Election bannerElection banner
Published:Updated:

`மேய்ச்சல் நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது!'- மேய்ச்சல் சமூகத்தின் `தேர்தல் கோரிக்கைகள்'

தொழுவம் அமைப்பினர்
தொழுவம் அமைப்பினர்

மேய்ச்சல் சமூக மக்களின் கோரிக்கைகளை, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறச் செய்ய வலியுறுத்தி, தொழுவம் அமைப்பினர் மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

கிடை மாடுகள், கிடை ஆடுகளைக் கொண்டு மேய்ச்சல் தொழில் செய்துவரும் மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். குறிப்பாக, மலை மற்றும் மலை சார்ந்த மாவட்டங்களான, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கிடை மாடுகளை வைத்துள்ள மக்கள் அதிகம் என்றே சொல்லலாம். வனத்துறையின் கட்டுப்பாடுகள், மேய்ச்சல் நிலங்களின் ஆக்கிரமிப்பு எனக் கிடை மாடுகள் வைத்திருப்போர் சந்திக்கும் சவால்களால், அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவருகிறது.

கிடை மாடுகள்
கிடை மாடுகள்

இந்நிலையில், மேய்ச்சல் சமூக மக்களின் கோரிக்கைகளை, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த 'தொழுவம்' அமைப்பினர், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். தொழுவம் அமைப்பின் ஆய்வாளர் கபிலன் நம்மிடையே பேசும்போது, ``தமிழகம் முழுவதுமே மேய்ச்சல் சமூக மக்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக, தென் மாவட்டங்களில் கிடை மாடுகள், கிடை ஆடுகள் வைத்திருப்பவர்கள் அதிகம். இடம்பெயரும் இவர்கள், மண்ணை வளமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். மேய்ச்சல் சமூக மக்களுக்கு எனச் சில நீண்ட கால கோரிக்கைகள் உள்ளன.

தேனி: பன்றி தழுவும் போட்டி - மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் 17 நாள்களுக்குப் பிறகு வழக்கு!

மேய்ச்சல் சமூக மேம்பாட்டு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். மேய்ச்சல் சமூக மாணவர்களுக்கு கால்நடை படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பாரம்பர்ய மேய்ச்சல் சமூகத்தினர் வளர்க்கும் கிடை மாடுகள், கிடை ஆடுகளை வறள் நிலப்பகுதி, காடு, மலைகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் உர அங்காடிகளில் கிடை மாட்டு சாணம், கிடை ஆடு எரு ஆகியவற்றின் தொழு உரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கபிலன்
கபிலன்

தேசிய நெடுஞ்சாலைகளை, கிடை மாடுகள், கிடை ஆடுகள் கடந்து செல்ல சுரங்கவழிப் பாதை அமைக்கப்பட வேண்டும். மேய்ச்சல் வழித்தடம், மேய்ச்சல் புறம்போக்கு இடம் குறித்த தெளிவான வரைபடம் அமைக்கப்பட வேண்டும்.

மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை வேறெந்த உபயோகத்துக்கும் மாற்றம் செய்யக் கூடாது என 2001-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை உறுதி செய்ய தமிழக கால்நடைப் பராமரிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார் கபிலன்.

`ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு வில்லன்’ - தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு