Published:Updated:

உரத்தட்டுப்பாடு: யூரியாவுக்குப் பதில், ஜீவாமிர்தம், மீன் அமிலம் இயற்கையில் தீர்வு இதோ..!

பயிர் சாகுபடி

நான் 30 வருஷமா திருவாரூர் மாவட்டத்துல விவசாயம் பண்ணிகிட்டு வர்றேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இப்போது எங்க திருவாரூர் மாவட்டத்துல உரத்தட்டுப்பாடு அதிகரிச்சிருக்கு..! மாவட்டத்தின் பல ஊர்கள்ல விவசாயிகளுக்கு உரமே கிடைக்கிறதில்ல...

உரத்தட்டுப்பாடு: யூரியாவுக்குப் பதில், ஜீவாமிர்தம், மீன் அமிலம் இயற்கையில் தீர்வு இதோ..!

நான் 30 வருஷமா திருவாரூர் மாவட்டத்துல விவசாயம் பண்ணிகிட்டு வர்றேன். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இப்போது எங்க திருவாரூர் மாவட்டத்துல உரத்தட்டுப்பாடு அதிகரிச்சிருக்கு..! மாவட்டத்தின் பல ஊர்கள்ல விவசாயிகளுக்கு உரமே கிடைக்கிறதில்ல...

Published:Updated:
பயிர் சாகுபடி

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போக பயிர் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1,57,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

இப்போது திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக மாவட்டத்தில் தற்போது 1,15,517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி பயிர் சாகுபடியிலும், 2,50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா  சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பிலும், ஒரு சில விவசாயிகள் நாற்றங்காலிருந்து நாற்றுகளைப் பறித்து நடவு செய்யும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் உரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பயிரிடப்பட்ட 20 நாள்களுக்குள்ளாகத் தழைச்சத்து உரமாக கருதப்படும் யூரியா பயிர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் யூரியா கிடைக்காமல் உள்ளது.

ஆய்வு செய்யும் வேளாண் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் வேளாண் அதிகாரிகள்

இந்த யூரியாதான் பயிர்கள் பச்சையாக இருப்பதற்கும், நைட்ரஜன் தேவைக்கு முக்கியமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. தற்போது பயிர்களுக்கு தழைச்சத்து உரம் கிடைக்காததால், இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர் சாகுபடி பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தனியார் கடைகள் உரங்களை பதுக்கி வைத்துக்கொண்டு, உரமூட்டைகளை அதிக விலைக்கு விற்று வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாகப் பேசிய திருவாரூர் விவசாயி கலியமூர்த்தி, ``நான் 30 வருஷமா திருவாரூர் மாவட்டத்துல விவசாயம் பண்ணிகிட்டு வர்றேன். எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு தற்போது எங்க திருவாரூர் மாவட்டத்துல உரத் தட்டுப்பாடு அதிகரிச்சிருக்கு..! மாவட்டத்தின் பல ஊர்கள்ல விவசாயிகளுக்கு உரமே கிடைக்கிறதில்ல.

கலியமூர்த்தி
கலியமூர்த்தி

நெல்லை பயிரிட்டு 20 நாள்களுக்குள்ள பயிர்களுக்கு அடி உரம் போட்டாகணும். ஆனா, 40 நாள்கள் ஆகியும் இன்னும் தழைச்சத்து உரமான யூரியா எங்களுக்கு கிடைக்கல..! இதனால பயிரெல்லாம் வாடுற நிலை உருவாகி இருக்கு. அரசாங்கத்துல மானிய விலையில கொடுக்கப்படுற உரமூட்டையோட சாக்கு பை மட்டும்தான் புதுசா இருக்கே தவிர, அதுக்குள்ள இருக்குற  உரம் கட்டிப்பிடிச்சு போயி தரம் இல்லாம ரொம்ப மோசமா  இருக்கு.

தனியார் கடைகள்ல உரம் வாங்க போனா அங்க, சம்பந்தமே இல்லாத வேறு சில உரத்த வாங்குனாதான் யூரியா, DAP உரம் கொடுப்பேன்னு கட்டாயப்படுத்துறாங்க..! சரியான நேரத்தில எங்க பயிர்களுக்கு உரம் இடப்படாததுனால, திருவாரூர் மாவட்டத்துல இந்த ஆண்டு சம்பா, தாளடி பயிர் சாகுபடி பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கு. உடனடியா தமிழக அரசாங்கம் இந்த உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயகுமார் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம்... அவர், ``தற்போது மழைக்காலம் என்பதால் வட இந்திய பகுதி யிலிருந்து தமிழகத்துக்கு உரமூட்டைகள் வருவதில் காலதாமதமாகிறது.

ஆய்வு செய்யும் வேளாண் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் வேளாண் அதிகாரிகள்

அதனால்தான் மாவட்டத்தின் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழக அரசாங்கம் முழுமையாக இந்த உரத்தட்டுபாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வேளாண் அதிகாரிகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கடைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு அதிக விலைக்கு உரத்தை விற்கும் கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இன்னும் சில நாள்களில் இந்த உரத்தட்டுப்பாடு  முழுமையாக நீங்கும்" என்றார்.

திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் யூரியா, பொட்டாஸ் போன்ற உரங்கள் தட்டுப்பாடாக இருப்பதால் இதற்கு மாற்றாக விவசாயிகள் என்ன மாதிரியான இயற்கை உரங்களை பயன்படுத்தி சம்பா தாளடி சாகுபடி மேற்கொள்ளலாம் என்ற கேள்வியோடு, திருவாரூர் மாவட்டத்தில் ஆறு ஆண்டுகளாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் செந்தில்குமாரை அணுகினோம்.

இயற்கை விவசாயி செந்தில்குமார்
இயற்கை விவசாயி செந்தில்குமார்

இயற்கை விவசாயி செந்தில்குமார் கூறும்போது, ``உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். இதை ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்றுப் புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாள்கள் கழித்து திறந்து பார்த்தால், தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்தத் திரவத்திலிருந்து கெட்டை வாடை வீசாது. பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மேலும், 48 மணி நேரத்தில் ஒரு இயற்கை உரத்தை தயாரிக்கலாம். அதன் பெயர் ஜீவாமிர்தம். பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாள்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை வலது புறமாக சுற்றுப்படி குச்சி வைத்து கலக்கிவிட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பாசன நீரிலேயே கலந்துவிடலாம்.  யூரியாவுக்கு சமமான சத்துகள் பயிருக்கு கிடைத்து விளைச்சலும் குறையாது" என்றார்.