Published:Updated:

`நெல் கொள்முதல் ஊழல்கள்; முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!' - மு.க. ஸ்டாலினுக்கு `ஊழல்பேய்'களின் சவால்

வேளாண்மைத்துறைக்கு பட்ஜெட் போட்டு புதிய வரலாறு படைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? இதை ஏற்றுக் கொண்டு, ஒரு பைசா கூட லஞ்சம் தராமல் விவசாயிகள் தங்கள் விளைபொருளை விற்பதற்கான ஏற்பாட்டை முதல்வர் செய்துவிட்டால், அது ராஜராஜ வரலாற்றுச் சாதனையே!

`மாறும் என்கிற சொல்லைத் தவிர, மற்ற அனைத்தும் மாறும்’ என்பார்கள். இந்தச் சொல்லுடன், `ஊழல்' என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் லஞ்ச லாவண்யங்களும், ஊழல் முறைகேடுகளும் மாறப்போவதில்லை என்பதுதான் உண்மையாகிக்கொண்டே இருக்கிறது.

மக்களின் உணவுத் தேவைக்காக, உயிரைக் கொடுத்து உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளிடமே இரக்கமில்லாமல் கொள்ளையடிக்கிறார்கள் எனும்போது... வேறன்ன சொல்ல?!

இத்தகைய கொள்ளைகளில் முதன்மையாக இருப்பது நேரடி நெல்கொள்முதல் நிலையக் கொள்ளைதான். கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் அளவுக்கு நெல் கொள்முதலில் மட்டுமே கொள்ளையடிக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சராவதற்கு முன்பு, டெல்டா மாவட்டங்களுக்கு வருகைதந்த போதெல்லாம், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நிகழும் அநீதிகள் குறித்து, கனத்த இதயத்துடன் கொதித்தெழுந்தார். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால், முறைகேடுகளுக்கு முடிவுரை எழுதப்படும்' என முழங்கினார். ஸ்டாலின் வெற்றிபெற்று முதலமைச்சராக அரியணையில் ஏறியபோது அகமகிழ்ந்தார்கள் விவசாயிகள்.

Tamilnadu Chief minister MK Stalin
Tamilnadu Chief minister MK Stalin

ஆனால், நிலைமையில் கடுகளவுகூட மாற்றம் நிகழவில்லை. சமீபத்திய கோடை மற்றும் முன்பட்ட குறுவை பருவத்தில் விளைவித்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் சந்தித்துவரும் துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால்... `முந்தைய ஆட்சியைவிட மூட்டைக்குப் பத்து ரூபாய் அதிகம் கொடுக்க வேண்டியிருக்கிறது' என்கிற குமுறல்கள் அதிகமாகவே கேட்கின்றன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல் என்பதுதான்... ஊழலின் உச்சம். அதுவும் கொடூரமனம் படைத்தவர்களாகவே இருக்கிறார்கள் அங்கே பணியாற்றும் ஊழியர்களில் பலரும். அதற்குக் காரணம், இந்தக் கொள்ளையில் அடிமட்ட ஊழியர் முதல் மேல்மட்ட அதிகாரிகள்/அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் பங்கு செல்கிறது என்பதுதான்.

லஞ்சப்பணம் பிரிக்கப்படும் விதம்
லஞ்சப்பணம் பிரிக்கப்படும் விதம்

இது இன்று நேற்று பிரச்னையல்ல, மிக மிக நீண்டகால பிரச்னை. இதை எடுத்துச் சொல்லி குமுறும் விவசாயிகளின் பட்டியலும் மிகமிக நீளமாகவே இருக்கிறது.

ஆனால், மொத்தத்தையும் கேட்டு முடிவெடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரமிருக்குமோ... என்னவோ!

``அடுத்த நூறு நாள்தான், அடுத்த இலக்கு'' என்று நூறு நாள் ஆட்சிக்கான பாராட்டுகளை லேசாகக் கடந்து, அடுத்த கட்டப்பணிகளை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் முதல்வரே, உங்கள் முழுநேரத்தையும் திருடிக்கொள்ள எங்களுக்கும் ஆசையில்லை. அதனால், விவசாயிகளின் குமுறல்களை சிறுகுறிப்பாகவே முதலில் சொல்லிவிடுகிறோம். மொத்தக் குமுறல்களும் கீழே பதியப்பட்டுள்ளன. விருப்பப்பட்டால், நேரமிருந்தால்... மொத்தமாகவும் படித்துக் கொள்ளுங்கள்.

முதலில் குமுறல் சிறுகுறிப்புகள் -

தஞ்சாவூர் மாவட்டம், மகிமாலை சிங்காரவேல்:

``என்னோட நெல்லை கொள்முதல் செய்ய 24 நாள்கள் ஆயிடுச்சு. நெல் அவிஞ்சிடாம தினமும் கிளறிவிடுறதுக்கு 20,000 ரூபாய், மழையில நனைஞ்சிடாம மூடிவைக்கப் படுதா வாடகை 7,000 ரூபாய், மூட்டைக்கு 35 ரூபாய் லஞ்சம்னு மொத்தம் 45,200 ரூபாய் அநியாய செலவு.''

கோவிலூர் பக்கிரிசாமி:

``சணல் இல்லை, சாக்கு இல்லை, கோணி ஊசி இல்லை, மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லைனு எதுக்கெடுத்தாலும் காரணம் சொல்லி, எங்க நெல் மூட்டைகளைக் கொள்முதல் பண்ணாம இழுத்தடிக்கிறதே வேலையா வெச்சுருக்காங்க படுபாவிங்க.''

நல்லாடை, மோகன்:

``விவசாயியா இருந்தா, மூட்டைக்கு ரூ. 40, வியாபாரியாக இருந்தால் ரூ. 60 லஞ்சம் கொடுத்தாதான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துல நெல்லை விற்க முடியும்.''

நெல் கொள்முதல் நிலையத்தின் கொள்ளைப் பட்டியல்
நெல் கொள்முதல் நிலையத்தின் கொள்ளைப் பட்டியல்

``40 கிலோ மூட்டைனா... சாக்கு எடை 500 கிராம் சேர்த்து 40.5 கிலோ எடுக்கலாம். ஆனா, 42 கிலோ எடுக்கிறாங்க. எங்க கண்ணுக்கு நேராவே ஒவ்வொரு மூட்டைக்கும் ஒன்றரை கிலோ நெல்லை கொள்ளையடிக்கிறாங்க.

விதைப்பு தேதி, அறுவடை தேதி, நெல் ரகம் இதுக்கான சான்றிதழ் இருந்தாதான் கொள்முதல் நிலையத்துல விற்பனை செய்ய முடியும். இந்தப் புது விதிமுறையால, இனி, இதுக்கும் தனியா லஞ்சம் கொடுத்தாகணும்.’’

பட்டுக்கோட்டை, வீரசேனன்:

``சாக்குக்கு பணம் கொடுக்கணும், பட்டியல் எழுத்தர் (பி.சி) எந்த நேரத்துல கூப்பிடுறாரோ அதுவரை கொள்முதல் நிலையமே கதினு நாள் கணக்குல காத்துக் கிடக்கணும்.''

ஈச்சங்கோட்டை, கார்த்தி:

``நெல்லை சணல் சாக்கில் போடும்போதே 2 கிலோ வரை கீழே சிந்தி விடுவார்கள். அந்த வகையில் ஒரு குவிண்டாலுக்கு 5 கிலோ வரை திருடப்படுகிறது.''

- இப்படி நீள்கின்றன விவசாயக் குமுறல்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைப் பற்றியெல்லாம் நுகர்பொருள் வாணிபக்கழக ஊழிர்கள் மத்தியில் பேசினால், ``நாங்க மட்டுமா எடுத்துக்கிறோம். ஒவ்வொரு மூட்டைக்கும் நாங்க வாங்குற 40 ரூபாயில, நாலு ரூபாகூட எங்களுக்குத் தங்குறதில்ல. உயரதிகாரிகள், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள்னு எல்லாருக்கும் பங்கு போகுது. அப்படியிருக்கறப்ப, எங்கள மட்டும் குற்றம் சொன்னா எப்படி? யாரு என்ன சொன்னாலும் இதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. அப்படி ஒரு சங்கிலி பிணைப்போட இந்தப் பணத்தை நாங்க பரிமாறிக்கிட்டிருக்கோம். முடிஞ்சா முதலமைச்சர் தடுத்து நிறுத்தட்டுமே'' என்று சவால் விடுகிறார்கள் சிரித்தபடியே!

வேளாண்மைத்துறைக்கு பட்ஜெட் போட்டு புதிய வரலாறு படைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? இதை ஏற்றுக்கொண்டு, ஒரு பைசாகூட லஞ்சம் தராமல் விவசாயிகள் தங்கள் விளைபொருளை விற்பதற்கான ஏற்பாட்டை முதல்வர் செய்துவிட்டால், அது ராஜராஜ வரலாற்றுச் சாதனையே!

இனி விவசாயிகளின் குமுறல்களை விலாவாரியாகக் கேட்போம்...

24 நாள்கள், ரூ.20,000 கூடுதல் செலவு, ரூ. 18,200 லஞ்சம்...

விவசாயி சிங்காரவேல்
விவசாயி சிங்காரவேல்

தஞ்சாவூர் மாவட்டம், மகிமாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிங்காரவேல் நெல் விவசாயம் செய்யும் ஒரேகாரணத்துக்காக படாதபாடுபடுகிறார். அவை, அவருடைய வார்த்தைகளிலேயே...

``பத்து ஏக்கர்ல நெல் அறுவடை செஞ்சு, கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு போனேன். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, தாமதப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. வீட்டுக்குத் திருப்பிக் கொண்டு வர முடியாம, கொள்முதல் நிலையத்துலயேதான் போட்டு வெச்சேன். என்னை மாதிரி பல விவசாயிகளோட பல்லாயிரக்கணக்கான டன் நெல் காத்துக்கிடந்துச்சு. நெல்லை மூட்டையிலயே வெச்சிருக்க முடியாது. கீழ கொட்டி கிளறிவிட்டுக்கிட்டே இருந்தாதான் காற்றோட்டம் கிடைக்கும். இல்லைனா அவிஞ்சிப்போயிடும்.

என்னோட நெல்லை கொள்முதல் செய்ய 24 நாள்கள் ஆயிடுச்சு. நெல்லை கிளறிவிடுறதுக்கே 20,000 ரூபாய் செலவு. மழை வந்தா நனைஞ்சு முளைச்சிடாம மூடிவைக்கப் படுதா வாடகை 7,000 ரூபாய். ஒரு மூட்டைக்கு (40 கி) 35 ரூபாய் வீதம் என்னோட 520 மூட்டைக்கு 18,200 ரூபாய் லஞ்சம். இரவு, பகலா பாதுகாக்க செஞ்ச செலவு தனி'' என்று அவர் பெருமூச்சுவிட, கணக்குப் போட்டு பார்த்தோம்... மொத்தம் 45,200 ரூபாய்.

நெல் கொள்முதல் நிலையத்தின் கூடுதல் கொள்ளை
நெல் கொள்முதல் நிலையத்தின் கூடுதல் கொள்ளை

தொடர்ந்த சிங்காரவேல், ``இந்தக் கொடுமை ஒரு பக்கம்னா, கொள்முதல் நிலையம் திறக்க தாமதம் ஆகுறதுனாலயும் விவசாயிகள் நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியதிருக்கு. காலநிலை, வேலையாள்கள், தண்ணீர் கிடைக்குறதைப் பொறுத்துதான் சாகுபடி தொடங்கியாகணும். ஆனால், நெல் அறுவைடை செய்யும்போது, கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுறதே இல்லை. இதுக்கேத்த மாதிரி, 20 - 25 நாள்கள் தாமதமாகத்தான் சாகுபடியைத் தொடங்க வேண்டியிருக்கு. இதனால் விவசாயிகள் இயற்கை இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கு’’ எனக் கவலையுடன் தெரிவித்தார்.

நெல்லை, வறுத்தா எடுத்துக்கிட்டு வர முடியும்!

கோவிலூரைச் சேர்ந்த பக்கிரிசாமி, ``பெரும்பாலான விவசாயிகள்கிட்ட பணம் கிடையாது. கூட்டுறவு வங்கிகள்ல பெரும்பாலான விவசாயிகளுக்குக் கடனும் கிடைக்குறதில்லை. வெளியில அதிக வட்டிக்கு வாங்கிதான் சாகுபடி செய்றோம். ஆனா, விதைப்புல இருந்து அறுவடை வரைக்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.

தண்ணீர் கிடைச்சு விதைப்பு செய்றதே பெரும் பாடா இருக்கு. அரசாங்க டிப்போவுல வாங்கக்கூடிய விதைநெல்லே சமயத்துல முளைக்காம போயிடுது. முளைச்சு வந்தா... வறட்சி, வெள்ளம், பூச்சி, நோய்த் தாக்குதல்களைச் சமாளிச்சு தப்பிச்சாகணும்.

நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்

இதுக்கிடையில நடவு, களையெடுப்புக்கு உரிய நேரத்துல வேலையாள்கள் கிடைச்சாகணும். இதையெல்லாம் தாண்டி விளைஞ்சு வந்தா, அறுவடைக்கு மெஷின் கிடைக்க மாட்டேங்குது. உரிய நேரத்துல அறுவடை செய்யலைனா, பயிர் கீழே சாஞ்சுடுது. மழை பேஞ்ச வயலாக இருந்தா... ஏக்கருக்கு 5,000 ரூபாக்கு மேல அறுவடை செலவாகும்.

இதுமாதிரி இன்னும் நிறைய இடர்ப்பாடுகளோடுதான் நெல்லை உற்பத்தி செஞ்சு, கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுபோறோம். ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்லி, எங்கள அலைக்கழிச்சே கொன்னுடுவாங்க.

ஈரமா இருக்குனு சொல்லியே எங்கள சாக அடிச்சுடுவாங்க. நெல்லை எண்ணெய் சட்டியில போட்டு வறுத்து எடுத்துக்கிட்டா போக முடியும். நெல் உலர்த்த நவீன கருவிகள் நிறைய வந்துடுச்சு. இதையெல்லாம் கொள்முதல் நிலையத்துல ஏற்பாடு செய்ய வேண்டியது அரசாங்கத்தோட கடமை. ஆனா, செய்யுறதில்ல. சணல் இல்லை, சாக்கு இல்லை, மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லைனு எதுக்கெடுத்தாலும் காரணம் சொல்றதே வேலையா போச்சு.

இதையெல்லாம் சகிச்சுக்கிட்டுதான் அங்க நெல்லை விற்பனை செய்றோம். ஆனா, கொள்முதல் செஞ்சி பல வாரங்கள் கழிச்சுதான் எங்களோட வங்கிக் கணக்குக்குக்கு பணம் அனுப்புறாங்க. அதுக்குள்ள கடன்காரங்க தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. வட்டியும் ஏறிட்டே போகும். விவசாயி பொழப்பு எல்லாத்தையும்விட கேவலம்’’ என்கிறார் ஒருவித விரக்தி மனநிலையுடன்.

பக்கிரிசாமி
பக்கிரிசாமி

விவசாயத்தைவிட்டே ஓட வேண்டியதுதான்!

மேலமகானத்தைச் சேர்ந்த விவசாயி நம்பிராஜன், ``ஏக்கருக்கு அதிகபட்சம் 52 மூட்டைதான் (40 கிலோ) விளையும். மூட்டைக்கு 800 ரூபாய் வீதம் 41,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். உழவு, நாற்று, நடவு, களையெடுப்பு, ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, அறுவடை, போக்குவரத்து, கொள்முதல் நிலையங்கள்ல ஏற்படக்கூடிய காலதாமதங்களால் ஏற்படக்கூடிய செலவுகள், லஞ்சம் இதையெல்லாம் கணக்குப் பார்த்தா கிட்டத்தட்ட வரவுக்கும் செலவுக்கும் சரியா இருக்கும். இதே நிலைமை நீடிச்சா, விவசாயத்தைவிட்டே ஓட வேண்டியதுதான்’’ என்கிறார் நொந்துபோனவராக.

விவசாயிக்கு ரூ. 40, வியாபாரிக்கு ரூ.60

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்ளை நடப்பதால்தான், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனாலும், ஊழல் ஒழியவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியை அடுத்த நல்லாடை கிராமத்தைச் சேர்ந்த மோகன், ``விவசாயியாக இருந்தால் மூட்டைக்கு ரூ. 35, வியாபாரியாக இருந்தால் ரூ.60 லஞ்சம் கொடுத்தாதான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துல நெல்லை விற்க முடியும். கடைநிலை ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் இந்தப் பணத்தைப் பங்குபோட்டுக்கிறாங்க. 40 கிலோ மூட்டைனா... சாக்கு எடை 500 கிராம் சேர்த்து 40.5 கிலோ எடுக்கணும். ஆனா, 42 கிலோ எடுக்கிறாங்க. எங்க கண்ணுக்கு நேராவே ஒன்றரை கிலோ நெல்லை கொள்ளையடிக்கிறாங்க.

விவசாயி மோகன்
விவசாயி மோகன்

விவசாயிகளோட வங்கிக் கணக்குல பணத்தை செலுத்தும் முறையை அரசாங்கம் கொண்டு வந்ததும் எங்களுக்குத்தான் வினையா இருக்கு. அதாவது, முன்கூட்டியே கையில இருந்து லஞ்சமா பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கு. பிறகு, வங்கிக் கணக்குல பணம் ஏறிடுச்சானு தெரிஞ்சக்க, வங்கிக்கும் வீட்டுக்கும் அலைய வேண்டியிருக்கு. தலைமை அலுவலகத்துக்குப் போய் அங்க பணம் ஏத்தி விடுற ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து, `அவசரமா பணம் தேவைப்படுது. என் கணக்குல பணம் ஏத்திவிடுங்க'ன்னு சொல்ல வேண்டியிருக்கு.

வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நெல் கொண்டு வருவதைத் தடுக்குறதுக்காக, உண்மையான விவசாயிகள் வி.ஏ.ஓ-கிட்ட சிட்டா அடங்கல் வாங்கச் சொல்றாங்க. இதுக்கு 200 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கு. ஆனா, 1,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து போலி சிட்டா அடங்கல் வாங்கி வியாபரிகளும் கொள்முதல் நிலையத்துலதான் நெல்லை விற்பனை செய்றாங்க.

மயிலாடுதுறை மாவட்டத்துல, `வேளாண்மை உதவி அலுவலரிடம்... நெல் விதைப்பு தேதி, அறுவடை செய்த தேதி, நெல் ரகம் ஆகிய விவரங்கள் அடங்கிய சான்று பெற்றால்தான் விவசாயிகள் தங்களோட நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியும்'னு புதுசா ஒரு விதிமுறை கொண்டு வந்திருக்காங்க. இனி, இதுக்கும் தனியா லஞ்சம் கொடுத்தாகணும்’’ என்றார்.

திருவாரூரில்தான் கூடுதல் லஞ்சம்!

தி.மு.க ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன், `தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இனி நெல் கொள்முதலுக்கு விவசாயிகள் லஞ்சம் தர வேண்டியதில்லை' என இப்பகுதி தி.மு.க-வின் முக்கிய பிரமுகர் அறிவித்தார். ஆனால், இந்த விஷயத்தை அவர் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் சொல்லவில்லை போலிருக்கிறது. மற்ற மாவட்டங்களைவிட கொஞ்சம் கூடுதலாகவே இங்கே லஞ்சம் வாங்குகிறார்கள்.

குவிண்டாலுக்கு 5 கிலோ திருட்டு!

தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி கார்த்தி, ``நெல்லை சணல் சாக்கில் போடும்போதே 2 கிலோ வரை கீழே சிந்தி விடுவார்கள். அந்த வகையில் ஒரு குவிண்டாலுக்கு 5 கிலோ வரை திருடப்படுகிறது. எதிர்த்துக் கேட்டால்... `நெல் ஈரமா இருக்கு. கருக்காயாக (பதர்) இருக்கு' என்று பொய்யான காரணம் சொல்லி, நம்முடைய நெல்லை கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பார்கள். இதற்கு பயந்துகொண்டே, எதிர்த்துக் கேட்பதில்லை'' என்று பரிதாபமாகச் சொல்கிறார்.

விவசாயி கார்த்தி
விவசாயி கார்த்தி

ஒரத்தநாடு சுரேஷ், ``கொள்முதல் நிலையத்துல, பட்டியல் எழுத்தர், இரண்டு உதவியாளர்கள், சுமார் 10 லோடுமேன்கள் வேலைபார்க்குறாங்க. ரொம்ப குறைவான சம்பளம் கொடுக்கறதுதான் எங்களோட பிரச்னையே. மேல் அதிகாரிகள் தொடங்கி பலருக்கும் லஞ்சம் தர வேண்டியிருக்கு. அதனால்தான் நெல் ஈரப்பதம் பார்க்க, நெல்லை குடோன்களுக்கு கொண்டு போக லாரி ஏற்பாடு பண்றதுக்கு, குறித்த நேரத்துல விவசாயிகளோட வங்கிக் கணக்குல பணத்தைப் போடுறதுக்குனு பல விதங்கள்லயும் விவசாயிகள்கிட்ட நாங்க பணம் கேட்கிறோம்னு ஊழியர்கள் சொல்றாங்க’’ என்கிறார்.

வாணிபக் கழகம் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை

பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனன், ``அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சென்ற பிறகு, விவசாயிகள் சந்திக்கும் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல. அறுவடை செய்யும்போதே போய் துண்டு போடணும், சாக்குக்கு பணம் கொடுக்கணூம் பட்டியல் எழுத்தர் (பி.சி) எந்த நேரத்துல கூப்பிடுறாரோ அதுவரை கொள்முதல் நிலையமே கதினு பத்து நாள் வரை காத்துக் கிடக்கணும். இன்னும் பல வலிகளைக் கடந்தே விவசாயி தான் விளைவித்த நெல்லுக்கான பணத்தைப் பெற வேண்டியுள்ளது.

பல கொள்முதல் நிலையங்களில் லோடு மேன்கள் அடியாள்களாகவே செயல்படுகின்றனர். பேராவூரணி பக்கத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.70 லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளனர். விரக்தியடைந்த விவசாயி தன்னுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதன் பிறகு, லோடு மேன் ஒருவர் அந்த விவசாயியை மிரட்டிய கொடுமையும் நடத்தது.

நெல்
நெல்

கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் லஞ்சம்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை செல்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சொல்லப்போனால்... கடந்த ஆட்சியைவிட தற்போதுள்ள தி.மு.க ஆட்சியில் விவசாயிகளிடம் கூடுதலாகப் பணம் லஞ்சமாகப் பெறப்படுகிறது. அரசு இதைக் கவனத்தில் கொண்டு சம்பா பருவத்திலாவது ஊழலை மொத்தமாக ஒழித்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்'’ என்று வேண்டுகோள் வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு ஒரு மூட்டைக்கு 55 முதல் 65 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது. நெல்லை இயந்திரம் மூலம் சலிக்கும்போது பிரிக்கப்படும் பதரை (கருக்கா) விவசாயிகளிடம் திருப்பிக் கொடுப்பதில்லை. சலிக்கும்போது பதருடன் கொஞ்சம் நெல்லும் சேர்ந்தே செல்லும். இதைக் கொள்முதல் நிலையத்தில் இருப்பவர்கள் தனியாகச் சேகரித்து விற்றுப் பணம் பார்க்கின்றனர். தங்களிடம் திருப்பித் தருமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தாலோ, லஞ்சம் தர மறுத்தாலோ, அந்த விவசாயியின் நெல் வாரக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுவிடுகிறது. இப்படிக் கிடப்பில் போடப்படும் நெல்லையும், கொள்முதல் நிலைய வாட்ச்மேன்கள் விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் திருடிவிடுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 99 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டும்கூட, விவசாயிகள் திண்டாடுகின்றனர். வியாபாரிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். ஆலங்குடி அருகே அணவயல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கிறது.

விவசாயி கருப்பையா, ``கடன் வாங்கி 10 ஏக்கர்ல சாகுபடி செஞ்ச நெல்லை இங்க கொண்டு வந்து போட்டு 20 நாளாச்சு. தினம் தினம் ஒரு காரணம் சொல்லித் தட்டிக்கழிச்சாங்க. கடைசியில, நிர்ணயிச்ச அளவுக்கு கொள்முதல் செய்தாச்சு. இதுக்கு மேல எடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க.

கடன் வாங்கினவங்களுக்கு பணம் கொடுக்கணும், அறுவடை மெஷின் செலவு, கூலி வேலை ஆட்களுக்குக் கூலி எல்லாம் நெல் மூட்டைகளை விற்று வரும் பணத்தை வெச்சுதான் கொடுக்கணும். ஆனா, அது எதையுமே செய்ய முடியாம, வீட்டுக்கும் போக முடியாம 20 நாளா இங்கேயே கிடக்குறேன்’’ எனப் புலம்புகிறார்.

விவசாயி சின்னதுரை
விவசாயி சின்னதுரை

திருச்சியைச் சேர்ந்த விவசாயி ம.ப.சின்னதுரை, ``பல இடங்கள்ல திறந்த வெளியிலதான் நெல்லைக் கொள்முதல் செய்றாங்க. ராத்திரி நேரத்துல மழை வந்துச்சுன்னா, அதைப் பாதுகாக்க முடியுறதில்லை. எப்ப கொள்முதல் செய்வாங்கன்னும் விவசாயிகளுக்குத் தெரியாது. குவிண்டாலுக்கு 70 ரூபாய் கூடுதலா கொடுக்கிறோம்னு அரசாங்கம் சொல்லுது, அதை சத்தமில்லாம புடுங்கிக்கிறாங்க கொள்முதல் நிலையங்கள்ல.’’ என்றார்.

`முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே... பட்ஜெட்டில் நீங்கள் என்ன அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், கிள்ளிக்கூடக் கொடுக்காமல் கொள்ளையடிக்கும் அதிகார மற்றும் அரசியல் வர்க்கம்தான் இங்கே அதிகமாக இருக்கிறது. அதையெல்லாம் ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது... ஒழிக்கவும் சொல்லவில்லை. ஆனால், இந்த நேரடி நெல்கொள்முதல் நிலைய கொள்ளைகளை நினைத்த மாத்திரத்தில் ஒழித்துவிட முடியும். ஊழல் ஒழிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகவாவது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்களுக்கு முதலில் முடிவு கட்டுங்கள்... உங்கள் மீது நம்பிக்கை கொள்வதற்கும் அது உதவும்.

நெல் கொள்முதல்

நெல்லின் தரத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக ஒரு விவசாயியிடமிருந்து அதிகபட்சம் 2 கிலோ நெல் மட்டும் மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம் என்பது விதிமுறை (இதை பில்லேஜ் என்கிறார்கள் ஊழியர்கள். விவசாயிகள் கொசுறு என்கிறார்கள்). ஆனால், 15 கிலோ வரை எடுக்கப்படுகிறது.

நெல்லைத் தூற்றிய பிறகு, சணல் சாக்கில் நிரப்புவார்கள். சாக்கின் எடைக்காக ஒரு மூட்டைக்கு (40 கிலோ) கூடுதலாக அரை கிலோ சேர்த்துக் கொள்ளலாம் என்பது என்பது விதிமுறை. ஆனால், ஒரு மூட்டைக்கு 42 கிலோ கட்டாயமாக நிரப்பப்படுகிறது. கூடுதலாக நிரப்பப்பட்ட 1.5 கிலோ நெல்லை, கொள்முதல் நிலைய ஊழியர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள். ஒரு மூட்டைக்கு (40 கிலோ மூட்டை) குறைந்தபட்சம் 35 ரூபாய் கட்டாயமாக லஞ்சம் கொடுக்க வேண்டும். இந்த 35 ரூபாய் என்பது ஊருக்கு ஊர் மாறுபடும்.

ஒரு ஏக்கருக்கான செலவுப் பட்டியல்
ஒரு ஏக்கருக்கான செலவுப் பட்டியல்

கொள்முதல் நிலைய தொழிலாளர்களின் ஊதியம்?

விவசாயிகள் கொண்டுவரும் நெல்லைத் தூற்றி, சாக்கில் நிரப்பி, எடைபோட்டு, மூட்டையைத் தைத்து, அடுக்கி வைத்து, பிறகு லாரியில் ஏற்றுவது வரை ஒரு மூட்டைக்கு 2.60 ரூபாய் வீதம் தொழிலாளர்களுக்கு ஊதியமாக அரசுத் தரப்பில் வழங்கப்படுகிறது. இந்தக் கூலி குறை எனத் தொழிலாளர்கள் ஆதங்கப்படுவதால், விவசாயியிடமிருந்து மூட்டைக்கு லஞ்சமாகப் பெறப்படும் 35 ரூபாயில், 11 முதல் 16 ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு எனப் பங்கு பிரிக்கப்படுகிறது. 2 ரூபாய் ஊர் கோயில் மற்றும் பொதுகாரியத்துக்கு கொடுக்கப்படும் (கொள்முதல் நிலையம் அமைந்துள்ள ஊர்க்காரர்களை சாந்தப்படுத்த). மீதித்தொகை அந்த நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் தொடங்கி, மேல்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்.

கைகொடுக்கும்... தள்ளுபடி, நிவாரணம்!

ஆக, நெல் விவசாயிகளைப் பொறுத்தவரை, பெரிதாக லாபம் இல்லை எனும்போது அதையே தொடர்ந்து ஏன் செய்ய வேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. லாபம் இல்லை யென்றாலும் மொத்தமாகக் கையைக்கடித்துவிடாது என்கிற காரணத்துக்காகவே நெல் விவசாயத்தைத் தொடர்கிறவர்கள்தாம் இங்கே அதிகம். கூடவே, டெல்டா மாதிரியான மண் வாகு கொண்ட பகுதிகளில் வேறு வழியே இல்லாமலும் இதைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.

நேரடி கொள்முதல் நிலையங்களில் இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது, ஏன் நீங்கள் தனியார் வியாபாரிகள்/சந்தைகளில் நெல்லை விற்பனை செய்யக் கூடாது என விவசாயிகள் சிலரிடம் கேட்டோம்.

``அரசு கொள்முதல் நிலையத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,000 ரூபாய் விலை கிடைக்கும். வியாபாரிகள் 1,500 ரூபாய்தான் தருவார்கள். ஒரு குவிண்டாலுக்கு 500 ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படும். ஒரு ஏக்கரில் சுமார் 20 குவிண்டால் விளையும். 500 ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்பட்டால், அதுவே 10,000 ரூபாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமல்ல, வியாபாரிகளிடமிருந்து உடனடியாக எங்கள் கைக்குப் பணம் வராது. பல மாதங்கள் வரை இழுத்தடிப்பார்கள், சிறுகச் சிறுகத்தான் கொடுப்பார்கள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகபட்சமாக சில வாரங்களில் எங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டுவிடுவார்கள்.''

நெல் விவசாயியின் சம்பளக்கணக்கு
நெல் விவசாயியின் சம்பளக்கணக்கு

இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க, அரிசியாக மதிப்புக்கூட்டி விவசாயிகளே விற்பனை செய்யலாமே? என்கிற கேள்விக்கு,

``எல்லோருக்கும் அது சாத்தியப்படாது. இவ்வளவு நெல்லையும் அரிசியாக மாற்றுவது என்பது, ஒரு விவசாயிக்கு சாதாரண காரியமல்ல. அப்படியே மதிப்புக்கூட்டினாலும், இவ்வளவு அரிசியையும் யார் வாங்குவார்கள். 10 ஏக்கரில் விளையும் நெல்லை மதிப்புக்கூட்டினால் 10,000 கிலோ அரிசி கிடைக்கும். இதில் 10 சதவிகிதத்தை நேரடியாக விற்பனை செய்வது என்பதே முடியாத காரியமே. அரிசி விற்பனையில் கடுமையான போட்டி நிலவுகிறது.

அதுமட்டுமல்லாமல் அறுவடை செய்த நெல்லை உடனடியாக அரிசியாக மாற்ற முடியாது. சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அரிசியாக மாற்றிய பிறகு, அதை ஒட்டுமொத்தமாக உடனடியாக விற்பனை செய்துவிடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விற்பனை செய்ய முடியும். இதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் உள்ள நெல் விவசாயிகள் அனைவரும், தங்களது நெல்லை அரிசியாக மதிப்புக்கூட்டினால், இது மலிந்துபோய் வாங்க யாருமே இருக்க மாட்டார்கள், கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

இப்படி மதிப்புக்கூட்டம் வேலையில் கவனத்தைத் திருப்பினால், அடுத்தபோக விவசாயத்தை யார் கவனிப்பது?

விவசாயிகள் கடன் வாங்கிதான் சாகுபடி செலவுகளை செய்கிறார்கள். நெல் அறுவடை செய்த உடனே கடன்காரர்கள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றாட குடும்பச் செலவுகளுக்கு பணம் தேவை. இதனால்தான் நெல் கொள்முதல் நிலையத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது'' என்கிறார்கள் விவசாயிகள்.

நெல் விவசாயியின் நஷ்டக்கணக்கு
நெல் விவசாயியின் நஷ்டக்கணக்கு

``4 - 5 மாதங்கள் உழைப்பையும் பணத்தையும் முதலீடு செய்தாலும் பெரிதாக லாபமில்லை. ஆனாலும், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு அளிக்கக்கூடிய கடன் தள்ளுபடி, நிவாரணம் உள்ளிட்ட சலுகைகளாலும், இயற்கை இடர்ப்பாடுகளால் விளைச்சல் பாதிக்கப்படும்போது கிடைக்கக்கூடிய பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை போன்றவற்றாலும் ஓரளவுக்கு சமாளித்து ஓட்டிக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு கௌரவமான விஷயமாகவும் இருப்பதால், விட்டுவிலக முடிவதில்லை'' என்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் குமுறல்களையும் கள நிலவரத்தையும் சொல்லும் வீடியோ

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் லஞ்ச லாவண்யங்களும், ஊழல் முறைகேடுகளும் மாறப்போவதில்லை என்பதுதான் உண்மையாகிக்கொண்டே இருக்கின்றன. மக்களின் உணவுத் தேவைக்காக, உயிரைக் கொடுத்து உணவுப் பொருள்களை விளைவிக்கும் விவசாயிகளிடமே இரக்கமில்லாமல் கொள்ளையடிக்கிறார்கள் எனும்போது... வேறன்ன சொல்ல?!

இந்தப் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இதற்காக நீங்களும் குரல்கொடுக்கலாம். #முதல்வருக்கு_ஒரு_சவால், #FarmersRequestToStalin என்ற ஹேஷ்டேக்கில் முதல்வரை டேக் செய்து சமூக வலைதளங்களில் நீங்களும் உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள். விவசாயிகளின் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு