Published:Updated:

மூடப்பட்டுக் கிடக்கும் வேலூர் மூலிகைப் பண்ணை - குடிகாரர்களின் கூடாரமாகும் அவலம்!

வேலூர் மூலிகைப் பண்ணை
வேலூர் மூலிகைப் பண்ணை ( ச.வெங்கடேசன் )

வேலூர் ஆற்காட்டான் குடிசைக் கிராமத்தை ஒட்டியுள்ளது, பாலமதி வனம். அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரால் மூலிகைப் பண்ணை ஒன்று தொடங்கப்பட்டது. அது, தற்போது பராமரிப்பின்றி அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வேலூர் ஆற்காட்டான் குடிசைக் கிராமத்தையொட்டியுள்ளது, பாலமதி வனம். அங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினரால் மூலிகைப் பண்ணை ஒன்று தொடங்கப்பட்டது. அது, தற்போது பராமரிப்பின்றி அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டோம்.

வேலூர் மூலிகைப் பண்ணை
வேலூர் மூலிகைப் பண்ணை
ச.வெங்கடேசன்

வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஆற்காட்டான் குடிசைக் கிராம மூலிகைப் பண்ணை நுழைவாயிலை அடைந்தோம். முகப்பில், பெரிய ஆலமரம் நிழல்தரக்கூடிய வகையில் பல விழுதுகளுடன் இயற்கை எழிலுடன் காட்சியளித்தது. அங்கிருந்த பலகை ஒன்றில் செடி, கொடி, மரம் வகைகளைச் சேர்ந்த ஆடாதோடை, செம்பருத்தி, சீமை அகத்தி, ஆவாரை, நந்தியாவட்டம், பிரண்டை , சிறு குறிஞ்சான், தூதுவளை, வசம்பு, சர்பகந்தா என 39 மூலிகைகள் வளர்க்கப்படுவதாக எழுதப்பட்டிருந்தது. உள்ளே ஒரு கி.மீ வரை சுற்றிப் பார்த்தோம், ஒரு மூலிகைச் செடிகூடக் கண்ணுக்குத் தென்படவில்லை.

மூலிகைப் பண்ணையைத் தேடி அலைந்தோம். அங்கு ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம் கேட்டோம். அவர், "கம்பி வேலிபோட்டு இருக்குது பாருங்க. அதுதான் மூலிகைப் பண்ணை" என்று ஆலமரத்தையொட்டியே ஓர் இடத்தைக் காட்டினார். “என்ன தாத்தா, மூலிகைச் செடி மாதிரி எதுவும் இல்லையே? புதரா இருக்கே” என்று நாம் கேட்க... அதற்கு அவர், "மூலிகைப் பண்ணையைப் பாதுகாக்கச் சுற்றிலும் கம்பிவேலி அமைத்து மோட்டார் மூலம் குளத்து நீரை இறைத்து பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்களை வளர்த்து விற்பனை செய்தாங்க. ஒரு கட்டத்துக்கு மேலாக முறையான பராமரிப்பு மற்றும் அதிகாரிகளின் கவனமின்மையால் பண்ணையிலிருந்த தாவரங்கள் அழியத்தொடங்கின. பின்னர், மோட்டார் மற்றும் பண்ணைக்கு அமைக்கப்பட்டிருந்த கேட் காணாமல் போனது.

மூலிகை எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
தற்போது குடிமகன்கள், திறந்தவெளி பாராகப் பண்ணையைப் பயன்படுத்துறாங்க. பீடி, சிகரெட் பற்றவைத்துவிட்டுத் தூக்கி எரியும் தீக்குச்சியால் பலமுறை மூங்கில் மரங்கள் எரிந்து நாசமாகியிருக்கு.

சிலர் மரங்களை வெட்டுறாங்க. அதற்குப் பணம் வாங்கிக்கிட்டு கண்டும்காணாத மாதிரி வனத்துறை அதிகாரிகங்க இருக்காங்க. டிராக்டரில் வண்டல் மண் அள்ளுறாங்க. இந்த மாதிரி நிறைய நடக்குதுங்க. சிலர் பெண்களையும் அழைத்துவந்து உல்லாசமாக இருந்துட்டுக்கூடப் போறாங்க. இந்த மூலிகைப் பண்ணைக்காக நிறைய கஷ்டப்பட்டது மாரிமுத்துதான். அவரு ஊருக்குள்ள இருப்பாரு. போய்ப் பாருங்க" என்று அதிகாரிகள்மீது பல குற்றச்சாட்டுககளை அடுக்கிவிட்டு விடைபெற்றார்.

மூலிகைப் பண்ணை பராமரிப்பு செய்த மாரிமுத்துவைச் சந்தித்துப் பேசினோம். அவர், "மூலிகைப் பண்ணை 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் 817 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. 5 வருஷத்துக்குப் பிறகு 3,100 ரூபாயா அதிகப்படுத்துனாங்க. சில மாசம் சம்பளம் கொடுப்பாங்க, நிறைய மாசம் கொடுக்கவே மாட்டாங்க. எனக்கு இப்போ 50 வயசு ஆகுது. நான் பொழப்ப நடத்தணும். அதனால மூணு வருஷத்துக்கு முன்னாடி அந்த வேலைய விட்டுட்டு நின்னுட்டேன். இப்போ அந்த மூலிகைப் பண்ணை பாதுகாப்பில்லாம சமூக விரோதிகளின் கூடாரமா மாறியிருக்கு. ஆடு மாடுகள் எல்லாம் மேய்ந்து மூலிகைச் செடிகள் இருந்த அடையாளமே இல்லாத அளவுக்கு ஆகிடுச்சி. எனக்குப் பிறகு யாரும் அதைப் பராமரிக்கலை. இப்போ எங்க வீட்டுலேயே பின்னாடி மூலிகைச் செடி போட்டு அதை எல்லோருக்கும் கொடுத்துட்டு இருக்கேன்” என்றார்.

மூலிகைப்பண்ணை
மூலிகைப்பண்ணை
ச.வெங்கடேசன்

இதுகுறித்து ஊர் பொது மக்களிடம் கேட்டபோது, "நாங்கள் காட்டுக்குள் அத்துமீறிப் போவதில்லை. வனப்பகுதிக்கு எந்தக் கேட்டும் கிடையாது. மூலிகைப் பண்ணைக்கும் கேட் கிடையாது. கேட் அமைத்து பாதுகாப்பானதாகப் பராமரிக்காமல் இருப்பது வனத்துறையின் அலட்சியம். நாங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக மட்டும்தான் ஓட்டிச் செல்வோம். மற்றபடி, எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடுவது கிடையாது. அதுமட்டுமன்றி, மூலிகைப் பண்ணையை ஆடு, மாடுகள் மேய்த்து நாங்கள் அழிக்கவில்லை. பராமரிப்பின்றி நீர் பாய்ச்சாமல் இருந்ததால்தான் காலப்போக்கில் மூலிகைச் செடிகள் மாயமாகிவிட்டன" என்றனர்.

இதுகுறித்து வனச்சரக அதிகாரியான மூர்த்தியிடம் பேசினோம். "நீங்க சொல்ற மாதிரி எதுவும் அங்க நடக்க வாய்ப்பில்லை" என மறுத்தார். ”களப்பணியின்போது நாங்களே நேரில் பார்த்தோமே” என்றதற்கு, ”சாலை முழுவதும் மறைவான இடங்களில் குடிப்பிரியர்கள் மது அருந்துகின்றனர். அதுபோல மூலிகைப் பண்ணை இருக்கும் பாலமதி வனப்பகுதியும் மறைவாக இருப்பதால், உள்ளூர் இளைஞர்கள் வந்து போயிருப்பாங்க” என்று ஒப்புக்கொண்டார். மேலும் மூலிகைப் பண்ணை குறித்து கேட்டதற்கு, எஸ்.எப் கன்ட்ரோலில் வரும் என்று முடித்துக்கொண்டார்.

மூலிகைப்பண்ணை
மூலிகைப்பண்ணை
ச.வெங்கடேசன்

இதுதொடர்பாக எஸ்.எப் அதிகாரியான சோமசுந்தரத்திடம் கேட்டபோது, "இது சம்பந்தமாகப் பலமுறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளோம். தற்போதுவரை எந்தவிதமான நிதியும் பராமரிப்புக்காக வழங்கப்படவில்லை. கடந்த 2017 - 2018-ம் ஆண்டில் பாலாஜி என்ற ரேஞ்சர், மூலிகைப் பண்ணை பாரமரிப்புக்காக 55,000 ரூபாய் செலவளித்துள்ளர். ரூ.25,000 முதற்கட்டமாக வழங்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அளிக்கவில்லை. அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததே, மூலிகைப் பண்ணையை மேற்கொண்டு பராமரிக்க முடியாமல் போனதற்குக் காரணம்” என்றார்.

மூலிகைப் பண்ணையைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரைக்கு