ஆசிய மீன்வள சங்கத்தின் இந்தியக்கிளை மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய மீன்வளம் மற்றும் நீருயிரி வளர்ப்பு கருத்தரங்கு, சென்னையில் கடந்த மே 5-7-ம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்றன. கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைத்துப் பேசும்போது,
‘‘விவசாயத்தைப்போல மீன் உற்பத்தியும் நல்லதொரு வருமானம் ஈட்டும் தொழிலாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 15 மில்லியன் டன் அளவில் மீன் உற்பத்தி செய்து சாதனைப் படைத்துள்ளோம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மீன்வள ஆராய்ச்சி மூலம் உணவு உற்பத்தியை பெருக்குவதிலும் நாம் சிறப்பாகச் செயல்படுகிறோம்’’ என்றார்.
மத்திய மீன் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா பேசிம்போது, ‘‘நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தியில் ஒவ்வோர் ஆண்டும் மீன் வளம் 7 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் மீன் உற்பத்தியை 8 சதவிகித அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மீன் உற்பத்தியை அதிகரிக்க ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா’ (பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் 20,050 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மீன் வளர்ப்பில் சிறப்பாகச் செயல்படுகிறது’’ என்றார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசும்போது, ‘‘மீன் உற்பத்தியை பெருக்கத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கடல் இறால், கொடுவா மீன்... போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த மீன் வளர்ப்பை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது’’ என்றார்.
முன்னதாக மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் சுகுமார் பேசுபோது, ‘‘மீன் வளம் குறித்து இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரும் கருத்தரங்கு இது. ஆசிய மீன் வளச்சங்கம்தான் முதலில் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. அதன் தொடர்ச்சியாக ஆசிய மீன் வளச் சங்கத்தின் இந்தியக் கிளை இக்கருத்தரங்கை நடத்துகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வரும் நிலையில், இதன் 12 வது கருத்தரங்கு முதன்முறையாகச் சென்னையில் நடைபெறுகிறது’’ என்றார்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக இறுதி நாளான மே 7-ம் தேதி ‘மீன் மற்றும் இறால் வளர்ப்பு’ கருத்தரங்கு விவசாயிகளுக் காகவே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த மூன்று நாள் கருத்தரங்குக்குப் பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியிருந்தது.