Published:Updated:

காங்கிரஸைக் குற்றம்சாட்டிய மோடியின் ஆட்சி... உணவுப்பொருள் வீணாவதில் மாறாத காட்சி!

உரம் போடுதல்
உரம் போடுதல்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் உணவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய உணவுக் கழக குடோன்களில் 65 லட்சம் கோடி மெட்ரிக் டன் உணவுப்பொருள்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரங்களை இழந்து பெரும் துயரத்தில் உள்ளார்கள். வருமானம் ஏதுமில்லாததால், ஒருவேளை உணவுக்கே அவர்கள் திண்டாடுகிறார்கள். குறிப்பாக பஸ், ரயில் எனப் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாததால், கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பல நூறு கி.மீ தூரம் நடந்தே செல்கிறார்கள். அவர்கள் உணவின்றி மிகவும் சிரமப்படுகிறார்கள். கொரோனாவால் சாகிறோமோ இல்லையோ, பசிக்கொடுமையாலேயே நாங்கள் செத்துவிடுவோம் என்று அவர்கள் அழுது புலம்புகிறார்கள்.

நெல்வயல்
நெல்வயல்

இரு வாரங்களுக்கு முன்பாக சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் விலங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு செத்துக்கிடக்கிறது. அந்த விலங்கின் மாமிசத்தை ஓர் இளைஞர் பிய்த்துத் தின்று கொண்டிருக்கிறார். அந்த வழியாக காரில் செல்லும் ஒருவர், அந்தக் காட்சியை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்திய மக்கள் எந்தளவுக்கு பசிக்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்துக்கு (எஃப்.சி.ஐ) சொந்தமாக நாடு முழுவதும் குடோன்கள் உள்ளன. அங்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன், வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு இந்திய உணவுக்கழக குடோன்களில் இருக்கும் உணவு தானியங்களை எடுத்து விநியோகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்தி வந்தனர். எஃப்.சி.ஐ குடோன்களில் இருந்த உணவுதானியங்களில் ஒரு பகுதி ஏப்ரல், மே மாதங்களில் பிரதமர் கரீப் அன்ன யோஜனா மூலம் விநியோகிக்கப்பட்டது.

உணவுதானிய மூட்டைகள்
உணவுதானிய மூட்டைகள்

ஆனாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், எஃப்.சி.ஐ குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 65 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் கெட்டுப்போய்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த அந்த உணவுதானியங்களை எப்படிக் கையாளுவது என்று அரசுக்குத் தெரியவில்லை என்று குற்றம்சாட்டும் எதிர்க் கட்சிகள், கொரோனா நோய்த்தொற்று நேரத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அவற்றை விநியோகித்திருந்தால் பெரிதும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளன.

விவசாயிகள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த உணவுதானியங்கள் இப்படி வீணாகின்றன. இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த உணவுதானியங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அரசால் சொல்ல முடியவில்லை.

விவசாயம்
விவசாயம்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இ-பாஸ் நிறுத்தம்? -கொரோனா பரவலால் `திடீர்' நடவடிக்கை

மாறாக, எஃப்.சி.ஐ குடோன்களில் உள்ள உணவுதானியங்களின் சேதங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் அரசால் சொல்ல முடிந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்த உணவுதானியங்களைப் பாதுகாப்பதில் இருந்த குறைபாடுகளும் அரசின் அக்கறையின்மையும் பா.ஜ.க ஆட்சியிலும் தொடர்கின்றன.

எஃப்.சி.ஐ குடோன்களில் உணவுப்பொருள்கள் வீணாவது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கொடுமை நிகழ்ந்து வருகிறது. பூச்சிகளால் அவை வீணாகின்றன. பெருச்சாளிகள் தின்று கொழுக்கின்றன. குடோன்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மழை, வெள்ள நேரத்தில் குடோன்களுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனாலும், உணவுதானியங்களை வீணாகின்றன. மேலும், பல இடங்களில் உணவுதானிய மூட்டைகள் நீண்டகாலமாக வெட்டவெளியில் வைக்கப்பட்டிருப்பதாலும் அவை கெட்டுப்போகின்றன.

நெல் அறுவடை
நெல் அறுவடை

எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் தவறான நிர்வாகத்தால் இந்த உணவுதானியங்கள் கெட்டுப்போகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறையும், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததுமே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் காரணம் சொல்கிறார்கள்.

உலக அளவில் சிறுதானியங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அரிசி, கோதுமை ஆகியவற்றை அதிகமான உற்பத்தி செய்வதில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பெரும்பாலான ஆண்டுகளில் உணவுதானிய உற்பத்தி இந்தியாவில் அபரிமிதமாகவே இருக்கிறது. ஆனால், அந்த உணவுதானியங்கள், நகரங்களின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கோ, கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளியவர்களுக்கோ பெரிதும் உதவுவதாக இல்லை. இது குறித்து இந்திய உணவுக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, வெளிப்படையாகப் பேசுவதற்கு அஞ்சினர். தங்களுடைய பெயர், அடையாளங்களை மறைத்துக்கொண்டு அவர்கள் பேசியதில் நமக்குத் தெரிந்த மூன்று முக்கியக் காரணங்கள்... ஊழல், நேர்மையற்ற விநியோகஸ்தர்கள், ஆட்சியாளர்களின் அலட்சியம் ஆகியவைதான்.

`நியூசிலாந்தைப் போல் தமிழ்நாடு...' அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கவனத்துக்கு!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் ஊழலாலும் ஏழைகள் பட்டினியால் வாடுகிறார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து கிடைக்கிற வருமானத்தில் கால் வயிறு அரை வயிறு கஞ்சியைக் குடித்துவிட்டு காலத்தை ஓட்டுபவர்கள்தான் இந்தியாவில் அதிகம். வேலை கிடைக்காத நாள்களில் வருமானம் இருக்காது. எனவே, அன்றைய தினம் காலி வயிறுடன்தான் அவர்கள் கடக்கிறார்கள். இந்தியாவில் சுமார் 19 கோடி மக்கள் தினமும் பட்டினியில் வாடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 19 கோடி என்பது, உலக அளவில் ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட மக்களில் 23 சதவிகிதம். ஒருபுறம், அபரிமிதமாக இந்தியாவில் உணவு உற்பத்தி இருக்கிறது. ஆனால், இத்தனை கோடி மக்களின் வயிற்றுப்பசியைப் போக்குவதற்கு அது பயன்படவில்லை. மாறாக, பெருச்சாளிகளின் வயிறுகளை அவை நிரப்புகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்திய உணவுக்கழகத்திடம் பொதுவிநியோக முறைக்காக வாங்கப்படும் உணவுதானியங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அவசரகாலங்களில் மக்களுக்கு விநியோகிப்பதற்காக உணவுதானியங்களைச் சேமித்து வைக்கும் பணி இந்திய உணவுக்கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் குளறுபடிகளும் குறைபாடுகளுமே இவ்வளவு பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம். குடோன்களில் இருப்பு வைப்பதற்கான இருக்கும் வசதிகளைத் தாண்டி, கூடுதலாக உணவுதானியங்களை எஃப்.சி.ஐ கொள்முதல் செய்கிறது. அவற்றை வைப்பதற்கு இடமில்லாமல் திறந்தவெளியில் அடுக்கிவைத்து தார்ப்பாய் போட்டு மூடுகிறார்கள். இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. திறந்தவெளியில் வைப்பதற்கான முறையைப் பயன்படுத்தி மட்டுமே இந்தியா முழுவதும் சுமார் மூன்று கோடி டன் உணவுதானியங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்விலாஸ் பாஸ்வான்
ராம்விலாஸ் பாஸ்வான்

திறந்தவெளியில் உணவுதானியங்களை வைத்திருப்பதால் பூஞ்சை மற்றும் ஈரப்பதத்தால் அவற்றின் தரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், மோசமான நோய்களை உண்டாக்குவதற்கும் அது காரணமாக அமைகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. திறந்தவெளியில் இருப்பதால் மட்டுமே 18 லட்சம் டன் உணவுதானியங்கள் வீணாவதாக மற்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோக, போக்குவரத்துக்காகக் காத்திருப்பதாலேயும் பெருமளவில் உணவுதானியங்கள் வீணாகின்றன. இதில் பல முறைகேடுகளும் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது எஃப்.சி.ஐ குடோன்களில் இருக்கும் உணவுதானியங்கள் திருட்டுத்தனமாக பொதுச்சந்தை விற்பனைக்காகத் திருப்பிவிடப்படுகிறது என்றும் செய்திகள் வருகின்றன. இந்த வகையில், அரிசியும் கோதுமையும் மட்டுமே 25.9 மில்லியன் டன் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் ஆய்வு கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக, பஞ்சாப் மாநிலத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்புடைய கோதுமை வீணானதைக் கண்டு கொந்தளித்துப்போன முன்னாள் மத்திய அமைச்சரான சாந்தகுமார், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு கோபத்துடன் ஒரு கடிதம் எழுதினார். பல அரசியல் தலைவர்கள் மத்திய ஆட்சியாளர்களிடம் இது குறித்து கடுமையாக முறையிட்டுள்ளார்கள். ஆனால், “உணவு தானியங்கள் வீணாவதைக் குறைக்கும் வகையில், ‘ஸ்டோரேஜ்’ வசதியை அதிகரிப்பதே எங்கள் செயல்திட்டத்தில் முதன்மையான பணி” என்று பல ஆண்டுகளாக ராம்விலாஸ் பாஸ்வான் சொல்லிக்கொண்டிருக்கிறார். இன்றுவரை அது செயல்படுத்தப்படவே இல்லை.

மோடி
மோடி

உணவுதானியங்கள் வீணாவது குறித்து 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, “எஃப்.சி.ஐ குடோன்களில் வீணாகிக்கொண்டிருக்கும் உணவுதானியங்களை ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” எனப் பிரசாரத்தின் பல இடங்களில் குறிப்பிட்ட மோடி, "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதைச் செய்யவே இல்லை” என்று குற்றம்சாட்டினார். ஆனால், பிரதமர் நாற்காலியில் அமர்ந்த பிறகு, அந்தப் பிரச்னையை மோடியே மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி முடிந்து, இரண்டாவது முறையாகவும் பிரதமராக அவர் ஆட்சியைத் தொடர்கிறார். கொரோனா ஊரடங்களால் கோடிக்கணக்கான மக்கள் பசிக்கொடுமையால் துயருறும் காட்சியாவது, 2014-ம் ஆண்டு உணவுதானியம் குறித்து தாம் பேசிய பிரச்னையை பிரதமர் மோடிக்கு நினைவுபடுத்தும் என்று நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு