Published:Updated:

திருவாரூர்: `நாற்றுகளை நடவு செய்ய முடியாத நிலை!’ - பரிதவிக்கும் விவசாயிகள்

பயனற்றுப்போன  நாற்றுகள்
பயனற்றுப்போன நாற்றுகள்

குறுவையைக் கைவிடுவதால், வாழ்வாதார இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், நாற்று உற்பத்திக்காக செலுத்திய உழைப்பும் முதலீடும் வீண் விரயமாகியுள்ளது.

குறுவை நெல் சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் குறுவை சாகுபடி வெற்றிகரமாக நடைபெறபோகிறது என்ற எதிர்ப்பார்ப்போடு இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தீவிரமானார்கள்.

குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், போர்வெல் வைத்திருப்பவர்களிடம் விலைக்கு தண்ணீர் வாங்கி, கடும் உழைப்பை செலுத்தி, நாற்றுகளை உற்பத்திச் செய்தார்கள். இப்போது வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், நாற்றுகளை நடவு செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். குறுவையைக் கைவிடுவதால், வாழ்வாதார இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், நாற்று உற்பத்திக்காக செலுத்திய உழைப்பும் முதலீடும் வீண் விரயமாகியுள்ளது.

நாற்றுகள்
நாற்றுகள்

சிறு, குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நாற்றுகளை, மிகவும் குறைவான விலைக்கு, போர்வெல் வைத்திருக்கும் பெரு விவசாயிகளிடம் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆறுகளில் குறைவான அளவு மட்டுமே தண்ணீர் வருவதால், நிலத்தடிநீர் மட்டமும் குறைந்து வருகிறது. பாசனத்துக்கு உத்தரவாதம் இல்லாததால் பெரு விவசாயிகளும் கூட குறுவை நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா, அரித்துவாரா மங்கலத்தைச் சேர்ந்த சிறு விவசாயி மேகநாதன், ``நான் மூணு ஏக்கர்ல குறுவை நெல் சாகுபடி செய்றதுக்காக, நாற்றுகள் உற்பத்தி செஞ்சேன். எனக்கு போர்வெல் கிடையாது.

30 நாள்கள்ல நடவு செஞ்சிருக்கணும்... இப்ப..!

விலைக்குத் தண்ணீர் வாங்கிதான் நாற்றாங்காலுக்கு பாசனம் செஞ்சேன். இந்த நாற்றுகளை 30 நாள்கள்ல நடவு செஞ்சிருக்கணும். இப்ப 45 நாள்களுக்கு மேலாகியும் கூட, எங்க ஊர் வாய்க்கால்ல தண்ணீர் வரலை. காரணம் எங்க பகுதியில் பாயக்கூடிய வெண்ணாறுல, வெறும் 1,000 கன அடிதான் தண்ணீர் திறக்குறாங்க. இது எப்படி வாய்க்காலுக்கு பாயும். நடவு செய்ய தண்ணீர் கிடைக்காததால, குறுவையைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுட்டோம். நாற்றுகள் உற்பத்தி செய்ய 10,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கேன். இந்த நாற்றுகளை வச்சிருக்குறதால, எனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.

நாகை: `கடைமடை பகுதிகளுக்கு வராத காவிரி நீர்’ - குறுவை சாகுபடி விவசாயிகள் வேதனை
கர்நாடகாவிடமிருந்து ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய பங்குநீரை பெற்றால்தான், குறுவை உயிர் பிழைக்கும்.

அரித்துவாரமங்கம் மட்டுமல்லாமல், அவிலியநல்லூர், குமாரமங்கலம், பெருங்குடி, ரகுநாதபுரம் உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களிலும் இதே நிலைதான். உற்பத்தி செய்த நாற்றுகளை நடவு செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். இப்பகுதிகளில் உள்ள ஒரு சில பெரு விவசாயிகள், போர்வெல் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டிருந்தாலுமே கூட, ஆறுகளில் போதிய அளவு தண்ணீர் வந்தால் மட்டுமே, குறுவை சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும். மேட்டூர் அணையில் தற்போது 71 அடிதான் தண்ணீர் உள்ளது. இந்த ஆண்டும் குறுவை சாகுபடி கேள்விக்குறிதான் என்கிறார்கள் விவசாயிகள். கர்நாடகாவிடமிருந்து ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய பங்குநீரை பெற்றால்தான், குறுவை உயிர் பிழைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு