Published:Updated:

தள்ளுபடிக்காக முன் தேதியிட்ட கடன்கள்! ஆவண திருத்தம் செய்த அதிகாரிகள்!

மரத்தடி மாநாடு

பிரீமியம் ஸ்டோரி

பேருந்துக்காகக் காத்திருந்தார் ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி. அந்த வழியாக வந்த ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், வாத்தியாரைப் பார்த்ததும் அவர் அருகே சென்றார்.

‘‘என்ன வாத்தியாரே... வெளியூர் பயணமா? வெள்ளையும் சொள்ளையுமா போறதைப் பார்த்தா தேர்தல் பிரசாரத்துக்குப் போற மாதிரியில்ல தெரியுது?” சிரித்துக்கொண்டே கேட்டார் ஏரோட்டி.

‘‘வாய்யா... நான் எங்க பிரசாரத்துக்குப் போறது, ஓட்டுப்போடுறது மட்டும்தான் என்னோட வேலை. மத்தபடி அரசியலுக்கும் நமக்கும் ஆகாதுய்யா. பேங்க் வரைக்கும் போயிட்டு வரணும். அப்படியே டவுன்லயும் ஒரு வேளை இருக்குது. பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கேன். வந்தபாடில்லை’’ புலம்பித் தீர்த்தார் வாத்தியார்.

அந்த நேரம் காய்கறிக் கூடையுடன் வந்து சேர்ந்தார் ‘காய்கறி’ கண்ணம்மா. ‘‘நானும் டவுனுக்குத்தான் போகணும் வாத்தியாரே. பஸ் வந்திடும்னு வேக வேகமா வந்தேன். பரவாயில்லை... பஸ் இன்னும் வரல’’ நிம்மதி பெருமூச்சுவிட்டார் காய்கறி.

‘‘பேங்க்ல நகைக்கடன் தள்ளுபடி ஆகியிருக்கான்னு பார்க்கப்போறீயளோ?’’ எரிச்சலாகக் கேட்டார் ஏரோட்டி.

‘‘அவரு எதுக்கோ போறாரு... உனக்கென்னய்யா... இம்புட்டு எரிச்சல்’’ சிரித்தபடியே கேட்டார் காய்கறி.

‘‘அப்புறம் இருக்காதா? நான் மூணு மாசத்துக்கு முந்திதான் நகையைத் திருப்புனேன். அதுக்குப் பிறகு, தள்ளுபடி அறிவிச்சுட்டாங்களே... அறிவிச்சதுதான் அறிவிச்சாங்க, அதை நாலு மாசத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாம்ல’’ அதே எரிச்சலோடு சொன்னார் ஏரோட்டி.

‘‘உடம்பு முழுக்க எண்ணெயைத் தடவிகிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான்யா ஒட்டும்’’ கண்ணம்மா சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்த ஏகாம்பரம், “அரசியல் வாதிகளுக்கு மட்டும் எண்ணெய் தடவாமலேயே எல்லா மண்ணும் ஒட்டுதே’’ அது எப்படியாம்?’’ என்றார் ஏகாம்பரம்.

‘‘சண்டை போட்டுக்காதீங்க. ஏகாம்பரம் சொல்றது உண்மைதான் கண்ணம்மா. கூட்டுறவு வங்கிகள்ல வழங்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி மூலமா அதிகமா பயனடைஞ்சவங்க அரசியல்வாதிகளும், கூட்டுறவு வங்கி அலுவலர்களும்தான்னு சொல்றாங்க விவசாயிக. இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். ஆனா, தஞ்சாவூர் மாவட்டத்துல வித்தியாசமான ஒரு கூத்து நடந்திருக்காம். அதாவது, போன வருஷம் டிசம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு, இங்கவுள்ள கூட்டுறவு வங்கிகள்ல பயிர்க்கடன் கொடுக் கலையாம். தமிழக முதல்வர், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிச்ச பிறகு, நிறைய கூத்து நடந்திருக்கு. ரெண்டு, மூணு மாசம் முன்னாடியே கடன் வாங்கின மாதிரி போலியா ஆவணங்கள் தயாரிச்சதா விவசாயிகள் சொல்றாங்க. பல கூட்டுறவு வங்கிகளோட ஆவணங்கள்ல திருத்தமும் செய்யப்பட்டுருக்காம். இந்த முறைக்கேட்டை கண்டுபிடிக்க, கடன் தள்ளுபடி பயனாளிகளின் பெயர், கடன் தொகை, கடன் கொடுத்த தேதி மாதிரியான விவரங்களை இணையதளத்துல வெளியிடணும்னு விவசாயிங்க கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

‘‘நல்ல வாயன் சம்பாதிக்க... நாறவாயன் தின்னக் கதையால்ல இருக்குது’’ சொலவடை யுடன் முகத்தைச் சுளித்துக்கொண்டார் காய்கறி.

‘‘இன்னொரு தஞ்சாவூர் மாவட்ட செய்தி சொல்றேன் கேளுங்க. திருமலை சமுத்திரம் பகுதியில இருக்கப் பிடாரி ஏரிக்கு, புதிய கட்டளை வாய்க்கால்ல இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்குறது வழக்கம். பல வாரங்களா, தண்ணீர் வரல. அதனால விவசாயிக திண்டாடிப் போயிட்டாங்களாம். இது நெற்பயிர்ல கதிர் வர்ற நேரம். இந்தச் சமயத்துல இப்படி ஆயிடுச்சேனு கதறுறாங்க. அதிகாரிகள்கிட்ட முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. அதனால வேகாத வெயில்ல பிடாரி ஏரிக்குள்ளாற இறங்கி நாள் முழுக்கப் போராட்டம் நடத்தியிருக்காங்க’’ என்றார் ஏரோட்டி.

தள்ளுபடிக்காக முன் தேதியிட்ட கடன்கள்! ஆவண திருத்தம் செய்த அதிகாரிகள்!

‘‘கூட்டணி கட்சிக சீட் வாங்குறதுல முட்டி மோதிகிட்டு இருக்கும்போல இருக்கே. கேட்ட சீட் கிடைக்கலைன்னா, வேற கூட்டணிக்குப் போயிடுறாங்க. இதுலயே தெரிஞ்சு போகுது அவங்க சுயநலம். சீட்டுக்காக அங்க இங்க அலையிறவங்களை மக்கள் எப்படிய்யா மதிப்பாங்க. அந்தக் காலத்து அரசியல் இப்படியா இருந்துச்சு?’’ வெறுப்பாகச் சொன்னார் வாத்தியார்.

‘‘அந்தக் காலத்துல கொள்கைக்காகக் கூட்டணி வெச்சாங்கய்யா... இப்ப பெரும்பாலும் கொள்ளைக்காகத்தானே கூட்டணி. அப்படித் தான்யா இருக்கும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’னு கவுண்டமணி சொன்ன கதையாதான் ஆகிப்போச்சு’’ என்றார் ஏரோட்டி.

‘‘அதுக்குன்னு ஒரு விவஸ்தை வேணாமா? போன தடவை தி.மு.க-வுல இருந்த கே.பி.ராமலிங்கம் இப்ப பி.ஜே.பி-க்குப் போயிட்டாரு. சரி, அது அவரு வயித்துப்பொழப்பு. அதை நாம ஒண்ணும் சொல்லக் கூடாது. ஆனா, போனா மனுசன் பொழப்ப பார்க்க வேண்டியதுதானே. அதை விட்டுட்டு டெல்லி விவசாயிகள் போராட்டத்தைப் பத்தி எகத்தாளம் பேசி வாங்கிக்கட்டிக்கிட்டாரு’’ என்றார் வாத்தியார்.

‘‘நம்ம மாதிரி ஆளுங்களுக்கு அதிகபட்சமா வாய் வாசப்படி வரைக்கும்தான் போகும். ஆனா, அரசியல்வாதிகளுக்கு வானத்து வரைக்கும் போகுமே... வாயை வாடகைக்கு விட்டுப் பொழைக்குற பல அரசியல்`வியாதி’கள் நாட்டுல நடமாடுது. இவரு என்ன சொன்னாராம்?’’ கோபமாகக் கேட்டார் ஏரோட்டி.

‘‘‘போராடுற விவசாயிங்க மண்டி புரோக்கர்க கிட்ட காசு வாங்கிட்டு வந்தவங்க. கூலிக்கு மாறடிக்குறாங்க’னு ஒரு நாளிதழ்ல நடுபக்கத்துல கட்டுரை எழுதியிருக்காரு. இம்புட்டு எழுதுனவரு அந்தச் சட்டத்தால என்ன நன்மைன்னு ஒரு வார்த்தைக்கூட எழுதல. அதனால கோபத்துல கொதிச்சு போயிட்டாங்க தமிழக விவசாயிகள்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன், தமிழக விவசாய சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர் உள்ளிட்ட பலரும் கே.பி.ராமலிங்கம் எழுதுன கட்டுரை நகலை எரிச்சு போராட்டம் நடத்தியிருக்காங்க’’ என்றார் வாத்தியார்.

அப்போது பேருந்து வரும் சத்தம் கேட்கவும், புறப்படத் தயாரானார்கள் வாத்தியாரும் கண்ணம்மாவும். முடிவுக்கு வந்தது மாநாடு.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

இயற்கையில் கலந்த மருத்துவர் ஜீவானந்தம்!

மருத்துவம் மக்களுக்கானது. அதை வியாபாரமாக்க அனுமதிக்கக் கூடாது என்று போராடியவர், தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றாக மக்களையே பங்குதாரர்கள் ஆக்கி அறக்கட்டளை மருத்துவமனைகளைத் தொடங்கியவர், ஈரோட்டைச் சேர்ந்த மக்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம்.

மாபெரும் மருத்துவப் புரட்சியை நடத்திய ஜீவானந்தம் சூழலியல் போராளியாகவும் தீவிரமாக இயங்கினார். தமிழகப் பசுமை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கிப் பல்வேறு சூழலியல் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். அடிப்படையில் கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் காந்திய சிந்தனைவாதி. ஜே.சி.குமரப்பாவின் தாய்மைப் பொருளாதாரம் நூலைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். மசானபு ஃபுகோகாவின் இயற்கைக்குத் திரும்புதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த நூல்களை மொழிபெயர்த்தவர். எண்ணற்ற விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். வாழ்நாள் முழுவதும் பசுமைப் போராளியாக, செயல் வீரராகக் களத்தில் நின்ற ஜீவானந்தம் கடந்த 02.03.2021 (வயது 76) அன்று இயற்கையில் கலந்துவிட்டார். பசுமை விகடன் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு