Published:Updated:

தமிழக அரசின் சார்பில் சேலத்தில் நடைபெறும் பிரமாண்ட விவசாயக் கண்காட்சி!

கண்காட்சி
கண்காட்சி

இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் கால்நடைகளை வளர்க்கும் முறை, கால்நடைகளைப் பாதுகாத்தல், அதன் மூலம் வருவாய்ப் பெருக்கம் குறித்தும் விரிவான கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் 900 ஏக்கரில் 1,000 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வரும் 9–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட இருக்கிறார். விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கத் தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.ஆர்.ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

exhibition
exhibition

இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில், கால்நடைகளை வளர்க்கும் முறை கால்நடைகளைப் பாதுகாத்தல், அதன் மூலம் வருவாய்ப் பெருக்கம் குறித்தும் விரிவான கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைக்கிறார்கள். அதேபோன்று வேளாண்மைத் துறையின் மூலமாக வேளாண் துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் வேளாண்மையில் நவீன யுக்திகளைக் கையாளுதல், புதிய சாகுபடி முறை, நீர் மேலாண்மை, அதன் மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்தும் பேச இருக்கிறார்கள்.

இந்த விழாவில் இடம்பெறும் கண்காட்சியானது 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாள்களும் நடைபெற உள்ளன. விழாவிற்கு வருகை தர உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 'கால்நடை வளர்ப்பு முறை, நாட்டினங்களைப் பாதுகாத்தல், நாட்டுப் பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் ஆகியவற்றையும் அதேபோன்று வேளாண்மைத்துறை மூலம் விவசாயத்தில் என்னென்ன புதிய ரகங்கள் உள்ளன என்பதையும், அதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கக்கூடிய பயன்கள், உழவன் செயலி பயன்பாடுகள் மற்றும் செயல் விளக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் செயல் விளக்கமும் செய்து காண்பிக்க ஏதுவாக 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.' இந்தக் கண்காட்சியில் பசுமை விகடன் அரங்கும் இடம்பெறுகிறது. பசுமை விகடன் ஸ்டாலில் முன்னோடி இயற்கை விவசாயிகள் ஆலோசனை கொடுக்க இருக்கிறார்கள். பசுமை விகடன் விவசாயப் புத்தகங்களும் இடம்பெறுகின்றன.

exhibition
exhibition

இவ்விழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். எனவே, விவசாயப் பொதுமக்கள் தலைவாசலில் 9, 10, 11–ம் தேதி ஆகிய 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வது மூலமாக வேளாண்மை, கால்நடை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

பின் செல்ல