Published:Updated:

வெங்காயம், பூண்டு விலை எப்போது குறையும்?- பின்னணி தகவல்கள்!

முக்கிய உற்பத்தி மண்டலமாகிய மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகள் வறட்சி, மழையெனத் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள்.

Onion
Onion

நேற்றுவரை வெங்காயம் சாதாரண விஷயம்... இப்போது அது மத்திய மாநில அரசுகளை அலற வைத்துக்கொண்டிருக்கிறது. மக்களைக் கலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வெங்காயம் விலை உயர்வது இயல்புதான். ஆனால், சில நேரங்களில் வழக்கத்தைவிட, பல மடங்கு விலை உயர்ந்துவிடும். தற்போதும் அதுதான் நடந்துவருகிறது. கிலோ 30 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Onion
Onion

பெரிய வெங்காயம் உற்பத்தியில் கடந்த சில மாதங்களாகச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில்தான் பெரிய வெங்காயம் அதிகளவு விளைகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் முக்கிய இடம் வகிக்கிறது. நாசிக்கில் உள்ள லசல்கான் சந்தைதான் இந்தியாவின் முக்கியமான வெங்காயச் சந்தை. அங்குள்ள சில பெரும் வியாபாரிகள் வெங்காயத்தைப் பதுக்கி வைத்து, விலையைப் பல மடங்கு அதிகரிக்க வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்த வெங்காய உற்பத்தி 6 முதல் 6.5 லட்சம் குவிண்டால். அதனால் கிலோ 20 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு செப்டம்பரில் உற்பத்தி 3 லட்சம் குவிண்டால். அதனால் விலை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மழைக்குப் பயந்தே பெரும்பாலான விவசாயிகள், வெங்காய சாகுபடியைக் கைவிட்டுவிட்டார்கள். குறைந்த அளவு பயிரிடப்பட்ட வெங்காயமும் தற்போதைய மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 40 சதவிகிதம் மகசூல் குறைந்துள்ளது
Onion
Onion

கடந்த மூன்று ஆண்டுகளாக வெங்காயத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள். குறிப்பாக, முக்கிய உற்பத்தி மண்டலமாகிய மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகள் வறட்சி, மழையெனத் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்யும் நேரத்தில் பெய்யும் மழை விளைச்சலை வீணாக்கி விடுகிறது. இதனால் கடந்த ஆண்டு நாசிக்கில் இரண்டு வெங்காய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். இந்த ஆண்டு மழைக்குப் பயந்தே பெரும்பாலான விவசாயிகள், வெங்காய சாகுபடியைக் கைவிட்டு விட்டார்கள். குறைந்த அளவு பயிரிடப்பட்ட வெங்காயமும் தற்போதைய மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 40 சதவிகிதம் மகசூல் குறைந்துள்ளது எனத் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

விளைச்சல் குறைவைச் சரியாகக் கணித்த வியாபாரிகள், அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதைக் கணித்து முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய அரசு தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, இப்போதுதான் உஷாராகியிருக்கிறது.

இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு இருப்பிலிருந்த 56,000 டன் வெங்காயத்தை விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லியிலிருந்து தினமும் 200 டன் வெங்காயம் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. அது தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதுவரை 15,000 டன் வெங்காயம் எடுக்கப்பட்டு விட்டது. இன்னும் கையிருப்பில் இருக்கும் வெங்காயம் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் பதுக்கல் வெங்காயத்தை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு.

Onion
Onion
வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை உயர்வு, ஏற்றுமதி சலுகைகள் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சில பெரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது.

உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இருவரும் இந்தப் பிரச்னைக்காகப் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை உயர்வு, ஏற்றுமதி சலுகைகள் ரத்து போன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சில பெரும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது. இதன் பிறகும் பதுக்கல் வெங்காயம் வெளியில் கொண்டு வராவிட்டால், வியாபாரிகள் வைத்துக்கொள்ள வேண்டிய இருப்பு குறித்து உச்ச வரம்பு நிர்ணயிக்க அரசு பரிசீலிக்கும் என விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.

இதெல்லாம் பதுக்கல்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை. இதனால் இன்னும் மூன்று தினங்களில் பதுக்கல் வெங்காயம் சந்தைக்கு வரும். அப்போது சற்று விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய வெங்காய பயன்பாடு வீடுகளில் குறைவுதான். உணவகங்களில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், மழை காரணமாகத் தமிழகத்தில் இன்னும் சில நாள்களில் சின்ன வெங்காய விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசு இப்போதே விழித்துக்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

Garlic
Garlic

வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு விலையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் பகுதியில்தான் பூண்டு அதிகளவு விளைகிறது. தற்போது இந்தப் பகுதிகளிலும் விளைச்சல் குறைந்துள்ளது. வெளிமாநில வரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு, தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரசம் வைக்கக்கூட இல்லத்தரசிகள் யோசிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்து விலை உயரத் தயாராக இருக்கிறது தக்காளி. இனி வரும் இரண்டு மூன்று மாதங்களில் பல பொருள்கள் விலை உயர வாய்ப்பிருக்கிறது.

Garlic
Garlic

`தி.மு.க ஆட்சிக் காலத்தில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், எங்கள் ஆட்சியில் அதைவிடக் குறைவாகத் தானே விற்பனையாகிறது' என்ற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. இந்த விஷயத்தில் அரசியல் செய்வதைவிடத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, விலையேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

வெங்காய விலை தாறுமாறு... காரணம் என்ன?