ஆசிய மீன்வள சங்கத்தின் இந்தியக்கிளை மற்றும் தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய மீன்வளம் மற்றும் நீருயிரி வளர்ப்பு கருத்தரங்கு, சென்னையில் இன்று தொடங்கி 7-ம் தேதி வரையில் மூன்று நாள்கள் நடைபெறவிருக்கின்றன.
கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில், இந்தியாவில் உள்ள மத்திய மாநிலங்களைச் சேர்ந்த அரசு நிறுவன ஆராச்சியாளர்கள், மாணவர்கள் என இத்துறையின் மீது நாட்டம் உள்ளவர்கள் தங்கள் மீன்வள கட்டுரைகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் சமர்ப்பிக்க உள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ``விவசாயத்தைப்போல மீன் உற்பத்தியும் நல்லதொரு வருமானம் ஈட்டும் தொழிலாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 13 மில்லியன் டன் என்ற மீன் உற்பத்தி இலக்கை அடைந்ததோடு, 15 மில்லியன் டன் அளவில் அதிக உற்பத்தியும் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த மீன்வள ஆராய்ச்சி மூலம் மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியையும் எட்டக்கூடிய அளவில் நாடு உள்ளது" எனத் தெரிவித்தார்.
மொத்த வேளாண்துறை உற்பத்தியில் ஒவ்வொரு வருடமும் மீன்வளமானது 7 சதவிகித பங்கு வகிக்கின்றது. மத்திய அரசு நன்னீர் மீன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து, மீன் உற்பத்தியை இருமடங்காக்க செயல்பட்டு வருகிறது. மேலும், நீலப்புரட்சியில் ஆண்டுதோறும் 8 சதவிகித மீன் உற்பத்தியை அதிகப்படுத்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தன் சிறப்புரையில் தெரிவித்தார்.

தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ``தமிழக அரசின் நலத்திட்டங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளர்ப்போரின் பொருளாதார நிலைமையை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றன'' என்றார் .

டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுகுமார் பேசுபோது,
``மீன் வளம் குறித்து இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரும் கருத்தரங்கு இது. ஆசிய மீன் வளச்சங்கம்தான் முதலில் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்தது. அதன் தொடர்ச்சியாக ஆசிய மீன்வளச் சங்கத்தின் இந்தியக்கிளை இக்கருத்தரங்கை நடத்துகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதன் 12-வது கருத்தரங்கு முதன்முறையாக சென்னையில் நடக்கின்றது. 2021-ம் ஆண்டே நடத்தப்பட வேண்டிய இக்கருத்தரங்கு கொரோனா சூழல் காரணமாகத் தற்போது நடத்தப்படுகிறது'' என்றார்.