Published:Updated:

``பருவமழைக்கு முன்பாவது தடுப்பணையை சீரமைத்து கொடுங்கள்!" - கொதிக்கும் விவசாயிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தடுப்பணை விவகாரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!
தடுப்பணை விவகாரத்தில் கொதிக்கும் விவசாயிகள்!

``இந்தாண்டு பருவமழைக்கு முன்பாக இந்த தடுப்பணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டால் மட்டுமே, திருக்கண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைவார்கள்'' - மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சம்பத்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தொடர்ந்து பல வருட காலமாகக் கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர். அதன் பலனாக, 2014-ம் ஆண்டு திருக்கண்டலம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் 32.90 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்க அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்தது. அழிஞ்சிவாக்கம், அத்தங்கிகாவனூர், திருக்கண்டலம், குருவாயல், சேத்துப்பாக்கம், ஆரிக்கப்பேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் பயனடையும் வகையில், ரூ.32.90 கோடி மதிப்பில் இருபுறமும் 6 ஷட்டர்களுடன் 175 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் புதிய தடுப்பணையை பொதுப்பணித் துறையின் கீழான நீர்வளத்துறை பல மாதங்களைச் செலவழித்து பிரமாண்டமாகக் கட்டியது. ஆனால், 2014-ல் கட்டப்பட்ட தடுப்பணையானது திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே பருவமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது.

தமிழகத்தில் 2015-ல் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தின் பிரதான நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அதன் காரணமாகப் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மற்றும் மழை நீரின் அளவு மிக அதிகமாக இருந்ததால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட திருக்கண்டலம் தடுப்பணைக்கு 2015-ம் நவம்பர் மாதம் வினாடிக்கு 85,000 கன அடி அளவுக்கு நீர் வந்தடைந்தது. அப்போது, நீரின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், தடுப்பணையின் இடதுபுற கரைப்பகுதியில் இருந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, அடுத்த மாதமே தடுப்பணை பகுதியில் நீரின் அளவு 94,000 கன அடியாக அதிகரித்ததால் ஏற்கனவே இடிந்து விழுந்த கரையின் பக்கவாட்டு சுவர் முழுவதுமாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தடுப்பணையின் இடதுபுற பகுதியில் ஷட்டர் ஒன்றும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஷட்டர் பகுதி உள்வாங்கியது. தடுப்பணையின் சுவர்ப் பகுதி 30 மீட்டர் தூரத்துக்கு உடைந்து சேதமடைந்தது.

திருக்கண்டலம் தடுப்பணை
திருக்கண்டலம் தடுப்பணை
மாட்டுச்சாணத்தில் மின் உற்பத்தி... முன்மாதிரியாகத் திகழும் கிராமம்! | Pasumai Vikatan

160 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்குத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பதற்கு முன்பாகவே உடைந்து போனது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தடுப்பணை கட்டப்பட்ட திருக்கண்டலம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில், அதே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு பல ஆண்டுகளாகியும் உறுதியாக உள்ள நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து விழுந்தது அந்த நேரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தடுப்பணை இடிந்து விழுந்ததை அடுத்து, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தடுப்பணையை நேரில் ஆய்வு செய்து விட்டு, தடுப்பணை சீரமைப்பு பணி துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

கட்டுமான பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாகவே தடுப்பணை இடிந்து விட்டதாகவும், தரமற்ற தடுப்பணையைக் கட்டி மக்கள் வரிப்பணத்தை அதிமுக அரசு வீணடித்து விட்டதாகவும் அப்போது விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்த தடுப்பணையைச் சீரமைத்துப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்தி வந்தனர். அதற்குப் பிறகு, சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2019-ல் தடுப்பணையைச் சீரமைக்க கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால், 2019-ல் நிதி ஒதுக்கப்பட்டும், கடந்தாண்டு தான் தடுப்பணை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசிய கும்மிடிப்பூண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், திருக்கண்டலம் தடுப்பணை திறப்பு விழா காணும் முன்னே புயல் மழைக்குச் சேதமடைந்து விட்ட நிலையில், தரமற்ற முறையில் தடுப்பணை கட்டிய ஒப்பந்ததாரரை சேதமுற்ற அணையைச் செப்பனிடச் செய்ய உத்தரவிடாமல், அந்த சேதத்தைச் சரிசெய்யத் தனியாக மேற்கொண்டு 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் வரிப் பணம் வீணாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார்
கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார்

தடுப்பணை சீரமைப்பு பணிகள் நிறைவடையவிருக்கும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் குற்றச்சாட்டு குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமாரிடம் கேட்டோம். ``திமுக தரப்பில் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கவிட்டுள்ளது. திருக்கண்டலம் அணை திறப்பு விழா காண்பதற்கு முன்பாகவே சேதமடைந்து விட்டதை மட்டுமே பிரதானப்படுத்தி கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தடுப்பணையின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பாகவே யாரும் எதிர்பாராத வகையில் கொட்டித் தீர்த்த பேய் மழையால்தான் சேதமடைந்தது.

திறப்பு விழாவிற்கு நாள் குறித்து வைத்திருந்த நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தடுப்பணையின் ஷட்டர் மற்றும் கரைகள் சேதமடைந்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாகத் தடுப்பணையைச் சீரமைக்க வேண்டி கோரிக்கை வைத்ததால் 2019-ல் சேதமடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதற்காக என்னுடைய தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 18 கோடியை ஒதுக்கினேன். அதற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உடைந்த தடுப்பணை: `அன்று கொதித்த  பொன்முடி... இன்று செவிசாய்க்காத துரைமுருகன்?' -தவிப்பில் விவசாயிகள்

இந்த நேரத்தில், கோவிந்தராஜன், `ஒப்பந்ததாரர்தான் பொறுப்பேற்றிருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது' என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார். தடுப்பணை கட்டுமான பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்த பிறகு, தடுப்பணை சேதமடைந்திருந்தால் நிச்சயம் ஒப்பந்ததாரரைத்தான் நாங்களும் பொறுப்பேற்கச் செய்திருப்போம். ஆனால், கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே இடிந்து விட்டதால் நம்மால் அவர்கள் மீது பழி போடமுடியாது. அதனால்தான் குறிப்பிட்ட பகுதியைச் சீரமைக்க மட்டும் தனியாக நிதி ஒதுக்கினேன். தற்போது தடுப்பணை சீரமைப்பு பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இனி அதை விரைந்து திறந்து மக்கள் பயனடையச் செய்ய வேண்டியது மட்டும்தான் திமுக-வினரின் வேலை" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து இந்த தடுப்பணை விவகாரம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சம்பத்திடம் பேசினோம். ``திருக்கண்டலம் தடுப்பணை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2015-ல் தடுப்பணை சேதமடைந்த போதே விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு உடனடியாக சீரமைக்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் எங்களிடம் அடுத்த சில மாதங்களில் தடுப்பணையைச் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்தார். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பொதுப்பணித்துறையினர் வருடக்கணக்கில் காலம் தாழ்த்தி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்னதாக தடுப்பணையைச் சீரமைத்துக் கொடுங்கள் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்சியர்களிடமும் மனுக்களைக் கொடுத்து விட்டு வலியுறுத்துவோம். ஆனால், அரசு அதிகாரிகள் தடுப்பணை விஷயத்தில் அலட்சியமாகவே இருந்து வந்தனர்.

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சம்பத்
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் சம்பத்

2019-ல் சேதமடைந்த தடுப்பணையைச் சீரமைக்க 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கப்பட்டும் கட்டுமான வேலைகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. கடந்தாண்டு இறுதியில் தேர்தலை ஓட்டி அதிமுக தரப்பில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. சேதமடைந்த திருக்கண்டலம் தடுப்பணையைச் சீரமைக்காமல் காலம் தாழ்த்திய பொதுப்பணித்துறையினர் அருகில் நல்ல நிலையில் இருக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டை ஒவ்வொரு ஆண்டும் சீரமைக்கிறோம் என்ற பெயரில் தேவையில்லாமல் நிதி ஒதுக்கி மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தாண்டு பருவமழைக்கு முன்பாக இந்த தடுப்பணை முழுமையாகச் சீரமைக்கப்பட்டால் மட்டுமே, 160 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த தடுப்பணையால் திருக்கண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடைவார்கள். அரசியல் கட்சியினர் இந்த தடுப்பணை விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டு விட்டு, உண்மையிலேயே விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டவர்களாக செயல்பட வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு