Published:Updated:

`இனி மலர்க் கண்காட்சிக்கு வெளிமாநில கொள்முதல் கிடையாது!’ - நீலகிரி கொய்மலர் விவசாயிகள் உற்சாகம்

மலர் அலங்காரங்களுக்காகப் பெங்களூரு, இமாசலப்பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து இதுவரை கொய்மலர்கள் கொள்முதல் செய்யப்பட்டுவந்த நிலையில், அதற்கு மாற்றாக நீலகிரியிலேயே சாகுபடிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

carnation flowers
carnation flowers ( Arun.K )

சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்றவை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்றவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடைவிழா நடத்தப்படுகிறது. கோடை விழா சமயங்களில் மலர்க் கண்காட்சியும் பல லட்சம் மலர்களைக்கொண்டு மலர் அலங்காரங்களும் செய்யப்படும்.

carnation flowers
carnation flowers

அதிலும் குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் மலர்க் கண்காட்சி உலக பிரசித்திபெற்றதாகும். 5 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியைக் காண மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிவார்கள். மலர் கண்காட்சிக்கு வருபவர்களை கவரும் வண்ணம் லட்சக்கணக்கான கார்னேசன் மலர்களை கொண்டு பல்வேறு வகையான மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். மலர்க் கண்காட்சி அலங்காரத்துக்காக ஒரு மலருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கொடுத்து சுமார் 1 முதல் 1.5 லட்சம் வரையிலான கார்னேசன் மலர்கள் பெங்களூர் மற்றும் இமாசலப்பிரேசத்தில் இருந்து விலைக்கு வாங்கி அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

இந்த நிலையில் மலர்க் கண்காட்சியின்போது மலர் அலங்காரத்துக்கு வெளி மாநிலங்களிலிருந்து கார்னேசன் மலர்கள் வாங்குவதைத் தவிர்த்து, நீலகிரியில் உள்ள தோட்டக்கலைத்துறை பண்ணைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கார்னேசன் மலர்களை வாங்கி பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியிருந்தார்.

carnation flowers
carnation flowers

இதன் அடிப்படையில் தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையிலான தோட்டக்கலைத்துறையினர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த ஆண்டு கோடை விழா மலர் கண்காட்சியின்போது மேற்கொள்ளப்படும் மலர் அலங்காரத்துக்கான கார்னேசன் மலர்கள் நீலகிரியிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியின்போது மலர் அலங்காரத்துக்காக கார்னேசன் மலர்கள் பெங்களூர், இமாசலப்பிரேதசம் போன்ற இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இவை இங்கு வந்து சேர்வதற்கு ஒரு வாரம் வரை ஆகிவிடுகிறது. இதனால் அவற்றின் தரம் பாதிக்கிறது. தேவை அதிகம் என்பதால் மலருக்கான கட்டணமும் அதிகமாக உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தும்மனட்டி உள்ளிட்ட தோட்டக்கலைத்துறை பண்ணைகளிலும், விவசாயிகள் பசுமைக் குடில் அமைத்தும் இந்த வகை பூக்களை உற்பத்தி செய்து வருகின்றனர். தரமான மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் அடுத்த ஆண்டு மலர்க் கண்காட்சியின்போது இந்த மலர்கள் அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும். நவம்பர் முதல் இதற்கான உற்பத்தி தொடங்கும். இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கார்னேசன் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்" என்றார்.

carnation flowers
carnation flowers

ஏற்கெனவே ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் பசுமைக் குடிலில் பல்வேறு வண்ண கார்னேசன் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் வெளி மாநில கொள்முதலை நிறுத்திய சம்பவம் கொய்மலர் சாகுபடியாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.