Published:Updated:

விவசாயிகள் சொல்லைத் தட்டாதே!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

ட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் இந்த இரண்டு தரப்பிலிருந்து வரும் குரல்களுக்குத்தான் கொஞ்சமாவது மதிப்பு கொடுக்கிறாங்க. முதலாவது நீதிமன்றம், இரண்டாவது ஊடகம்...’’ என்று வாட்ஸ் அப் காலில் அழைத்துப் பேசத் தொடங்கினார், விவசாயிகள் மத்தியில் பணியாற்றும் தொண்டு நிறுவன பெண் நண்பர். வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி அறச்சீற்றத்துடன் பகிர்ந்துகொண்டார். அதில் தமிழ்கூறு நல்லுலகம் அறிய வேண்டிய கருத்துகள் இருந்தன. அதை நீங்களும் கேளுங்கள்...

‘‘இருபது ஆண்டுகளுக்கும் மேல, விவசாயிகளோட வேலை செய்றோம். நானும்கூட விவசாயம் செய்றேன். வேளாண்மைத் துறையில உள்ள திட்டங்கள் பத்தி, விவசாயிகளைக் காட்டிலும் எங்களைப் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு நல்லாவே தெரியும். வேளாண்மைத் துறையில செயல்படுத்துற திட்டங்கள் மூலமா விவசாயிகளுக்குப் பெருசா நன்மைகள் கிடைக்கிறதில்ல. உதாரணத்துக்கு, சில திட்டங்களைச் சொல்றேன் கேளுங்க. தென்னையில் ஊடுபயிராக வெனிலா (வாசனைப் பயிர்) சாகுபடி செய்யலாம்னு ஒரு திட்டத்தைத் தோட்டக்கலைத்துறை மூலம் அறிவிச்சாங்க. பொள்ளாச்சி மாதிரியான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில ஊடுபயிராகச் சாகுபடி செய்யும்போது மட்டுமே, நல்ல தரமா விளையும். திண்டுக்கல், திருச்சி, மதுரை... மாதிரியான பகுதியில சாகுபடி செய்யும் போது, தரம் குறைஞ்சிடுது பூக்களும் சரியாகப் பூக்கிறதில்ல. கடைசியில விசாரிக்கும்போது, குளுமையான சூழ்நிலை இருந்தாதான், நன்றாக விளையும்னு சொன்னாங்க. இதுக்கு ஒரு பகுதி அரசு மானியம் கொடுத்தாலும், மீதித்தொகையைக் கடன் வாங்கிதான் விவசாயிங்க சாகுபடி செய்தாங்க. நல்ல வருமானம் கிடைக்கும்னு ஆசை ஆசையா பயிரிட்ட விவசாயிங்க அவங்க கையாலேயே வெனிலா செடியை அறுத்து எரிஞ்சாங்க. இதனால, இந்தத் திட்டம் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டத்தைத் தாண்டி வெற்றி அடையல. இதுக்கு எத்தனை கோடி செலவு செய்திருப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது. சில ஆண்டுகள்ல ஆட்சி மாற்றம் நடக்கவும், உயர் அதிகாரிகளும் மாறினாங்க. தென்னை யில வெனிலாவுக்குப் பதில் கோகோ பயிரிடலாம்னு அரசு செலவில் வெளிநாட்டுக்குப் போய்ட்டு வந்த உயர் அதிகாரி உடனடியாக அறிவிச்சார்.

‘கோகோ பயிர் செய்தால் நாங்களே வாங்கிக்கொள்கிறோம்’னு தனியார் நிறுவனமும் முன்வந்தது. இந்த முறை இன்னொரு பிரச்னை வந்துச்சு. கோகோ செடிங்க, செழிப்பா வளர்ந்துச்சு. கோகோவும் சடை சடையா காய்ச்சது. அறுவடை சமயத்துல, மரநாய்ங்க கோகோ பீன்ஸ் காய்களை ஓட்டைபோட்டு சேதப்படுத்திடுச் சுங்க. மரநாய் தாக்குதலைக் கட்டுப்படுத்தி, கோகோ சாகுபடிக்கு வழிகாட்ட வேண்டிய தோட்டக்கலைத்துறை அதிகாரிங்க, இந்தப் பிரச்னையைக் காதுகொடுத்துகூடக் கேட்கல. இதனால, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தைச் சுத்தி கோகோ பயிர் செய்த விவசாயிங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுது.

‘‘இஸ்ரேல், டென்மார்க்... போன்ற வெளிநாடுகள்ல விவசாயிகளோட கலந்து பேசிவிட்டுத்தான், திட்டங்களைச் செயல்படுத்துறாங்க.’’

இன்னொரு திட்டத்தையும் சொல்றேன் கேளுங்க. சில ஆண்டுகளுக்கு முன்னாடி உயர்ரகத் துவரையை மாநிலம் முழுக்க சாகுபடி செய்யணும்னு அறிவிச்சாங்க. இதுக்கும் மானியம்கூட கொடுத்தாங்க. தென்மாவட்டத்துல சாகுபடி செய்த விவசாயி களுக்கு, சரியா மகசூல் கிடைக்கல. இதை வேளாண்மைத்துறை அதிகாரிங்க கவனத்துக்குக் கொண்டு போனோம், ‘விவசாயிக, சரியாகச் சாகுபடி செய்திருக்க மாட்டாங்க. அதனாலத்தான் விளைச்சல் குறைஞ்சிருக்கும்’னு பழியைத் திருப்பிவிட்டாங்க. விசாரிச்சிப் பார்த்தா, இந்த உயர் ரகத் துவரை கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளுக்குத் தான் ஏற்றது. குறிப்பா, இரவு நேரத்துல குளிர் இருந்தால்தான், நல்லா பூ பூத்து விளைச்சல் கொடுக்கும்னு சொன்னாங்க.

உதாரணத்துக்குச் சொன்ன இந்த மூணு பிரச்னைகளுக்கும் மூலக்காரணம், எந்தப் பயிரை எங்கு சாகுபடி செய்யணும்ங்கிற அறிதலும் புரிதலும் இல்லாதவங்க திட்டங்களைத் தீட்டி மானியம்ங்கிற பெயர்ல அரசு பணத்தை வீணடிக்கிறாங்க. விவசாயி களுக்கும் நஷ்டத்தை உருவாக்குறாங்க. ஏதோ சில மாவட்டத்துல ஒரு பயிர் நல்லா விளைஞ்சா, அதை ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் சாகுபடி செய்யத் திட்டம் போடுற அதிகாரிங்க கொஞ்சமாவது யோசிக்கணும். வேளாண்துறை மூலம் இனி எந்தத் திட்டம் செயல் படுத்துவதாக இருந்தாலும், அதை அனுபவ விவசாயிகள் கொண்ட குழு ஒப்புதல் கொடுக்க வேண்டும்ங்கிற சட்டத்தை உருவாக்கணும். இதையெல்லாம் உங்க காதுல போட்டு வைச்சா, ஆட்சி யாளர்களோட கவனத்துக்கும் போகும். உபயோகமில்லாத திட்டங்களை உருவாக்கும் அதிகாரிகளுக்கும் உரைக் கணும்னுதான் விளக்கமா சொன்னேன்’’ என்று சூடாகச் சொல்லி முடித்தார், செல்போனும்கூட சூடாகியிருந்தது.

‘‘இஸ்ரேல், டென்மார்க்... போன்ற வெளிநாடுகள்ல விவசாயிகளோட கலந்து பேசிவிட்டுத்தான், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடைத்துறை திட்டங்களைச் செயல்படுத்துறாங்க. இப்படி திட்டங்களை உருவாக்கும் நாடுகள், சாதனைப் படைக்கிறாங்க. இதுபோல இங்கேயும் நடந்தால் நாமும்கூட சாதனை செய்ய முடியும்” என்கிறார் கொடைக் கானலைச் சேர்ந்த முன்னோடி மலர் விவசாயியும் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.மூர்த்தி.

உதயச்சந்திரன், 2007-ல் நடைபெற்ற பயிற்சி வகுப்பு
உதயச்சந்திரன், 2007-ல் நடைபெற்ற பயிற்சி வகுப்பு


2007-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இருந்தபோது, ஒற்றை நாற்று நடவு சம்பந்தமான பயிற்சி வகுப்பு வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பயிற்சியைப் பசுமை விகடன் இதழ் ஒருங்கிணைத்திருந்தது. முன்னோடி இயற்கை விவசாயிகள் பயிற்சி கொடுத்தார்கள். ‘‘வேளாண்மை அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள், அண்டை மாநில விவசாயிகள், பசுமை விகடன் என எல்லோரின் மூலமாக இந்த நல்ல நிகழ்வுகள் நடப்பது மனதுக்கு இனிமையாக இருக்கிறது. வழக்கமாக விவசாயிகள் கீழே அமர்ந்திருக்க... அதிகாரிகள் மேடையில் அமர்வார்கள். ஆனால், இங்கே விவசாயிகள் மேடையில் அமர்ந்திருக்க...அதிகாரிகள் கீழே அமர்ந்திருக் கிறார்கள். விவசாயம் ஜனநாயகப்படுத்தப்பட் டிருப்பதற்கு இதுவே சாட்சி. இன்று இங்கு விதைக்கப் பட்டிருக்கும் விதை நெல் நல்ல மகசூலைத் தரும் என நம்புகிறேன்’’ என்று பயிற்சியின் முடிவில் குறிப்பிட்டார் உதயச்சந்திரன். இதுபோன்ற அதிசயங்கள் எப்போதாவது தான் அரங்கேறும். மற்றபடி வேளாண்துறை அதிகாரிகள் பேசுவார்கள். விவசாயிகள் கேட்டுக் கொள்வதுதான் நடைமுறை வழக்கம்.

ஆனால், கேரளா, ஆந்திரா... போன்ற மாநிலங்களில் விவசாயிகள் பேசுவார்கள். அரசு அதிகாரிகள் அதைக் கேட்டுவிட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். இதை இரண்டு மாநிலங்களில் நானே நேரில் பார்த்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ‘மாநில பல்லுயிர்பெருக்க ஆணையம்’ அமைக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அப்போதைய முதல்வர் அச்சுதானந்தன், ஒரே ஒரு போலீஸ்காரருடன் எளிமையாக வந்திருந்தார். அரசு அதிகாரிகள் பாதி, விவசாயிகள் பாதி என்று அரங்கம் நிறைந்திருந்தது. இரண்டு நாள் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள்தாம் அதிகம் பேசினார்கள். இயற்கை விவசாயம் செய்தால் தான், மக்களும் நலமாக இருப்பார்கள். பல்லுயிர் கொண்ட இயற்கையும் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பதை வலுயுறுத்திப் பேசினார்கள். அதிகாரிகள் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார் கள். இந்த ஆலோசனைக் கூட்டமே, கேரளாவை இயற்கை விவசாயத்தை நோக்கித் திருப்ப அடிப்படையாக அமைந்தது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


விவசாயிகள் பங்கேற்புடன் செயல் படுத்தப்படும் திட்டங்கள் வெற்றி அளிக்கும் என்பதற்கு இதோ இன்னோர் உதாரணம். ‘‘வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யும் சில மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. 2016-ம் ஆண்டு ‘வேளாண்மை அமைச்சரவை’ (Agriculture Cabinet) என்று முதல்வர் தலைமையில் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அப்போதுதான் சிறுதானியங்களின் மறுமலர்ச்சிக்குத் திட்டமிட்டோம். ஒடிசாவின் சிறுதானிய விவசாயிகள், அனுபவம் மிக்கத் தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். பரிந்துரைகளை முதல்வரிடம் சமர்ப்பித்தோம். `ஒடிசா மில்லட் மிஷன்’ (OMM) என்ற குறுந்தானிய இயக்கம் அரசுத் திட்டமாக 2017-ல் அறிவிக்கப் பட்டது. முதலில் ஏழு மாவட்டங்கள்; இப்போது 14 மாவட்டங்களில் செயல்படுகிறது. 65 கோடியில் ஆரம்பித்த நிதி ஒதுக்கீடு இப்போது 576 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.

மல்கான்கிரியில் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கச் சென்றேன். பழங்குடி விவசாயிகளிடம் உரையாடினேன். அப்போது, ‘கேழ்வரகு என்பது வெறும் தானியம் இல்லை; அது எங்கள் பண்பாடு’ என்றார் ஒருவர். புறநானூற்று வரிகளின் எளிய பதவுரைபோல ஒலித்தது அந்தக் குரல். நியமகிரி பகுதியில் ஒரு பழங்குடி பலிச்சடங்கில் கேழ்வரகுப் படையலைப் பார்த்தபோது, சங்க இலக்கியத்தின் வேலன் வெறியாட்டத்தில் தினையை வைத்துக் கும்பிடும் காட்சிதான் நினைவுக்கு வந்தது. இப்போது ஒடிசாவில் கேழ்வரகு, நெல் போலவே அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆதரவால் வெளிச் சந்தையிலும் கூடுதல் விலை கிடைக்கிறது. ஒடிசாவில் கேழ்வரகு விவசாயிகளின் குடும்ப சராசரி வருமானம் 215 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக `நிதி ஆயோக்’ ஆய்வு கூறுகிறது’’ என்று ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘தமிழ் நெடுஞ்சாலை’ தொடரில் இந்தத் தகவலை எழுதியிருந்தார்.

வேறு என்ன சொல்ல?

`விவசாயிகள் சொல்லைத் தட்டாதே!’