தமிழ்நாடு அரசு ‘உயிர்ம வேளாண்மைக் கொள்கை’யினை அறிவிக்க வேண்டுமெனக் கோரி, திருச்சி அண்ணா சிலை அருகே பெருந்திரளாக உழவர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ‘நவீனம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரால் நம்மீது திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி உழவர்களைக் கடனாளியாக்கியது. வேளாண்மையை விட்டு உழவர்களை வெளியேற்றி வருகிறது. நீர், நிலம், காற்று என அனைத்தும் நஞ்சானது. உண்ணும் உணவிலும் நஞ்சு கலந்தது. வீரிய வித்துகள் என்ற பெயரால் உழவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒட்டுவிதைகள் வெள்ளத்தையோ, வறட்சியையோ, நோய்களையோ தாங்க முடியாத நோஞ்சான் பயிர்களையே உருவாக்கின. வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும், பசுமைப் புரட்சியின் அழிவிலிருந்து வேளாண்மையைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழர் மரபு வேளாண்மைக்கு மாற வேண்டிய தேவை உள்ளது. அரசின் பங்கேற்பும் ஆதரவும் இருந்தால் தான், இந்தத் தற்சார்பு வேளாண்மையை பெருமளவு பாதுகாத்து வளர்க்க முடியும்.
இன்று சூழல் பேரழிவும், புவி வெப்பமாதல் சிக்கலும், உழவர் தற்கொலையும் அச்சுறுத்திக் கொண்டுள்ள சூழலில், உலக நாடுகள் பலவும் இயற்கை சார்ந்த வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

வேளாண்மையை வளம் குன்றாத, லாபகரமானதாக, மதிப்புமிக்க தொழிலாக பாதுகாக்க வேண்டும். கிராமங்களில் இருந்து நகரம் நோக்கிய புலம்பெயர்வை மட்டுப்படுத்துவதற்கு, நிலத்தின் உயிர்ம வளத்தையும், உற்பத்தித் திறனையும் வளர்க்க வேண்டும். நிலம், நீர், காற்று மாசுபாட்டை தடுப்பதற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு நஞ்சில்லா உணவும், வேளாண் உற்பத்திப் பொருட்களும் கிடைப்பதற்கும், உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிப்பு மிகவும் தேவையாகும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ‘உயிர்ம வேளாண்மைக் கொள்கை’யை அறிவித்து, தமிழ்நாட்டை முதன்மையான இயற்கையோடு இயைந்த வேளாண்மை மாநிலமாக மாற்றி தற்சார்புள்ள தமிழ்நாட்டைப் படைக்க முன்வர வேண்டும்’ என்ற கருத்துகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தமிழர் மரபு வேளாண்மைக் கூட்டியக்கத்தின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் அவர்களிடம் பேசினோம். ``இயற்கை வழி வேளாண்மையை வளர்ப்பதற்கு அதிகாரமும், போதிய நிதியும் உள்ள தற்சார்பான உயிர்ம வேளாண்மை வாரியம் அமைத்து அனைத்து ஊராட்சிகளிலும் அதன் கீழ் அமைப்புகளை நிறுவ வேண்டும். இரசாயன வேளாண்மைக்கு வழங்கும், ஏக்கருக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் மானியத்தை மரபு வேளாண்மை உழவர்களுக்கும் வழங்க வேண்டும்.

இரசாயணம் இல்லாத, வேளாண்மையில் விளையும் விளை பொருட்களுக்கு சிறப்பு விலை வழங்கிக் கொள்முதல் செய்ய வேண்டும். அரசு விடுதிகள், மருத்துவமனைகள், சிறைச்சாலை போன்றவற்றில் இரசாயனம் இல்லாத இயற்கைவழி உயிர்ம வேளாண்மை விளைபொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் உயிர்ம வேளாண் விளை பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதேவேளையில் இந்திய அரசு மரபீனி மாற்றப் பயிர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. தற்போது பரிசீலனையில் உள்ள மரபீனி மாற்றக் கடுகு விதைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், மரபீனி மாற்றப் பயிர்களையும் விதைகளையும் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது” என்றார்.