Published:Updated:

சொல் மட்டும் போதாது!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

சொல் மட்டும் போதாது!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘இமாசலப் பிரதேச விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் மீண்டும் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டுமா? அதற்கு இப்போதே நாம் உறுதி ஏற்போம். படிப்படியாக ரசாயன பயன்பாட்டைக் குறைத்து நம் வருங்கால தலைமுறைக்கு நலமான, வளமான மண்ணை விட்டுச் செல்வோம்.’’

- இப்படி இமாசலப் பிரதேசத்தில் நடந்த விழாவில் இணையம் மூலம் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. 2016-ம் ஆண்டு இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டது. இதை அறிவித்த பெருமையும் நரேந்திர மோடியையே சேரும். சிக்கிமில் 75,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை வேளாண்மை நடந்து வருவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. சிக்கிம் மாநிலம், இப்படி இயற்கை பக்கம் திரும்ப தேசிய இயற்கை வேளாண்மை உற்பத்தித் திட்டமும் உறுதுணையாக இருந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், இன்னும் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தினால், சிக்கிம், இமாசலப் பிரதேசம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் அடுத்த 25 ஆண்டுகளில் படிப்படியாக இயற்கை வேளாண்மைக்கு மாறிவிடும். இதற்கு ஏற்றாற்போல் தமிழ்நாடு போன்ற மாநில அரசுகளும், இயற்கை வேளாண்மைக் கொள்கையை உருவாக்கும் பணியில் மும்முரமாக உள்ளன.

பசுமைப் புரட்சி வருவதற்கு முன்பு வரை இங்கு இயற்கை வேளாண்மைதானே நடந்து வந்தது. இந்திய விவசாயிகள் அரசு சொல்வதை வேத வாக்குபோல நம்பி கடைப்பிடிப்பவர்கள். இதனால்தான், ரசாயன உப்பை ‘உரம்’ என்ற பெயரில் கொடுத்தபோதும், பூச்சிக்கொல்லி விஷத்தை ‘மருந்து’ என்ற பெயரில் வழங்கியபோதும், பெரும்பாலான விவசாயிகள் மறுப்பு சொல்லாமல் பயன்படுத்தினார்கள். ‘மீண்டும் இயற்கைக்குத் திரும்புவோம்’ என்று மத்திய அரசு சட்டபூர்வமாக அறிவித்தால், அந்தப் பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. ‘2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும்’ என்ற பிரதமரின் இலக்கு இயற்கை வேளாண்மையால் மட்டுமே நனவாகும். அதற்குச் சொல் மட்டும் போதாது, செயலிலும் இறங்க வேண்டும்.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism