Published:Updated:

`உறைகிணறு தோண்டி வைகையில் தண்ணீர் திருடும் அரசுப்பள்ளி ஆசிரியர்!' - கொதிக்கும் விவசாயிகள்

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

வைகை ஆற்றில் உறைகிணறு தோண்டி விவசாயத்துக்கு தண்ணீர் எடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு
வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு

வைகை ஆற்றில், வருடத்துக்கு இரண்டு முறை தண்ணீர் வந்தாலே பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் சூழலில், வைகை ஆற்றில் உறைகிணறு தோண்டி விவசாயத்துக்குத் தண்ணீர் எடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் போகிறது.

வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு
வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு

`தேனி மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள வைகை ஆற்றில், சுமார் 10-க்கு மேற்பட்ட உறை கிணறுகளை தனிநபர்கள் அமைத்திருக்கின்றனர். அதில் ஒன்று அரசுப்பள்ளி ஆசிரியர் அமைத்திருக்கிறார்' என்றுகூறி, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் முறையிட பள்ளப்பட்டி பகுதி விவசாயிகள் இன்று கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.

காளிராஜன்
காளிராஜன்

அப்போது நம்மிடம் பேசிய விவசாயி காளிராஜ் என்பவர், ``வைகையில் தண்ணீர் வந்தால்தான் எங்கள் கிராமத்துக்கு குடிக்க தண்ணீர். அதன்பிறகு தான் விவசாயம். இப்படியான ஒரு சூழலில், வைகையில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க, வைகை ஆற்றில் ஒரு தடுப்பணை கட்ட முயற்சி செய்தோம். கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்துக்குப் பிறகு தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து இடத்தைத் தேர்ந்தெடுத்து பணிகளை தொடங்க இருக்கிறார்கள். இந்த நேரத்தில், தடுப்பணை கட்ட இருக்கும் இடத்தின் அருகே, அரசுப்பள்ளி ஆசிரியரான கலைராஜன் மற்றும் அவரின் தந்தை ஆற்றில் உறைகிணறு தோண்டியிருக்கிறார்கள். கிணறு தோண்டிய மணலை தடுப்பணை கட்டக்கூடிய இடத்தில் குவித்துவிட்டார்கள். இதைக் கண்டித்துதான் இன்று கலெக்டரை சந்தித்துப் புகார் மனு கொடுக்க வந்திருக்கிறோம்” என்றார்.

இதுதொடர்பாக அரசுப்பள்ளி ஆசிரியர் கலைராஜனைத் தொடர்புகொண்டு பேசினோம்.``எனக்கும் அந்தக் கிணற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டே என் மீது பழி சுமத்துகிறார்கள். நேர்மையாக அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறேன். எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்” என்றார்.

வைகை ஆறு
வைகை ஆறு

வைகை ஆற்றின் கரை ஓரங்களில் இருக்கும் விவசாயிகள், ஆற்றில் தண்ணீர் செல்லும்போது பைப் வைத்து தண்ணீரை உறிஞ்சுவது தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், ஆற்றின் நடுவே உறைகிணறு அமைப்பது தற்போது அதிகரித்துவருகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?