Published:Updated:

பெண் விவசாயிகளுக்கு மானியம், புது கால்நடை மருத்துவமனை; வேளாண் மானிய கோரிக்கை அறிவிப்புகளின் ஹைலைட்ஸ்

சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்
சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின்

வேளாண் மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை கடந்த 14-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சட்டமன்றத்தில் வேளாண் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ``மாநிலங்களை கலந்தாலோசிக்காமலே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் 7-வது மாநிலம் தமிழகம். ஏற்கெனவே கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. இந்தச் சட்டம் மண், விவசாயிகளை காக்கும் வகையில் இல்லை. அதனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது" என்றார். அதன்படி குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் வாங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: இந்த 20 முக்கிய விஷயங்களை கவனிச்சீங்களா?

அதன்பிறகு மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன் விவரங்கள் பின்வருமாறு:

* வேளாண்மை கல்வியின் முக்கியத்துவம் கருதி கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை மாவட்டங்களில் ரூ.30 கோடி செலவில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், வல்லம், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர், தருமபுரி மாவட்டம் அரூர் ஆகிய 4 இடங்களில் ரூ.10 கோடி செலவில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்.

* வேளாண் விளைபொருள்களைச் சேமிக்க திருப்பூர் மாவட்டம் பூளவாடி, புதுக்கோட்டை மாவட்டம் சிதம்பர விடுதி, நாமக்கல் மாவட்டம் எருமாப்பட்டி, ஈரோடு மாவட்டம் பர்கூர் ஆகிய இடங்களில் 250 மெட்ரிக் டன் சேமிப்புத்திறன் கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் ரூ.2 கோடி செலவில் நெய்தல் பூங்கா அமைக்கப்படும்.

* விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்ற ரூ.2.22 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகளுக்கு வர்த்தக மேம்பாட்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாயம்
விவசாயம்

* வேளாண் இயந்திரங்களை கிராம பகுதிகளிலேயே பழுதுபார்க்க ஏதுவாக திருச்சி, குமுளுர் வேளாண் பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு தொடங்கப்படும்.

*பெண் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட ஏதுவாக ஒரு கோடி ரூபாய் செலவில் 100 மகளிருக்கு மானியம் வழங்கப்படும்.

* நிலமில்லாத 4077 விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தோட்டக்கலை தொழில்நுட்பம் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.3.46 கோடியில் வழங்கப்படும்.

*இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் நோக்கில் 25 உழவர் சந்தைகளில் விளைபொருள்களில் உள்ள நஞ்சின் அளவை அறியும் கருவிகள் ரூ.88 லட்சத்தில் அமைக்கப்படும்.

* தருமபுரி, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அங்கக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ. 1.29 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.

*வெற்றிலை சாகுபடியினை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.10,000 பின்னேற்பு மானியமாக 100 ஹெக்டேருக்கு வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

*பூச்சிக் கொல்லி மருந்து உரிமம் வழங்குதல், பூச்சிக் கொல்லி தொடர்பான சட்டங்களை விரைவுபடுத்துவதற்கு பெமிஸ் (PEMIS) என்ற மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும். இனி இணையதளம் மூலமாக பூச்சிக் கொல்லி தொடர்பான விஷயங்கள் செயல்படுத்தப்படும்.

* திருப்பூர் மாவட்டத்தில் புதிய விதைப் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.

* விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறையின் தலைமையிடம் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு மாற்றப்படும்.

* அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 7 கோடி ரூபாய் செலவில் கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.

* கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு ஐந்து செம்மறியாடுகள், 5 வெள்ளாடுகள் வழங்கப்படும்.

* மாநிலம் முழுவதும் 18 தீவன வங்கிகள் 4 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி
தமிழக வேளாண் பட்ஜெட்: `பசுமை விகடன் சொன்னதும் அரசு செய்ததும்!' - நினைவுகூரும் விவசாயிகள்

* நாட்டுக்கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாட்டுக் கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் கோழிக்குஞ்சு பொரிப்பகம், 9 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலி மாவட்டம், அபிசேகப்பட்டியில் உள்ள கால்நடை பண்ணையில் உருவாக்கப்படும்.

* செல்லப்பிராணிகளைக் காக்க சென்னை நந்தனத்தில் செல்லப்பிராணிகள் பன்னோக்கு கால்நடை மருத்துவமனை 7 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

*தருமபுரி மாவட்டத்தில் திருச்சி கருப்பு செம்மறியாடு ஆராய்ச்சி நிறுவனம் 1.80 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

* மாதவரத்தில் சிறுவிடை கோழியின வள மையம், ஒரத்தநாட்டில் பட்டணம் செம்மறியாட்டு வள மையம் ஆகியவை அமைக்கப்படும்.

விவசாயிகளுடன் ஒருநாள்

இதைத்தவிர விவசாயிகளுடன் ஒருநாள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு சென்று விவசாயிகள் கருத்தை கேட்டாக வேண்டும். விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்டு அதை தீர ஆராய்ந்து அதற்கு தீர்வு காண வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு