட கடன் அளவை நிர்ணயித்து அதை வழங்குவதற்கு உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும். கொரோனா பொது முடக்கத்தால் விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

`விவசாயக் கடன்.. உச்சநீதிமன்ற வழக்கு; நெருக்கடி கொடுக்கும் அதிகாரிகள்!’- புலம்பும் தேனி விவசாயிகள்

வரும் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு பொருளாதாரம் வசதி இல்லாமல் கையில் பணம் இல்லாமல் விவசாயிகள் துயரத்தில் தவித்து வருகின்றனர். எனவே, இப்போதாவது பயிர்க்கடனை உடனடியாக வழங்குவதற்கு உத்தரவிட்டு விவசாயிகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு