ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

என்.பி.வி வைரஸ் பயறுவகைப் பயிர்களின் பாதுகாவலன்!

வெளிநாட்டு விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டு விவசாயம்

வெளிநாட்டு விவசாயம்-16

குறைந்த விலையில், நிறைவான புரதச்சத்தை மக்களுக்கு வழங்குபவை பயறுவகைப் பயிர்கள். அதனால்தான் அவற்றை ‘ஏழைகளின் இறைச்சி’ என்கிறார்கள். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருக்கும் பல்வேறு வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலையில்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எளிதாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பட்டியல் இட்டால், அதில் இறைச்சிக்கு இடமில்லை. இறைச்சி எளிதாகக் கிடைக்கும் உணவுப் பொருள் அல்ல.

காய்கறிகளும் பயறுவகைப் பயிர்களே

நம் உடலுக்குப் புரதச்சத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது. எனவே, உணவில் நாள்தோறும் தேவையான அளவுப் புரதச்சத்தைக் கொடுக்கும் உணவுப் பண்டங் களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், பயறுவகைப் பயிர்களின் தேவை அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. பயறுவகைப் பயிர்களைக் காய்கறிகளாகவும் தானியங்களாகவும் பயன்படுத்துகிறோம். பொதுவாக ‘பயறுவகைப் பயிர்கள்’ என்றவுடன் துவரை, அவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு மற்றும் கொள்ளு என உலர் தானியங்களைத்தான் சொல்வோம். ஆனால், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரை என்று நீளும் பட்டியலில் இருக்கும் காய்கறிகளும் பயறுவகைப் பயிர்களே. அவ்வளவு ஏன்? அகத்திக்கீரைக்கூட பயறுவகைப் பயிர்தான்.

கம்போடியாவில் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட நீள்தட்டைப்பயறு வயல்கள்
கம்போடியாவில் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட நீள்தட்டைப்பயறு வயல்கள்


ஆசிய நாடுகளில் பயறுவகைத் தானியங் களில் பிரதானமானவை துவரையும் பாசிப்பயறும்தான். ஆனால், காய்கறிகளிலும் பயறு வகைகள் இடம் பெறுகின்றன. இந்த பயறு வகைகள் இடத்துக்கு இடம் மாறுபடும். உதாரணத்துக்கு, நமது ஊரில் அவரை, பீன்ஸ் போன்றவை பிரதானக் காய்கறிகள் என்றால், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடு களில் ‘நீள் தட்டை’ (Yard-long bean) என்று அழைக்கப்படும் பொரியல் தட்டைதான் பிரதானமான பயறுவகைக் காய். இது, 15 சென்டிமீட்டர் நீளத்துக்கும் மேலாக வளரும் இந்தப் பயிரைப் பற்றி, மற்றொரு கட்டுரையில் சொல்கிறேன்.

பசி போக்கும் தட்டைப் பயறு

ஜப்பான், கொரியா, சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் காய்கறி சோயா (Vegetable soybean) முக்கியமான உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் பிரதானமான பயறுவகைப் பயிர் என்றால், அது தட்டைப் பயறுதான். கென்யா போன்ற சில நாடுகளில் மட்டும் பீன்ஸ் பயிரை, அதுவும் ஏற்றுமதி வணிகத்துக்காகப் பயிரிடுகிறார்கள். மற்றபடி, அவர்களுக்கு எல்லாமுமாக இருப்பது தட்டைப் பயறுதான். ஆப்பிரிக் காவில் மூன்றரை கோடி ஏக்கருக்கும் மேல் பயிரிடப்படுகிறது என்றால் தட்டைப் பயறுவின் முக்கியத்துவத்தை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவரையில் புள்ளிக்காய்ப்புழுவின் தாக்குதல்
அவரையில் புள்ளிக்காய்ப்புழுவின் தாக்குதல்
நீள்தட்டைப் பயறு காய்களில் புள்ளிக்காய்ப்புழு தாக்குதல்
நீள்தட்டைப் பயறு காய்களில் புள்ளிக்காய்ப்புழு தாக்குதல்
நீள்தட்டைப் பயறு காய்களில் புள்ளிக்காய்ப்புழு தாக்குதல்
நீள்தட்டைப் பயறு காய்களில் புள்ளிக்காய்ப்புழு தாக்குதல்

புள்ளிக் காய்ப்புழு

தட்டைப்பயறு செடி வளர்ந்து கொண்டிருக்கும் போதே, அதன் இலைகளை அறுவடை செய்து கீரையாக உண்ணும் வழக்கம் சில ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கிறது. அதற்குப் பிறகு, காய்களை அறுவடை செய்து, உலர்த்தி, மணிகளைப் பிரித்தெடுத்து தானியங்களாக ஆண்டு முழுவதும் பயன் படுத்திக்கொள்வார்கள். இந்தத் தட்டைப்பயறு சாகுபடியில் பெரிய தொல்லைகள் எதுவுமில்லை என்றாலும், வில்லனாக விளங்குவது ‘புள்ளிக் காய்ப்புழுக்கள்.’ சரியான சமயத்தில் இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால், தானியங்களின் விளைச்சல் முக்கால் பங்கு குறைந்துபோகும் அபாயம் இருக்கிறது. அப்படி நடந்தால், அவர்களுக்கு அந்த ஆண்டுக்குத் தேவையான புரதத்தை வழங்கப் போதுமான தட்டைப்பயறு கிடைக்காது. எனவே, பூச்சிகளைக் கட்டுப் படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

வேறு எந்தப் பூச்சிக்கட்டுப் பாட்டு முறைகளும் இல்லாத காரணத்தால், ஆப்பிரிக்க விவசாயிகள் பூச்சிக்கொல்லி களின் தயவை நாடினார்கள். அதுவும், பருத்தி போன்ற பயிர்களுக்காக உருவாக்கப் பட்ட வீரியமிக்கப் பூச்சிக் கொல்லிகளை, எவ்வித முறையான பரிசோதனைகளும் பரிந்துரைகளுமின்றி, தட்டைப்பயறு உற்பத்திக்கு மடைமாற்றிவிட்டனர். அதன் விளைவு, சுற்றுச்சூழலைக் கெடுத்தது மட்டுமல்லாமல், புள்ளிக் காய்ப்புழுப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டது.

தெற்காசியாவிலும் கடந்த 10 ஆண்டுகளில் புள்ளிக் காய்ப்புழுவின் தாக்குதல் பெருமளவில் அதிகரித்தது. முன்பெல்லாம் துவரையில் பருத்திக்காய்ப்புழுவின் தாக்குதலே அதிகமிருக்கும். ஆனால், அதைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் புள்ளிக்காய்ப்புழுக்களே ஆக்கிரமித்துக்கொண்டன. துவரைக்கே இந்தக் கதி என்றால், அவரையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அதேபோல, தென்கிழக்கு ஆசிய நாடுகளில், நீள்தட்டைக் காய்களிலும் பலத்த சேதம் இந்தப் பூச்சிகளால் உருவாக்கப்படுகிறது. எனவே, வாரமொரு பூச்சிக்கொல்லித் தெளிப்பு அல்லது வாரமிருமுறை என்பதுகூட பலநாடுகளில் சர்வ சாதாரணம்.

வங்கதேசத்தில்கூட அவரையில் இது போன்ற அபரிமிதமான பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க விவசாயிகளுக்குப் புள்ளிக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வு மட்டும் கிடைக்காமலே இருந்தது.

ஆப்பிரிக்காவின் தட்டைப்பயறு வயல்கள்
ஆப்பிரிக்காவின் தட்டைப்பயறு வயல்கள்
புள்ளிக்காய்ப்புழு தாக்குதல்
புள்ளிக்காய்ப்புழு தாக்குதல்
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான புள்ளிக்காய்ப்புழுக்கள்
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான புள்ளிக்காய்ப்புழுக்கள்
புள்ளிக்காய்ப்புழு
புள்ளிக்காய்ப்புழு


என்.பி.வி

இந்தச் சூழலில் 16 ஆண்டுகளுக்கு முன்னர், முதன்முதலாகத் தைவானில் எனது ஆராய்ச்சிப் பணியைத் தொடங்கியபோது, புள்ளிக்காய்ப்புழுவுக்கான தீர்வைத் தேட ஆரம்பித்தேன். அப்போது நான் கண்டு பிடித்ததுதான் ‘என்.பி.வி’ (NPV) என்னும் உயிரியல் பூச்சிக்கொல்லி. அதைப் பற்றிச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

என்.பி.வி என்பது ‘நியூக்ளியர் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ்’ (Nuclear Polyhedrosis Virus) என்பதன் சுருக்கம். இவை வைரஸ் பூச்சிக்கொல்லிகள். அதாவது, டெங்கு, சிக்குன்குனியா, கொரோனா, நிபா என்று பல்வேறு வகையான வைரஸ்கள் மனிதர்களைத் தாக்கி எப்படி நோய்களை உண்டு பண்ணுகின்றனவோ, அதைப் போலவே வெவ்வேறு வகையான வைரஸ்கள், பூச்சிகளையும் தாக்கி நோய்களை உருவாக்குகின்றன.

அந்த நோய்கள் முற்றும்போது, பாதிக்கப் பட்ட பூச்சிகள் மடிந்துவிடும். எனவே, அந்த வைரஸ்களை நாம் நமது நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதாவது, பூச்சிகளுக்கு நோய்களை உருவாக்கி, அவற்றைக் கொல்லும் வெவ்வேறு வகையான நோய்க்கிருமிகளை நாம் உயிரியல் பூச்சிக்கொல்லிகளாக மாற்றிக் கொள்கிறோம்.

இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். இது போன்ற பூச்சிகளுக்கு நோய் உருவாக்கி, அவற்றைக் கொல்லும் நோய்க் கிருமிகள் மனிதர்களுக்குப் பாதுகாப் பானவையா? மனிதர்களுக்கும், மற்ற விலங்குகளுக்கும் அவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதா? இதற்கான விடை - இல்லை என்பதே! பொதுவாகவே, வைரஸ் கிருமிகளுக்குக் குறிப்பிட்ட ஓம்புயிர்கள் (Host) உண்டு. உதாரணத்துக்கு, இப்போது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும்தான் பிரதானமாகத் தாக்குகிறது. வௌவால்களைத் தாக்கும் என்று சொன்னாலும், பெரியளவில் இதரப் பாலூட்டிகளையோ, பறவைகளையோ, மீன் அல்லது பாம்பு போன்ற உயிரினங்களையோ தாக்கவில்லை. அதுபோலத்தான் இந்தப் பூச்சிகளைத் தாக்கிக் கொல்லும் வைரஸ்களும். மேலும், புள்ளிக் காய்ப்புழுவைத் தாக்கும் வைரஸ்கள் பருத்திக் காய்ப்புழுவைத் தாக்காது. பருத்திக் காய்ப்புழுவைத் தாக்கும் வைரஸ்கள் புகையிலைப் புழுக்களைத் தாக்காது. ஆகவே, இந்தப் பூச்சிக்கொல்லி வைரஸ்கள் ஒவ்வொரு பூச்சிக்கும் மிக மிகப் பிரத்யேகமானவை.

தட்டைப்பயறு
தட்டைப்பயறு
பூஞ்சைப் பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலுக்கு இலக்கான புள்ளிக்காய்ப்புழுக்கள்
பூஞ்சைப் பூச்சிக்கொல்லிகளின் தாக்குதலுக்கு இலக்கான புள்ளிக்காய்ப்புழுக்கள்


இந்த என்.பி.வி வைரஸ்களின் புரதங்கள், பூச்சிகள் உண்ணும் உணவுடன் கலந்து, அவற்றின் உணவுப் பாதையை அடைகின்றன. பூச்சிகளின் உணவு மண்டலம் காரத்தன்மை மிகுந்தது. உணவு மண்டலத்தின் மையப் பகுதியை இந்த வைரஸ் புரதங்கள் அடையும்போது, அங்கிருக்கும் காரத் தன்மையால் அவை கட்டவிழ்க்கப்பட்டு வைரஸ் நுண்துகள்களாக மாறுகின்றன. பிறகு, இந்த வைரஸ் நுண்துகள்கள் பூச்சிகளின் உணவு மண்டலம், நரம்பு மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் ரத்த மண்டலம் என அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி அங்கிருக்கும் ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் (Nucleus) பல்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. அடுத்த சில நாள்களில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட புழுக்கள் உணவு உட்கொள்வதை நிறுத்திவிடுகின்றன. மேலும், நோய்வாய்ப்பட்டு, நிறம் மாறி, உருமாறி, இறுதியில் உருக்குலைந்து மடிகின்றன. இப்படி மடியும் புழுக்களின் உடல் பிளந்து, வைரஸ்கள் வெளியாகின்றன. அவற்றைக் கடக்கும் புழுக்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு, அந்த வயலில் இருக்கும் மற்ற புழுக்களுக்கும் நோய் பரவிக்கொண்டே இருக்கும். இப்படியாக, அந்தப் பருவம் முழுவதுமே குறிப்பிட்ட அந்தப் பூச்சியின் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். மனிதன் உட்பட பெரும்பாலான விலங்குகளுக்கும், பறவை களுக்கும் உணவு மண்டலம் அமிலத்தன்மை கொண்டது. எனவே என்.பி.வி போன்ற வைரஸ் புரதங்கள் நமது உணவு மண்டலத்தை அடைந்தாலும், அவை எவ்வித மாற்றங்களுக்கும் உள்ளாவதில்லை. இதுவே, அவை நம்மைத் தாக்கி எவ்வித நோய்களையும் உருவாக்க முடியாததற்கான காரணம்.

ஆப்பிரிக்காவில் வைரஸ் பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்கும் சுய உதவிக்குழு
ஆப்பிரிக்காவில் வைரஸ் பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்கும் சுய உதவிக்குழு


உயிரியல் பூச்சிக்கொல்லி

குறிப்பிட்ட பூச்சிக்கு எதிரான அதிக வீரியத்தையும், மற்ற உயிரினங்களுக்குப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்.பி.வி வைரஸ்கள் கடந்த சில தசாப்தங்களாகவே உயிரியல் பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, நான் புதிதாகக் கண்டுபிடித்த புள்ளிக்காய்ப்புழுவின் என்.பி.வி வைரஸையும் உயிரியல் பூச்சிக்கொல்லியாக மாற்றினோம். பயறுவகைப் பயிர்களில் புள்ளிக்காய்ப்புழுவின் தாக்குதலை அபரிமிதமாகக் குறைத்த இந்த வைரஸ் பூச்சிக்கொல்லியை ஆப்பிரிக்க நாடுகளுக்குள் அறிமுகம் செய்யும் முயற்சிகள் முன்னெடுக் கப்பட்டன.

சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் (International Institute of Tropical Agriculture) ஒத்துழைப்புடன், மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் (Benin) நாட்டுக்குள் முதன்முதலாக இது அறிமுகம் செய்யப்பட்டது. அந்நாட்டின் தடுப்புக்காப்பக (Quarantine) சோதனைகளை முடித்த பிறகு, விவசாயிகளின் வயல்வெளிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. என்.பி.வி பூச்சிக் கொல்லிகளின் சிறப்பம்சம், அவற்றை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசலுடன் சேர்த்துத் தெளிக்கையில், வைரஸ் பூச்சிக்கொல்லிகளின் திறன் பன்மடங்காக அதிகரிக்கிறது.

எனவே, இந்தச் சூட்சுமத்தைப் பெனின் நாட்டு விவசாயிகள் செய்ய ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு, இந்தப் பூச்சிக்கொல்லி மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், விவசாயி களுக்கு முன் இருந்த மிகப்பெரிய சவால் இந்தப் பூச்சிக்கொல்லிகளை யார் உற்பத்தி செய்து தருவார்கள் என்பதுதான்.

கம்போடியாவில் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட நீள்தட்டைப்பயறு வயல்கள்
கம்போடியாவில் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட நீள்தட்டைப்பயறு வயல்கள்


மகளிர் குழு தயாரிக்கும் என்.பி.வி

ஆசிய நாடுகளைப்போல் இல்லாமல், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக, மேற்கு ஆப்பிரிக்காவில் உயிரியல் பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்து, சந்தைப் படுத்தும் தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும், விவசாயிகள் புள்ளிக் காய்ப்புழுவின் என்.பி.வி வைரஸ் பூச்சிக் கொல்லியின் அருமையை உணர்ந்திருப்பதால், அதை விரும்பிக் கேட்கிறார்கள். எனவே, சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், விவசாயிகளே அதைத் தயாரிக்கும் அடிப்படை பயிற்சியை வழங்கியிருக்கிறது. அதன்படி, கிராமங்களில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களும், இளைஞர் குழுக்களும் இந்த வைரஸ் பூச்சிக்கொல்லியைத் தயாரிக்கின்றனர்.

சர்வதேச வெப்பமண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், அப்படித் தயாரிக்கப்படும் வைரஸ் பூச்சிக்கொல்லிகளின் தரத்தைப் பரிசோதித்து, மற்ற விவசாயிகளுக்கும் தரமான பூச்சிக்கொல்லி கிடைக்க வழிவகைச் செய்துள்ளனர். கூடிய விரைவில், இப்போது உதித்துக்கொண்டிருக்கும் தனியார் உயிரியல் பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் இந்தப் பூச்சிக்கொல்லியைப் பிரபலப் படுத்தலாம்.

பூச்சிகளின் மேலாண்மையில் எப்போதுமே ஒரேயொரு பூச்சிக் கட்டுப்பாட்டு முறையை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது அறிவார்ந்த செயல் இல்லை. எனவே, பயறு வகைகளில் புள்ளிக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த, ‘பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்’ (Bacillus thuringiensis), ‘மெட்டாரைசியம்’ (Metarhizium) போன்ற பாக்டீரிய மற்றும் பூஞ்சைகளால் ஆன பூச்சிக்கொல்லிகளும் கண்டு பிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. புள்ளிக்காய்ப்புழு வயல்களில் தென்படுவதற்கு முன்னரே, பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் அசுவினி மற்றும் இலைப்பேன் ஆகியவற்றையும் வேப்ப எண்ணெய், மெட்டாரைசியம் போன்றவை கட்டுப் படுத்துகின்றன.

எனவே, மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படும் வேப்ப எண்ணெய், மெட்டாரைசியம், பேசில்லஸ் துரிஞ்சி யென்சிஸ் மற்றும் புள்ளிக்காய்ப்புழு என்.பி.வி ஆகியவை பயறுவகைப் பயிர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிப்பதுடன், ரசாயன பூச்சிக்கொல்லிகளை முழுமையாகத் தவிர்க்க உதவுகின்றன.

தமிழ்நாட்டிலும் அறிமுகப்படுத்தலாம்

ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமன்றி, கம்போடியா, லாவோஸ் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது பரவலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது புள்ளிக் காய்ப்புழு என்.பி.வி பூச்சிக்கொல்லியைத் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டிருக் கின்றோம். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகமோ, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமோ கேட்டால், இந்த உயிரியல் பூச்சிக்கொல்லியை நம்மூரிலும் அறிமுகப்படுத்த முடியும்.

உயிரியல் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே நம்பிக்கொண்டிருக்காமல், புள்ளிக்காய்ப் புழு மேலாண்மைக்கு இயற்கை எதிரிகளை, குறிப்பாக, ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வையும் மேற்கொண்டோம். புள்ளிக்காய்ப்புழு உருவான இடமான தென்கிழக்கு ஆசியாவில் இந்தத் தேடல் தொடர்ந்தது. முடிவில், இரண்டு அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன. அவற்றைப் பற்றியும், அறுவடைக்குப் பிறகு, சேமிப்பில் இருக்கும் பயறு வகைகளைத் தாக்கி அழிக்கும் வண்டுகளின் சேதத்தை மிக எளிதாகத் தவிர்க்கும் தொழில்நுட்பம் பற்றியும் அடுத்த இதழில் சொல்கிறேன்.

- வளரும்

முனைவர் சீனிவாசன் ராமசாமி
முனைவர் சீனிவாசன் ராமசாமி

கவனத்தில் கொள்ள வேண்டியவை

வைரஸ் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு முன்னர், அவற்றைக் கலக்கும் தண்ணீரின் தரம் மிகவும் முக்கியம். வைரஸ் புரதங்கள், பூச்சிகளின் வயிற்றில் இருக்கும் காரத்தன்மையால் சிதைக்கப்பட்டு, வைரஸ் நுண்துகள்கள் வெளியாகின்றன என்று பார்த்தோம். எனவே, வைரஸ் பூச்சிக்கொல்லிகளை உப்புத்தன்மை அதிகமிருக்கும் நீரில் கலந்துவிட்டால், வைரஸ் நுண்துகள்கள் தெளிப்பதற்கு முன்னரே வெளிப்பட்டுவிடும். அதனால் பூச்சிகளின் உணவு மண்டலத்தை அடை வதற்கு முன்னரே, அவை வீரியத்தை இழந்துவிடும் அபாயம் உள்ளது. பூச்சிக் கொல்லிகளைத் தெளித்துவிட்டு, அதனால் பயன் கிடைக்கவில்லையே என்று தவிக்கக் கூடாது. மேலும், சூரிய ஒளி, வெப்பம் மற்றும் புற ஊதாக்கதிர்கள் ஆகியவையும் வைரஸ் பூச்சிக்கொல்லிகளின் வீரியத்தைக் குறைக்கும் அல்லது முற்றிலும் அழிக்கும். எனவே, அவற்றைக் காலை மற்றும் மாலை நேரங்களில் தெளிப்பது நல்லது.