Published:Updated:

போலி உரம்... விவசாயிகளே உஷார்!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

மரத்தடி மாநாடு

போலி உரம்... விவசாயிகளே உஷார்!

மரத்தடி மாநாடு

Published:Updated:
மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
மரத்தடி மாநாடு

‘ஏரோட்டி’ ஏகாம்பரம் தன்னுடைய வயலில் அமர்ந்திருந்தார். அந்தப் பக்கமாக வந்த ‘காய்கறி’ கண்ணம்மா, “என்ன ஏகாம்பரம், ஆசுவாசமா உட்கார்ந்து அப்படி என்னத்ததான் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க. ஏதாவது கட்சி கிட்சிய கைப்பத்தப் போறீங்களா’’ எனக் கேள்வி எழுப்ப,

‘‘யோசனையெல்லாம் ஒண்ணுமில்லை. வாத்தியாரய்யா வர்றேனு சொல்லியிருந்தார். அதான் உட்கார்ந்திருக்கேன்’’ என ஏரோட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்து சேர்ந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அன்றைய மாநாடு தொடங்கியது.

‘‘சீனாக்காரங்க செஞ்சிருக்குற ஒரு சாதனையைக் கேட்டா, வாயடைச்சுப் போயிடுவீங்க. விண்வெளியில நெல்லுப்பயிரை வளர்த்துருக் காங்களாம்’’ வாத்தியார் இந்தத் தகவலை முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள்,

‘‘நெசமாவா சொல்றீங்க வாத்தியாரய்யா. தூக்கத்துல ஏதாவது கனா கினா கண்டுருப்பீங்க. நெல்ல, வயல்ல விளைய வைக்குறதே பெரிய பாடா இருக்கு. தண்ணி கிடைச்சா, உரம் கிடைக்கலை. உரம் கிடைச்சா, வேலைக்கு ஆள் கிடைக்கலைனு விவசாயிங்க புலம்புறாங்க. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விண்வெளியில நெல்ல விளைவிச்சா, எங்க கொண்டு போயி விப்பாங்க. அங்கென்ன கொள்முதல் நிலையமா இருக்கு’’ கேள்வி கேட்டு மடக்கிவிட்டோம் என்ற பெருமிதத்துடன் ஒரு பார்வையை வீசினார் காய்கறி.

‘‘முழுசா சொல்லி முடிக்குறதுக்குள்ளார அவசரப்படாத கண்ணம்மா. சீனா அரசாங்கம், விண் வெளியில தங்களோட நாட்டுக்குனு ஒரு நிரந்தர மான விண்வெளி நிலையம் அமைச்சுக் கிட்டு இருக்கு. அங்க தங்கியிருந்து சீன விஞ்ஞானிங்க பல ஆராய்ச்சிகளைச் செஞ்சுக் கிட்டு இருக்காங்க. அங்க தாவரங்கள் வளருதானு சோதனை பண்ணி பார்க்குற துக்காக, விதைநெல் மூலமா நெல்ல விளை விக்குற முயற்சியில ஈடுபட்டாங்களாம். ஓர் அடி உயரத்துக்கு நெற்பயிர் வளர்ந்திருக்கு. அதைப் பார்த்து விஞ்ஞானிங்களே ஆச்சர்யப் பட்டுதான் போறாங்க. காரணம், விண் வெளியில புவி ஈர்ப்பு விசையே இருக்காது. அங்க கதிரியக்கங்கள் அதிகமா இருக்கும். அப்படி இருந்தும்கூட அங்க நெல்லு விளைஞ் சிருக்குதுனா ரொம்பவே ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம்’’ என வாத்தியார் விலாவாரியாகச் சொல்லி முடித்தார்.

‘‘வானத்துல விவசாயம் பண்ண முடியுங்கற ஒரு நிலை வந்தா, நம்ம தமிழ்நாட்டு விவசாயிங்க, அங்க போயாவது நிம்மதியா வெள்ளாமை பண்ணுவாங்க. நம்ம அரசாங்கம் பண்ற அட்டூழியம் தாங்க முடியலை... பாவம் விவசாயிங்க... நம்ம நிலம் பறிபோயிடுமோனு எப்பவும் பரிதவிப்புலயே இருக்க வேண்டியதான் இருக்கு. ஹைட்ரோ கார்பன் எடுக்கப்போறோம், எட்டுவழிச்சாலை அமைக்கப் போறோம், விமான நிலையம் கொண்டு வரப்போறோம்னு நிலத்தைக் கேட்டுத் தொந்தரவு பண்ணிகிட்டேதான் இருக்காங்க. தி.மு.க ஆட்சியில இருந்தாலும் அ.தி.மு.க இருந்தாலும் இதே நிலைதான். விவசாயிங்களை என்னைக்குமே நிம்மதி யாவே வாழ விடமாட்டாங்க போல’’ விரக்தியோடு ஏரோட்டி சொல்ல,

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு


“வளர்ச்சித்திட்டம்கிற பேர்ல விவசாயிகளோட வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறதுதான் அரசாங்கங்களோட வேலையாவே இருக்கு. உண்மையிலேயே உருப்படியா, மக்களுக்குப் பயனுள்ள திட்டமா இருந்தா, வேற வழியில்லைனு நாட்டுக்காகனு பொறுத்துக்கலாம். ஆனா, எதுக்கெடுத்தாலும் விவசாயிங்க தலையில மொளகா அரைக்கிறதே வேலையா போச்சு. அதுவும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைக் கொடுக்கறாங்களான்னா, அதுவும் இல்ல” என்று காய்கறி சொல்ல…

“இழப்பு அவங்களுக்குன்னா அதுக்கு ஒரு ரேட் போடுவாங்க. ஆனா, ஊருக்கு இளைச்சவனுங்க நாமதானே?” என்று கொந்தளித்தார் ஏரோட்டி. தொடர்ந்த காய்கறி, ‘‘திருப்பூர் மாவட்டம், பல்லடம் பக்கத்துல கோடாங்கிபாளையம்ங்கற கிராமத்துல கடந்த 15 வருஷமா, ஒரு கல் குவாரி செயல்பட்டுக்கிட்டு இருக்கு. அதனால அந்தப் பகுதி விவசாயிங்க நரக வேதனையை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்களாம். அரசாங்கத்தோட எந்த விதிமுறையையுமே கடைப்பிடிக்குறதே இல்லையாம். அனுமதிக்கப்படாத வெடிகளை வெடிச்சு பாறைகளைப் பெயர்க்குறதுனால, வீடுகள்ல விரிசல் விழுந்துடுச்சு. அடிக்கடி ஊரே புகை மண்டலமா மாறிப்போயிடுதாம். விவசாயம், கால்நடைங்க, அங்கவுள்ள நீர்நிலைங்க எல்லாமே பாதிக்கப்பட்டுருக்கு. நிலத்தடி நீரும் ரொம்ப ஆழத்துக்குப் போயிடுச்சு, எம்.சான்ட்னு சொல்ற கறுப்பு நிறத்துல இருக்குற பாறை மண் கழிவுகளாலயும் அந்த ஊர் மக்கள் அவதிப்படுறாங்க. அந்தக் கல் குவாரியை தடை பண்ணணும்னு சொல்லி, அந்த ஊர் விவசாயி விஜயகுமார் அதிகாரிகள்கிட்ட பலமுறை மனு கொடுத்தும் கூட விடிவு காலம் பொறக்கலையாம். அதனால அந்த விவசாயி தன்னோட தோட்டத்துல பல நாள்களா உண்ணாவிரதப் போராட்டம் இருந்ததுனால, அந்த விவசாயி யோட உடல்நிலை ரொம்பப் பாதிக்கப் பட்டுருக்கு. அதனால கவலை அடைஞ்ச அந்த ஊர் விவசாயிங்க, கல் குவாரியில குதிக்கப்போறோம்னு அறிவிப்பு செஞ்ச பின்னாடிதான், அதிகாரிங்க ஓரளவுக்கு இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காங்களாம்’’ எனச் சொல்லி முடிக்க,

‘‘தூத்துக்குடி மாவட்டத்துல போன வருஷம் நல்ல மழை பெய்ஞ்சும்கூட டி.ஏ.பி உரம் கிடைக்காததால சிரமப்பட்டுருக்காங்க. இந்த வருஷம் அந்த மாதிரி ஆயிடுமோனு விவசாயிங்க பயந்துகிட்டு இருந்த நேரத்துல தான், யாரோ சிலர் லாரியில கிராமம் கிராமமா வந்து, ‘50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை 1,300 ரூபாய் என விற்பனை செஞ்சிருக்காங்க. ஒவ்வொரு விவசாயியும் 5 முதல் 10 மூட்டைனு வாங்கி வீட்ல அடுக்கி வச்சிருக்காங்க. அதைத் தண்ணியில போட்டுப் பார்த்தப்பதான் தெரிஞ்சிருக்கு... அது வெறும் களிமண்ணுனு. விவசாயிகள் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க. இந்த நிலையிலதான், கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநருக்கு... விருத்தாசலம் பக்கத்துல உள்ள பெரியவாடிங்கற ஊர்ல உள்ள ஓர் உர கம்பெனியில போலி உரம் தயார் செய்றதா, புகார் வந்திருக்கு. அந்தக் கம்பெனிக்குத் தடை விதிச்சிட்டாங்களாம். அந்த கம்பெனிக்காரங்கதான் தூத்துக்குடி விவசாயிங்களை ஏமாத்தியிருக்காங்கனு சொல்லப்படுது. சரி நான் கிளம்புறேன். களையெடுக்குற மெஷின் ரிப்பேர் ஆயிடுச்சு, டவுனுக்குப் போயி மெக்கானிக்கை கூட்டி வரணும்’’ என ஏரோட்டி கிளம்ப, அன்றைய மாநாடு முடிந்தது.

விவசாயிகள் நலனுக்காக போராடிய லெனின்
விவசாயிகள் நலனுக்காக போராடிய லெனின்

கே.கே.ஆர்.லெனின் இயற்கையுடன் கலந்தார்!

முன்னோடி இயற்கை விவசாயியும் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் நிறுவனருமான கே.கே.ஆர்.லெனின் உடல்நல பாதிப்பால் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இயற்கையுடன் இணைந்தார். மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராளி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நெருக்கமான நண்பர், தீவிர இயற்கை விவசாயி எனப் பலராலும் அறியப்பட்ட கே.கே.ஆர்.லெனின், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள அத்திவெட்டியில் வசித்து வந்தார்.

2002-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர். அக்கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர். காவிரி நடுவர் மன்றம் அமைக்கக்கோரி, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். கடைமடைப் பகுதி விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். அலையாத்திக் காடுகள் மீட்பு, கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ உட்படச் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தவர். இவருடைய முயற்சியில் பட்டுக்கோட்டையில் மூன்று முறை நடத்தப்பட்ட இயற்கை விவசாய மாநாடு பலரது பாராட்டுகளைப் பெற்றது. கே.கே.ஆர்.லெனினுக்கு விவசாயிகள் சார்பில் பசுமை விகடன் புகழஞ்சலி செலுத்துகிறது.