நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பூங்காக்கள், நாற்றங்கால்கள், பழப்பண்ணைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. குன்னூர் சிம்ஸ் பூங்கா, பர்லியார், கல்லார் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பழப்பண்ணைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இங்கு விளைவிக்கப்படும் பழங்களை அரசு பழவியல் நிலையங்கள் மூலம் ஜாம், ஜெல்லி, ஜூஸ், ஊறுகாய் போன்றவற்றை உற்பத்தி செய்து, விற்பனை மையங்களில் குறைந்த விலையில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் இந்த பழப்பண்ணைகளில் பெர்சிமென், மங்குஸ்தான், துரியன் போன்ற சிறப்பு ரக பழ மரங்களை பராமரித்து பழங்களை சாகுபடி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பர்லியாரில் உள்ள அரசு பழப்பண்ணையில் தற்போது துரியன் பழ சீஸன் தொடங்கியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 35 துரியன் மரங்களிலும் பழங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. ஆரம்ப விலையாக ஒரு கிலோ துரியன் ரூ.520 ஆக தோட்டக்கலைத்துறை நிர்வாகம் நிர்ணயம் செய்துள்ளது.

துரியன் சீஸன் குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர், ``வழக்கமா மே மாச இறுதியில சீஸன் ஆரம்பிக்கும். இந்த வருஷம் ஒரு மாசம் தாமதமா தொடங்கியிருக்கு. குழந்தை பாக்கியம் வேணுங்குறவுங்க முக்கியமா இந்த பழத்தைத் தேடி வராங்க. வெளிய ஒரு சில வியாபாரிங்க ரூ.1000 - 2000னு அதிக விலைக்கு விக்கிறாங்க. இத தடுக்க அரசே வெளிப்படையா விலை நிர்ணயம் செய்கிறது. இந்த வருஷம் ஆரம்ப விலையா ரூ.520 நிர்ணயம் பண்ணிருக்கோம். அடுத்த மூன்று மாத அறுவடைக்கான ஏலம் விரைவில் விடப்படும்" என்றார்.