Published:Updated:

மீன் பண்ணைக்கு மின்சாரம்... வேளாண் ஏற்றுமதிக்குப் பயிற்சி... பல விதமான பட்டயப்படிப்பு...

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

மீன் பண்ணைக்கு மின்சாரம்... வேளாண் ஏற்றுமதிக்குப் பயிற்சி... பல விதமான பட்டயப்படிப்பு...

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

‘‘மீன் பண்ணை அமைக்க உள்ளோம். முதலில் எந்த அளவில் தொடங்கலாம். இதற்கு விவசாயத்திற்கான இலவச மின்சாரம் பயன்படுத்தலாமா?’’

ம.புகழேந்தி, அன்னவயல்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மீன் பண்ணையாளரும் தமிழ்நாடு மீன் வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தின் கெளரவத் தலைவருமான பி.கே.சி.சி.கணேசன் பதில் சொல்கிறார்.

‘‘மீன் பண்ணைத் தொடங்குவதற்கு வாழ்த்துகள். இலவச மின்சாரம் என்று இனி சொல்ல வேண்டாம். வேளாண் உற்பத்தி மின்சாரம் என்று சொல்லுங்கள். அரசு நமக்கு இலவசமாக மின்சாரம் கொடுக்கவில்லை. இரவு, பகல் பாராமல் நாம் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க உழைக்கின்றோம். அதற்கு அரசு வழங்கும் வசதி இது.

மீன் குளம்
மீன் குளம்

சரி, மீன் பண்ணை விஷயத்துக்கு வருவோம். என்னுடைய பல ஆண்டுக்கால மீன் பண்ணை அனுபவத்தில், மீன் வளர்ப்பு என்பது லாபம் தரும் அற்புதமான தொழில். வேளாண் விளைபொருள்களை விடவும், மீன்களுக்கு நல்ல விலைக் கிடைத்து வருவது, இதன் சிறப்பு. எந்தத் தொழிலாக இருந்தாலும் அகலக் கால் வைத்தால் ஆபத்துதான். அது, மீன் வளர்ப்புக்கும் பொருந்தும். ஆகையால் முதலில் 25 சென்ட் நிலத்தில் மீன் குளம் வெட்டுங்கள். இதற்குக் கூட நீங்கள் செலவு செய்ய வேண்டாம். வேளாண் பொறியியல் துறையினர், பண்ணைக் குட்டை வெட்டிக் கொடுக்கின்றார்கள். உடனே அவரசப்பட்டு அதிக ஆழத்தில் குளம் அமைத்து விட வேண்டாம். ஒன்றரை மீட்டர் ஆழம் இருந்தால் போதும். கட்லா, ரோகு, மிர்கால், புல் கெண்டை ஆகிய உள்நாட்டு மீன்களை வளர்க்கலாம். ஓர் ஆண்டில் இரண்டு முறை அறுவடை செய்யலாம். இந்த அனுபவத்தை வைத்து, அடுத்து ஒரு ஏக்கரில் குளத்தை விரிவாக்கி மீன் வளர்க்கலாம். இதில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் இரண்டு முறை மகசூல் எடுக்கலாம். ஓர் அறுவடைக்குச் செலவு போகக் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் நிகர லாபம் கிடைக்கும். இரண்டு அறுவடைக்கும் சேர்த்து 50,000 ரூபாய் கையில் நிற்கும். உங்களுக்குத் திறமை இருந்தால் இன்னும் கூடுதல் லாபம் பெறலாம்.

இப்போது, வேளாண் உற்பத்தி மின்சாரத்தைப் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள். மீன் குளம் அமைக்கும்போதே... இதற்கு விவசாய மின் இணைப்புப் பயன்படுத்த உள்ளேன் என உங்கள் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தின் உதவிச் செயற்பொறியாளரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவர் தன் கோப்பில் பதிவு செய்து கொள்வார். மின்சார வாரிய அலுவலர்கள், உங்களுடைய மீன் பண்ணைக்கு ஆய்வுக்கு வந்தால்... வேளாண் உற்பத்தி மின்சாரம் பயன்படுத்த விண்ணப்பம் கொடுத்துள்ளேன் என்று நீங்கள் கம்பீரமாகச் சொல்லலாம். உங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.

இப்படி ஒரு எளிதான வழி இருப்பது பல விவசாயிகளுக்குத் தெரியாது. இதைப் பெறப் பல ஆண்டுகள் எங்கள் சங்கம் மூலம் காந்திய வழியில் போராடினோம். அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டுத் தமிழக அரசு மீன் பண்ணைக்கும் வேளாண் உற்பத்தி மின்சாரம் வழங்கலாம் என்று அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் மீன் வளர்க்கும் விவசாயிகள் பயன் பெற்று வருகிறார்கள். அந்தப் பட்டியலில் நீங்களும் இடம் பிடியுங்கள்.’’

தொடர்புக்கு,

பி.கே.சி.சி.கணேசன், செல்போன்: 94428 60644.

பி.கே.சி.சி.கணேசன், எஸ்.நடராஜன்
பி.கே.சி.சி.கணேசன், எஸ்.நடராஜன்

‘‘தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் எங்கு உள்ளது? இங்கு என்ன வகையான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன?’’

@ஆர்.செல்லமுத்து, பழநி.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநரும் மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் முதன்மை செயல் அலுவலருமான எஸ்.நடராஜன் ஐ.ஏ.எஸ் பதில் சொல்கிறார். ‘‘இந்த மையம் 1971-ம் ஆண்டு, சென்னையில் மாநில அளவிலான பயிற்சி மையமாகத் தொடங்கப்பட்டது. 1991-ம் ஆண்டில் திருச்சிக்கு மாறுதல் செய்யப்பட்டது. 2004-ம் ஆண்டு சேலம், உத்தமசோழபுரத்தில் உள்ள விற்பனைக் குழு தலைமை அலுவலக வளாகத்தில், இப்பயிற்சி மையத்திற்கென விடுதி வசதியுடன் கூடிய அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது சேலத்தில் செயல்பட்டு வருகிறது.

மாநிலத்திலுள்ள 27 விற்பனைக் குழுக்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, வேளாண் விளைபொருள் விற்பனை தொடர்பான சந்தை விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விற்பனை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. தற்போது இம்மையம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழகத்தில் 500 ஊரக இளைஞர்களுக்கு திறன் வள பயிற்சிகளை அளிக்க உள்ளது. குறிப்பாக, விவசாயிகளின் பண்ணை வருமானத்தை மும்மடங்காக்கும் நோக்கில், சந்தைச் சார்ந்த வேளாண்மை மற்றும் சந்தை நுண்ணறிவு குறித்த பயிற்சிகள், வேளாண் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சிகளுக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 20 மற்றும் 40 பயிற்சியாளர்கள் அமரக்கூடிய வகையில் இரண்டு வகுப்பறைகள் இங்கு உள்ளன. விடுதி வசதியும் உள்ளது.

பயிற்சி நிலையம்
பயிற்சி நிலையம்

இந்திய அளவில், வேளாண் விளைபொருள் விற்பனை தொடர்பாகச் செயல்படும் 5 பயிற்சி மையங்களில், இதுவும் ஒன்றாகும். தேசிய அளவில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் கொண்ட முன்னணி பயிற்சி மையம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. இதனால்தான் மத்திய அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் ஆய்வு இயக்ககத்தின் சார்பில், விற்பனைக் குழு அலுவலர்களுக்கான, பயிற்சி இங்கு நடத்தப்படுகிறது.

பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்குக் காலை வேளையில், யோகா மற்றும் மனநலப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தங்குமிடம் மற்றும் மூன்று வேளை உணவும் வழங்கப்படுகின்றன. இவற்றுக்குக் கட்டணமில்லை. ஆர்வம் உள்ள விவசாயிகள், பயிற்சி பெற்றுப் பயன்பெற அழைக்கிறோம்.’’

தொடர்புக்கு, மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம், சேலம்.

செல்போன்: 94432 80952, 99524 17105.

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டயப்படிப்பு பற்றிச் சொல்லுங்கள்?’’

ம.காமராஜ், வேடச்சந்தூர்.

‘‘கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளி மற்றும் தொலை தூரக்கல்வி இயக்ககம் மூலம் 13 வகையான பட்டயப்படிப்பு வழங்கப்படுகின்றன.

‘வேளாண் இடுபொருள் என்ற பெயரில் பட்டயப்படிப்பு உள்ளது. இந்தப் பட்டயப் படிப்பில்... உரம், விதை, பூச்சி மருந்து விற்பனையாளர்கள், உரிமம் பெறுவதற்கான அடிப்படை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் பண்ணைத் தொழில்நுட்பம், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியல், தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், பண்ணைக்கருவிகள் மற்றும் அதன் பராமரிப்பு, அங்கக வேளாண்மை, கரும்பு சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள், வேளாண் கிடங்கில் தரக்கட்டுப்பாடு, வணிக ரீதியில் உயிரியல் பூச்சி மற்றும் உயிர் பூஞ்சை நோய் கொல்லிகள் உற்பத்தி, உணவு அறிவியல் மற்றும் பதப்படுத்துதல், மருத்துவப் பயிர்கள் உற்பத்தி மற்றும் தர நிர்ணயம், தேயிலை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.’’

தொடர்புக்கு,

இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலை தூரக்கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்- 641003. செல்போன்: 94421 11048 /94890 51046.