Published:Updated:

பர்லியார்: வாட்டத்தில் மலர்‌ நாற்றங்கால் தொழில்; நம்பிக்கையளிக்கும் பழ நாற்றுகள்

'இந்த மாதிரி ஒரு சோதனைக் காலம் வந்ததே இல்லை. பூச்செடிங்க, அழகுத் தாவரங்கள மக்கள் யாரும் வாங்குறது இல்ல. ஜன நடமாட்டமும் இல்லை'.

மலைப்பிரதேசமான நீலகிரியின் மிக முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதை.

பர்லியார்
பர்லியார்

பசுமை நிறைந்த அடர் வனத்தினூடாக, கொண்டை ஊசி வளைவுகளுடன் நெளிந்து செல்லும் இந்த அழகிய மலைப்பாதையின்‌ அடையாளங்களில் ஒன்றாக இருப்பது பர்லியார். குன்னூர் மலையுச்சியிலிருந்து தவழ்ந்து வந்து பவானியில் கலக்கும் இந்த ஆறே, கோவை - நீலகிரி மாவட்டங்களின் எல்லையாக உள்ளது. இந்த ஆற்றின் பெயராலேயே பர்லியார் என இந்தப் பகுதி காரணப்பெயர்‌ பெற்றது.

நாகலிங்க மரங்கள், துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட வேறு எங்கும் எளிதில் கிடைத்திடாத பழங்களால் நிறைந்த கடைகள். அருகிலேயே அழகிய பழங்கால சிறிய சாலையோர வீடுகள், வீடு முழுக்க பூச்செடிகள் என எழில்கொஞ்சும் இந்த இடத்தை ஒருமுறை கடந்தவர்களும் நிச்சயம் மறக்க மாட்டார்கள். ஏனெனில், இந்த மலைப்பாதை பயணத்தில் இளைப்பாறுதலுக்கான தேநீர் ஸ்டாப்பிங் இதுதான்.

நாற்றங்கால் தொழில்
நாற்றங்கால் தொழில்

கிட்டத்தட்ட நடுக்காட்டில் அமைந்துள்ள இந்த சாலையோர கிராமத்தின் 100 சதவிகித பொருளாதாரமும் இந்தச் சாலையை நம்பியே உள்ளது. அனைவருமே சிறு, குறு வியாபாரிகள். பெருமழை காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு, 10 நாட்கள் சாலையை மூடினாலே இவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை இல்லாத வகையில், கடந்த நான்கு மாதங்களாக பொது முடக்கத்தால் இவர்களின் நிலை எப்படி உள்ளது எனக் காணக் கிளம்பினோம்.

பர்லியார்
பர்லியார்

வெறிச்சோடிய சாலைகள், அவ்வப்போது சென்றுவரும் ஆம்புலன்ஸ்கள், தார்ப்பாலின் போட்டு மூடப்பட்டுள்ள சாலையோர கடைகள். சோதனைச்சாவடியில் முழுப் பாதுகாப்பு உடையணிந்த அரசுப் பணியாளர்கள், தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படும் கார்கள். வழக்கம்போல் அசுர வேகத்தில் பறக்கும் டிப்பர் லாரிகள் என கைவிடப்பட்ட பகுதியைப் போல் நமக்கு அச்சமூட்டியது.

நூற்றுக்கணக்கான பசுந்தாவரங்களுடன் வீடே பூங்காவாக பூச்சட்டிகளின் அருகில் சாலையை வெறித்துப்பார்த்தவாறு கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த ஒரு அம்மாவிடம் அறிமுகமாகி பேசத் தொடங்கினோம். " இந்த லைன் வீட்ல 5 குடும்பம் இருக்கோம். எல்லோருக்கும் இந்தச் செடி கொடிங்கதான் உலகம். எங்க வீடு, நாற்றங்கால் எல்லாம் இதுதான். அடுப்பங்கரையில இருந்து வாசல் வரை பூச்சட்டியும், நாத்துமாதான் எப்போதும் இருக்கும். தினமும் 300 முதல் 500 ரூபாய் வரைக்கும் செடிங்க விற்கும். அத வச்சி பொழப்ப ஓட்டிக்குவோம். இந்த நாலு மாசமா ஒரு பொழப்பும் இல்ல.

சிறு, குறு வியாபாரிகள்
சிறு, குறு வியாபாரிகள்

முதல் போட்டு வாங்குன செடியெல்லாம் பூத்து உதிருது. மழை வெயில்னு பாத்துப் பாத்து வளக்குறோம் ஒண்ணுமே விக்கல. ரோஜா நாத்துல இருந்து எலுமிச்சை வரைக்கும் தொட்டியிலயே பட்டுப்போயிருமோனு பயமா இருக்கு. ஏதோ ஒண்ணு ரெண்டு பழ நாத்துங்க மட்டும் விக்குது. அத வச்சி ஓட்டுறோம். எப்போ நெலம சரியாகும்னு தெரியல. பழைய மாதிரி இந்த ரோட்ல வண்டிங்க போனால்தான் எங்க பாடு தீரும்" பெருமூச்சுடன் பேசினார்.

அடுத்த வீட்டில் ரம்பூட்டான் நாற்றுகளை அடுக்கிக்கொண்டிருந்த முதியவரிடம் பேசினோம். " 30 வருசமா நாத்து விக்கிறேன். இந்த மாதிரி ஒரு சோதனைக் காலம் வந்ததே இல்லை. பூச்செடிங்க அழகுத் தாவரங்கள மக்கள் யாரும் வாங்கறது இல்ல. ஜன நடமாட்டமும் இல்லை.

கீழிருந்து விவசாயிங்க சிலபேர் வண்டிய கொண்டுவந்து பழ நாத்துகள கேட்டு வாங்கிட்டுப் போறாங்க. இப்போ, மங்குஸ்தான் நாத்துக்கு நல்ல கிராக்கி இருக்கு. இதனால பழ நாத்து உற்பத்தி பண்ணலாம்னு இறங்கிட்டோம்" என்றார் நம்பிக்கையுடன்.

பர்லியார்
பர்லியார்

நம் முகத்தையே பார்த்துக்கொண்டிருத்த மற்றொரு முதியவர், ''வெள்ளரிக்கா, மாங்கா எல்லாம் வெட்டி, பஸ்ல வரவங்கிட்ட ஜன்னல் வழியா விப்பேன். இப்போ பஸ்ஸே இல்ல. டெய்லி காலைல இருந்து ரோட்டப் பாத்துட்டு வீட்டுக்குப் போறேன் கவர்மென்ட்ல சொல்லி ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுங்க" என்றார் வெகுளியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு