Published:Updated:

உலக்கை பாலை, கடம்பம்... ஆலய நந்தவனங்களில் அரிய மரங்கள் கண்டுபிடிப்பு!

கோயில்களில் மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கோயில்களில் மரங்கள்

இயற்கை |

உலக்கை பாலை, கடம்பம்... ஆலய நந்தவனங்களில் அரிய மரங்கள் கண்டுபிடிப்பு!

இயற்கை |

Published:Updated:
கோயில்களில் மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கோயில்களில் மரங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோயில்களில் நந்தவனங்கள் உள்ளன. இங்கு வளரும் மரங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தியது. இக்கணக்கெடுப்பின் போது, வேறு எங்கும் அதிகம் பார்த்திராத, மிகவும் பழைமை வாய்ந்த அரிய வகை மரங்கள் வளர்வது தெரியவந்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாட்டில் நடந்த இந்தக் கணக்கெடுப்புப் பணியில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை நீர்வளம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கோயில்களில் மரங்கள்
கோயில்களில் மரங்கள்

மரங்கள் அமைந்துள்ள இடம், புவியிடக்குறியீடு, மரத்தின் பெயர், தனித்துவ அடையாளம், சுற்றளவு, உயரம், வயது, மரத்தில் காணப்படும் உயிரினங்கள், மரத்தின் மூலம் பெறப்படும் நேரடி நன்மைகள், மரம் சந்திக்கின்ற பாதிப்புகள் மற்றும் மரம் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் போன்ற விவரங்களைத் இக்குழுவினர் சேகரித்தனர்.

கோயில்களில் மரங்கள்
கோயில்களில் மரங்கள்

இந்தக் கணக்கெடுப்பின் போது கிடைத்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட நெல்லை நீர்வளம் என்ற பெயரில் இயங்கும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இது குறித்துப் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி நதிக்கரையில் பல நூற்றாண்டுகளைக் கடந்த பழைமையான கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களில் நந்தவனங்கள் உள்ளன.

ஆட்சியர் விஷ்ணு
ஆட்சியர் விஷ்ணு

கோயில்களின் நந்தவனக் காடுகளில் நீர் வாழ் பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. கோயில்களின் நந்தவனங்களை முறையாகப் பராமரித்துப் பாதுகாக்கும் நோக்கத்தோடு மாவட்டம் முழுவதும் இருக்கும் கோயில்களின் நந்தவனங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவெடுத்தோம். முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள 131 கோயில்களைத் தேர்வு செய்தோம். நெல்லை நீர்வளம் அமைப்பைச் சேர்ந்த 100 தன்னார்வலர்களுக்கு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் சார்பில், இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

கோயில்களில் மரங்கள்
கோயில்களில் மரங்கள்

இக்கோயில்களின் நந்தவனங்களில் 97 வகையான சுமார் 3,664 இயல்மரங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. நந்தவனக் காடுகளில் 941 வேப்ப மரங்களும், 512 தென்னை மரங்களும், 307 வில்வ மரங்களும், 196 தேக்கு மரங்களும், 120 மா மரங்களும், 102 அரச மரங்களும், 102 நீர் மருது மரங்களும், இலுப்பை, புங்கை, நெல்லி, புளி, ஆலமரம், நாவல் உள்ளிட்ட ஐம்பதுக்கும் அதிகமான மரங்களும் வளர்வது தெரிய வந்துள்ளது.

இந்த மரங்களைப் பாதுகாப்பதுடன், இம்மரங்களில் தங்கி கூடுகட்டி வாழும் பறவைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தகட்டமாகக் கிராமங்களில் வாழும் பெரியவர்களிடம் நந்தவனங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி, அங்கு ஏற்கெனவே இருந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், நாற்றங்கால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மதிவாணன்
மதிவாணன்

கணக்கெடுப்பில் பங்கேற்ற அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரான மதிவாணனிடம் நாம் பேசியபோது, “ராஜவல்லிபுரம் செப்பறை கோயில் வளாகம் மற்றும் சீவலப்பேரி சுடலை கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5,600 பனை மரங்கள் இருப்பது இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. அத்துடன், நெல்லையின் அடையாளமான நெல்லையப்பர் கோயிலில் பல நூற்றாண்டுகளைக் கடந்த உலக்கை பாலை மரம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மரம் நெல்லை மாவட்டத்தின் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.

கோயில்களில் மரங்கள்
கோயில்களில் மரங்கள்

ஒரு காலத்தில் கோயில் நந்தவனங்களில் கடம்பம் மரங்கள் அதிகம் இருந்திருக்கின்றன. அதனால் சில இடங்களுக்குக் கடம்ப வனம் என்று கூடப் பெயர் இருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த மரங்கள் குறைந்துவிட்டன, ராதாபுரம் பகுதியில் இரு மரங்களும் வள்ளியூரில் ஒரு மரமும் மட்டுமே இருக்கின்றன. கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 131 கோயில்களில் ஏழு கோயில்களின் நந்தவனங்களில் ஒரு மரம் கூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. 50 கோயில்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே மரங்கள் உள்ளன.

கோயில்களில் மரங்கள்
கோயில்களில் மரங்கள்

சில கோயில்களின் நந்தவனங்களில் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் அந்த மரங்களால் சூழலியல் சேவைகள் குறைவாகவே கிடைக்கின்றன. அத்துடன், சில கோயில்களின் நந்தவனங்களின் மரங்களைச் சுற்றிலும் சிமென்ட் போட்டுத் தளம் அமைக்கப்பட்டிருப்பதால் மரங்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்காத சூழல் இருக்கிறது. நந்தவனங்கள் பல்லுயிரினங்களின் வாழ்விடம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்து சமய அறநிலையத்துறையும் நந்தவனங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களின் நந்தவனங்களிலும் இத்தகைய கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்களைப் பாதுகாக்க முடியும். அதற்கான நடவடிக்கை விரைவாக இருக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.