Published:Updated:

தியாகி எம்.ஏ.ஈஸ்வரன்: `அவர் செய்த செயல் இன்று 13 தொகுதிகளை காப்பாற்றுகிறது!'- நெகிழும் ஊர் மக்கள்

தியாகி எம்.ஏ.ஈஸ்வரன்
தியாகி எம்.ஏ.ஈஸ்வரன்

தனி ஒரு மனிதனின் கோபத்தாலும், முயற்சியாலும் இன்று 2.07 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஒரு சட்டமன்ற உறுப்பினராக எவ்வளவு செய்ய முடியும், எப்படியான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஈஸ்வரனின் செயல்பாடு ஒரு சான்று.

1946-ல் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் ஆவதற்கு தங்கதூரி பிரகாசத்திற்கு ஒரு எம்.எல்.ஏ-வினுடைய வாக்கு தேவைப்படுகிறது. அவர் ஈரோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான தியாகி ஈஸ்வரனை அணுகி ஆதரவு கேட்கிறார். `ஈரோடு மாவட்டத்தில் நீங்கள் கீழ்பவானி அணையைக் கட்டிக் கொடுப்பதாகச் சொன்னால் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறேன்!’ எனச் சொல்லி ஆதரவளிக்கிறார் ஈஸ்வரன்.

தங்கதூரி பிரகாசம் முதலமைச்சரானதும் கீழ்பவானி அணை கட்டப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. இதில் கொதித்துப் போன தியாகி ஈஸ்வரன் `எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள்’ என தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிடுகிறார். ஈஸ்வரனின் கோபத்தையும், அதன்பின்னுள்ள சமூக அக்கறையையும் உணர்ந்த முதலமைச்சர் தங்கதூரி பிரகாசம் அதன்பிறகு கீழ்பவானி அணை கட்டும் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். அந்த கீழ்பவானி அணைதான் இன்றைக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணை; தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய அணை.

கீழ்பவானி அணை
கீழ்பவானி அணை
`அணை நிரம்பி வழிஞ்சும் பாசனத்திற்கு வழியில்லையே!' - ஆதங்கத்தில் கீழ்பவானி விவசாயிகள்; காரணம் என்ன?

இந்த பவானிசாகர் அணையிலிருந்து வெட்டப்பட்டுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2.07 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வானம் பார்த்த பூமியாகவும், வறட்சியின் பிடியில் காய்ந்து போயிருந்த நிலமெல்லாம் இன்றைக்கு பூத்துக் குலுங்கும் சோலைவனமாக மாறியிருக்கிதென்றால் அதற்கு தியாகி எம்.ஏ.ஈஸ்வரன் தான் முழு முதற்காரணம். ஒரு சட்டமன்ற உறுப்பினராக எவ்வளவு செய்ய முடியும்?... எப்படியான மாற்றங்களை ஏற்படுத்த முடியும்?... என்பதற்கு ஈஸ்வரனின் செயல்பாடு ஒரு பெரும் சான்று.

ஒரு தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈஸ்வரன் செய்த செயலால், இன்றைக்கு 13 தொகுதிகள் பயனடைந்து வருகின்றன. இப்படியான தியாகிக்கு தமிழக அரசு மரியாதை செலுத்தும் பொருட்டு `பவானிசாகர் அணையில் தியாகி ஈஸ்வரனின் சிலையினை அமைக்க வேண்டும்’ என கீழ்பவானி பாசன விவசாயிகள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர். எந்த அரசாங்கமும் இதனை துளியும் கண்டுகொள்ளவில்லை. இப்படியான நிலையில் சமீபத்தில் சட்டமன்றத்தில், ஈரோடு மாவட்டத்தில் எம்.ஏ.ஈஸ்வரனுக்கு திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பினால் கீழ்பவானி பாசன விவசாயிகள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம் அவர்களிடம் பேசினோம். ``கீழ்பவானி அணை மற்றும் கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாக மிக முக்கியக் காரணமாக இருந்த தியாகி எம்.ஏ.ஈஸ்வரனை கடந்த 70 ஆண்டு காலமாக எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை.

அரச்சலூர் செல்வம்
அரச்சலூர் செல்வம்

துரதிஷ்டவசமாக அவர் ஒரு பெரும்பான்மை சமுதாயத்தைச் சேராதவராக போனதாலும், வாக்கு அரசியலுக்கு பயன்படாதவராக இருந்ததாலும் எந்த அரசுகளும், எந்த கட்சியும் அவரை கண்டுகொள்ளவில்லை. அவருடைய சொந்தக் கட்சியான காங்கிரஸில் இருந்துகூட பெரிதாக ஆதரவுக்குரல் எழவில்லை. இப்படியான நிலையில் தியாகி ஈஸ்வரனுக்கு திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பெரும் பாராட்டுதல் மற்றும் நன்றிக்குரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கீழ்பவானி பாசனத் திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் விவசாய வளர்ச்சி மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியும் மேம்பட்டன. 2.07 லட்சம் ஏக்கரில் பாசன வசதியைச் செய்து கொடுத்தவர், கடைசி காலத்தில் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இறந்து போனார். `சாப்பாட்டிற்கு கொஞ்சம் அரிசி கொடுத்து அனுப்புங்கள்’ என அவருடைய நண்பரும் எம்.எல்.ஏவுமான கே.ஆர்.நல்லசிவத்திற்கு கடிதம் எழுதும் அளவிற்குதான் ஈஸ்வரனின் கடைசிக்காலம் இருந்தது. இப்படி தன்னலம் பாராது மக்களுக்காக போராடி வாழந்த தியாகி ஈஸ்வரனின் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினரும் அவருடைய செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளும் வகையிலும் ஈரோட்டில் ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் சொல்லியிருக்கிறார்கள்.

கீழ்பவானி அணை
கீழ்பவானி அணை
கான்கிரீட் சிக்கலில் கல்லணை, பவானிசாகர் வாய்க்கால்கள்... தீருமா தண்ணீர் பஞ்சாயத்துகள்?

ஈஸ்வரன் போன்றோருடைய சேவையை வெறும் சிலை வைப்பதன் மூலமாகவோ, மணி மண்டபம் கட்டுவதன் மூலமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதுவொரு தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் அவர் நினைக்கப்பட வேண்டும். ஆகையால் கீழ்பவானி பாசனத்திற்கு முதல்முறை தண்ணீர் திறக்கப்பட்ட ஆகஸ்ட் 10-ம் தேதியை கீழ்பவானி தினமாக அரசு அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர் காலத்திற்கும் நினைவு கூறப்படுவார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு