Published:Updated:

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த அமித் ஷா முயற்சி! -அடுத்தகட்ட நகர்வு என்ன?

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இன்று அரசுக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே நடைபெறவிருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக இருக்கும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு பெருகிவருகிறது.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஐந்துகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே சுமுகமான தீர்வு கிடைக்காததால் ஐந்துகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து விவசாய குழுக்கள் சார்பில் நேற்று (டிசம்பர் 8-ம் தேதி) நாடு தழுவிய முழு அடைப்புக்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டு பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் பந்த் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

இந்தநிலையில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இன்று அரசுக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையே நடைபெறவிருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்து பேசினார், வேளாண் சட்டங்களின் சர்ச்சைகளைத் தீர்ப்பது குறித்த அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. வேளாண் சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை விவசாயிகள் ஏற்க மறுத்து, முழுமையாக வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இருதரப்பினரும் தங்கள் நிலையில் உறுதியாக இருப்பதால், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் இன்று நடைபெறவிருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் சபாவின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, ``விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இன்று எந்தச் சந்திப்பும் நடைபெறாது. விவசாய சங்கத் தலைவர்களுக்கு ஒரு திட்டம் வழங்கப்படும். இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க விவசாய சங்கத் தலைவர்கள் ஒரு கூட்டத்தை நடத்துவார்கள்" என்று தெரிவித்தார்.

``மத்திய அரசால், விவசாய சங்கத் தலைவர்களுக்கு அனுப்பப்படும் திட்டவரைவு தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தவிருக்கிறோம். அந்தச் சந்திப்பில் வரைவு குறித்து விவாதிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இன்று மாலை சில விஷயங்கள் தெளிவாகிவிடும் என்று நம்புகிறோம்" என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கெயிட் (Rakesh Tikait) தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு