மரபணு மாற்ற உணவுகள் பற்றிய வரைவு விதிமுறைகளை, 2021 நவம்பர் 15-ல், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ, (FSSAI) எனப்படும் உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி 5-ம் தேதி வரை வரன்முறை விதிகள் பற்றிய பொதுமக்களின் கருத்துகளை regulation@fssai.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்றும் பெரும்பான்மையான நாடுகளில் மரபணு மாற்றிய உணவுகளை மறுப்பு அளித்து வரும் நிலையில், இந்தியா மட்டும் ஏன் இதில் இவ்வளவு வேகம் காட்டுகிறது என்பது தெரியவில்லை. 2009-10-ல், மரபணு மாற்றிய கத்திரிக்காயானது, `பி.டி. கத்திரிக்காய்' என்ற பெயரில் நுழைய முயற்சிகள் நடந்தன. இதையெதிர்த்து நாடெங்கிலும், விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை எதிர்ப்பு தெரிவித்ததால், பி.டி கத்திரிக்காயின் அறிமுகம் கைவிடப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மரபணு மாற்றப்பட்ட உணவு, ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற ஆணித்தரமான ஆய்வுகள் இன்னும் நிரூபிக்கப்படாத பட்சத்தில், மீண்டும் மரபணு மாற்ற உணவுகளை இந்தியாவில் கொண்டு வர நினைப்பது, மக்களின் நலனில் அரசின் அக்கறையின்மையைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் பேசியபோது, ``மரபணுமாற்று விதைகளைக் குறித்து சொல்ல வேண்டுமானால், பி.டி கத்திரிகாய் வந்தபோதே, இந்தியா பயிராக இதை விற்க முடியாது எனத் தடை விதித்தது.
ஆனால், தற்போது மாற்று வழிகளான பதப்படுத்தப்பட்ட உணவுகளாகவும், கால்நடைத் தீவனங்களாகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சோயா, கடுகு எண்ணெய்களிலும் கொண்டு வருவதற்கான பல வழிகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சரி இப்படி மரபணு மாற்றுப் பயிர்களை நாட்டின் உள்ளே கொண்டு வராமல் கண்காணிக்க வேண்டிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழுள்ள (Genetic Engineering Appraisal Committee- GEAC) ஜி.ஈ.ஏ.சி, எனப்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு பொறுப்பற்ற முறையில், `உணவு பாதுகாப்பு ஆணையம் பார்த்துக்கொள்ளும்' என நழுவியுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையத்தில், இதை கண்காணித்து ஒழுங்குபடுத்த இதற்கென வல்லுநர்களோ, அறிவியலாளர்களோ கிடையாது.

மேலும் மரபணு மாற்று உணவை விற்க வருவோர், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சான்றிதழ் பெற்று, இங்கே மரபணு மாற்று உணவை விற்க, ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது வரைவு விதிமுறை.
மரபணு மாற்றப்பட்ட உணவுகள் விஷம் என நுகர்வோர், விவசாயிகள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், FSSAI வரும் 5-ம் தேதி வரை இந்த விதிகள் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தனி நபரரோ, அமைப்புகளோ, விவசாயக் குழுவாகவோ regulation@fssai.gov.in என்ற மின்னஞ்சலுக்கு கருத்துக்களை அனுப்பலாம் எனக் கூறியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், இந்த வரைவு அறிக்கை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இது ஒரு நாடு தழுவிய மக்கள் நலன் சார்ந்த விஷயமாக இருக்கும்பட்சத்தில், மொழியைப் படிக்க முடியாததால் இன்னும் இந்த பிரச்னை பலரை சென்றடையாமல் உள்ளது.
அது மட்டுமல்லாமல் எந்த ஒரு நுகர்வோர் குழுக்களையும் கலந்தாலோசிக்காமல் நிறுவனங்களுக்கு சாதகமாக சமரசம் செய்துள்ளது உணவு பாதுகாப்பு ஆணையம். இதற்கு ஒப்புதல் வழங்குவதில் எந்தெந்த அதிகாரிகள், அறிஞர்கள், நிபுணர்கள் இருப்பர் என்பதும் சொல்லப்படவில்லை. ஒப்புதல் பெற்ற பொருள்கள் சந்தைக்கு வந்த பின், அவற்றால் தீமை ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த வழியும் செய்யப்படவில்லை. இப்படி, பல சிக்கல்களோடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

உணவில் மேற்கொள்ளப்படும் தவறுகளைக் கண்டு பிடிப்பதை விடுத்து, எளிதாக எப்படியெல்லாம் இந்த விஷத்தை உள்ளே கொண்டு வர முடியும் என உணவு பாதுகாப்பு ஆணையமும் அரசும் செயல்படுவது கவலையளிக்கிறது.
முடிந்தவரை மரபணு மாற்று உணவுகள் குறித்த உங்களின் கருத்துக்களை regulation@fssai.gov.in என்ற மின் அஞ்சலுக்கு விரைவாக அனுப்புங்கள்'' என்று சொல்லி முடித்தார்.